கோச்சடையான் வெளியீடு... திரையரங்குதோறும் திருவிழா கோலம்... ரசிகர்கள் பாலாபிஷேகம்!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் வெளியாகிறது என்றால்... முன்பு தமிழகத்தில்தான் அது திருவிழா மாதிரி இருந்தது. ஆனால் இப்போது உலகம் முழுக்கவே அந்தப் பரபரப்பும் உற்சாகமும் பரவியிருப்பதைப் பார்க்க முடிகிறது.
'தலைவர் படம்... முதல் நாள் முதல் ஷோ பார்க்கணும்... நமக்கெல்லாம் இன்னிக்குதான் தீபாவளி என்பது,' போன்ற வார்த்தைகளை இப்போது தமிழகம் தாண்டி பல இடங்களிலும் ரசிகர்கள் மத்தியில் பார்க்க முடிகிறது.

இன்று ரஜினி படங்களைக் கொண்டாடுவதில், அவரது தீவிர ரசிகர்களாக வாழ்க்கையை ஆரம்பித்த மத்திய தர வயதுக்காரர்களைவிட, பதின்ம வயது இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுவதை உணர முடிகிறது. குறிப்பாக பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் குழுவாகச் சேர்ந்த இளைஞர்கள், நேற்று கோச்சடையான் வெளியீட்டைக் கொண்டாடிய விதம் ரஜினியின் தாக்கம் எத்தகையது என்பதைப் புரிய வைத்தது.
தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கோச்சடையான் வெற்றிக்காக சிறப்பு பிரார்த்தனைகள், யாகங்கள் நடத்தினர் ரஜினி ரசிகர்கள்.

கோச்சடையானுக்காக இமய மலையில் உள்ள பாபா குகைக்கே போய் தியானம் செய்தனர் அவரது 'முரட்டு பக்தர்கள்' என்பது நினைவிருக்கலாம்.
நெல்லை உவரியிலிருந்து ஒரு புனித தீபச்சுடரை சென்னை வரை எடுத்துவந்து நேற்று மாலை உதயம் திரையரங்க வாசலில் லதா ரஜினியிடம் தந்தனர் ரசிகர்கள்.

இன்னும் ஒரு குழு, கோச்சடையான் பசுமைத் தொடர் ஓட்டம் என்ற பெயரில் நான்கு நாட்கள் பல மாவட்டங்களில் ஓடி மக்களுக்கு இயற்கை வளங்களைக் காக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். படத்துக்கும் அது பெரிய விளம்பரமாக அமைந்தது.
இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது மாதிரி, படம் வெளியாகும் நேற்று அத்தனை திரையரங்குகளும் ரஜினியின் கட் அவுட், தோரணங்கள், பேனர்களால் ஜொலித்தன.

எந்தத் திரையரங்குக்குப் போனாலும், அங்கு ஒரு திருவிழா களைகட்டியிருப்பதைப் பார்க்க முடிந்தது.
காசி திரையரங்கில் முதல் நாள் அத்தனை காட்சிகளுக்கும் ரஜினியின் கட் அவுட்டுக்குப் பாலாபிஷேகம், ஆரத்தியுடன், சரவெடிகள் வெடித்து அந்தப் பகுதியையே ஸ்தம்பிக்க வைத்தனர் ரசிகர்கள்.

வட இந்தியாவின் முக்கிய சேனல்கள் அனைத்தும் நேற்று முழுவதும் கோச்சடையான் வெளியீட்டை ரசிகர்கள் கொண்டாடிய விதத்தைப் படம் பிடிப்பதில்தான் மும்முரமாக இருந்தனர்.
இதற்கு முன் வெளியான ரஜினியின் படங்களுக்கு நடந்த கொண்டாட்டங்களைவிட பல மடங்கு அதிக உற்சாகத்துடன் கோச்சடையான் வெளியீட்டை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











