Jawan - ஜவான் கெட்டப்பில் படம் பார்க்க வந்த ரசிகர்கள்.. என்ன இது புது கூத்தா இருக்கு
மும்பை: Jawan (ஜவான்) ஜவான் படத்தில் ஷாருக்கான் போட்டிருக்கும் கெட்டப்பில் ரசிகர்கள் வந்து படம் பார்த்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
ஜவான் படம் கடந்த ஏழாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்திருக்கும் படம் என்பதாலும்; பாலிவுட்டில் அட்லீயின் முதல் எண்ட்ரி என்பதாலும் பெரும் எதிர்பார்ப்போடு ரசிகர்கள் படம் பார்க்க சென்றனர். படம் பார்த்த ரசிகர்கள் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்தனர். மேலும் ஷாருக்கானை இதுவரை யாரும் காண்பிக்காதபடி அட்லீ காண்பித்திருக்கிறார் என்றும் கூறிவருகின்றனர்.

பாக்ஸ் ஆபிஸ்: ஜவான் படமானது முதல் நாள் வசூலில் சக்கைப்போடு போட்டிருப்பதாகவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது. உலக அளவில் 150 கோடி ரூபாயை தாண்டிவிட்டதாகவும் ஹிந்தியில் மட்டும் 65 கோடி ரூபாய்; மற்ற மொழிகளையும் சேர்த்து 80 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாகவும் கூறப்பட்டது. அதேபோல் தமிழ்நாட்டில் மட்டும் ஐந்து கோடி ரூபாயை படம் வசூலித்ததாகவும் தகவல் வெளியானது.
நெகட்டிவ் விமர்சனம்: படத்தின் முதல் காட்சி முடிந்ததும் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களே எழுந்தன. அதேசமயம் அடுத்தடுத்த காட்சிகளின் முடிவில் படத்துக்கு கொஞ்சம் நெகட்டிவ் விமர்சனங்களும் எழ தொடங்கின. குறிப்பாக அட்லீ பல படங்களை காப்பி அடித்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். ஒரு சீன்கூட ஃப்ரெஷ்ஷாக இல்லை. மணி ஹீஸ்ட், ஆரம்பம், சர்கார், இந்தியன், ரமணா என அத்தனை படங்களையும் இதில் கலந்திருக்கிறார் என ஓபனாகவே கூற ஆரம்பித்தனர்.
வைத்து செய்த ரசிகர்கள்: குறிப்பாக ஜவான் குறித்து இரண்டு ரசிகர்கள் பேசிய விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த ரசிகர்கள் பேசுகையில், "160 ரூபாய் டிக்கெட்டுக்கு எத்தனை படங்கள் பார்க்கலாம். இதில் 23 படங்கள் பார்க்கலாம். 1986ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டுவரை வந்த படங்களின் சீன்கள் இந்தப் படத்துக்குள் இருக்கின்றன. இப்படி எந்த இயக்குநரால் எடுக்க முடியும் சொல்லுங்கள் என தெரிவித்திருந்த வீடியோ ட்ரெண்டானது.
வசூல் வேட்டை: விமர்சனங்கள் ஒருபக்கம் நெகட்டிவ்வாக வந்தாலும் மறுபக்கம் வசூலில் சாதனை படைத்துவருகிறது ஜவான். படம் வெளியாகி ஐந்து நாட்கள் நிறைவடைந்திருக்கும் சூழலில் இதுவரை 520 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதன் காரணமாக விரைவில் ஆயிரம் கோடி ரூபாய் க்ளப்பில் படம் இணைந்துவிடும் என்று உறுதியாகியிருக்கிறது.
ஜவான் கெட்டப்பில் ரசிகர்கள்: இந்நிலையில் தியேட்டர் ஒன்றில் 10க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஜவான் கெட்டப்பில் வந்து படம் பார்த்தனர். ஜவானில் ஷாருக்கான் முகத்தையும், தலையையும் மூடியிருக்கும் கெட்டப்பில் வந்து படம் பார்த்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications