ஏன் கார்த்தி மன்னிப்பு கேட்டீங்க?.. இப்படி பண்ணிட்டீங்களே.. எல்லாம் பணத்துக்கா?.. ரசிகர்கள் கேள்வி
சென்னை: திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு கலந்ததாக வந்த தகவல்தான் கடந்த சில நாட்களாக இந்திய அளவில் ஹாட் டாபிக்காக இருந்துவருகிறது. இப்போது லட்டுவின் புனிதத்தன்மையை மீட்டுவிட்டதாக கூறப்பட்டாலும்; பக்தர்கள் உச்சக்கட்ட அதிர்ச்சியில்தான் இருக்கிறார்கள். இது ஒருபக்கம் இருக்க; மெய்யழகன் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஆந்திரா சென்றிருந்த கார்த்தி லட்டு விஷயம் ஒரு சென்சிட்டிவ் விஷயம் என சொல்ல; அதற்கு பவன் கல்யாண் எதிர்வினையாற்ற கார்த்தி மன்னிப்பு கேட்க என விஷயங்கள் நடந்தன. இந்தச் சூழலில் கார்த்தியை ரசிகர்களும் கண்டித்துவருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் அமைந்திருக்கும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் இந்தியாவில் முக்கியமான இடமாக விளங்கிவருகிறது. கோடிக்கணக்கான பக்தர்கள் வெங்கடாஜலபதியை வணங்கிவருகின்றனர். மேலும் அங்கு வாங்கப்படும் லட்டுவையும் புனிதமான பிரசாதமாக பார்க்கிறார்கள் பக்தர்கள். சூழல் இப்படி இருக்க கடந்த வாரம் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு விஷயத்தை தெரிவித்திருந்தார். அதாவது திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய், பன்றி கொழுப்பு உள்ளிட்டவைகள் இருப்பதாக கூறினார்.

மாட்டு கோமியம்: முதலமைச்சரே இப்படி தெரிவித்ததை அடுத்து நாடு முழுவதும் லட்டு விவகாரம் பெரும் பேசுபொருளானது. புனிதத்தன்மையை திருப்பதி இழந்துவிட்டதாக பக்தர்கள் கூற ஆரம்பித்தார்கள். இந்த விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்த சூழலில், மாட்டு கோமியம் தெளித்து லட்டுவின் புனிதத்தன்மை மீட்கப்பட்டுவிட்டதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் லட்டுவில் மாட்டு கொழுப்பா என்று பக்தர்கள் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் இருக்கிறார்கள்.
கார்த்தி பஞ்சாயத்து: சூழல் இப்படி இருக்க நடிகர் கார்த்தி மெய்யழகன் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஆந்திராவுக்கு சென்றிருந்தார். அப்போது அவரிடம் லட்டு தொடர்பாக ஒரு மீம் காண்பிக்கப்பட்டது. அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த கார்த்தி, 'லட்டு இப்போது சென்சிட்டிவ்வான விஷயம். அதைப் பற்றி பேச வேண்டாம்’ என்று சாதாரணமாக கூறினார். ஆனால் அதனை நடிகரும், ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் சென்சிட்டிவ்வான விஷயமாக மாற்றிவிட்டார்.
பவன் கருத்து: அவர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ’லட்டு பற்றி பலருக்கு சிரிப்பாக இருக்கிறது. சினிமா நிகழ்ச்சியில்கூட லட்டு சென்சிட்டிவ்வான டாபிக் என்று ஒரு ஹீரோ சொல்லியதை பார்த்தேன். நான் அந்த ஹீரோவை மதிக்கிறேன். சனாதன தர்மத்தை பற்றி பொதுவெளியில் பேசுவதற்கு முன்பாக ஒருமுறைக்கு நூறு முறை யோசிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். பவன் கல்யாண் இப்படி பேசியதற்கு தமிழ்நாட்டில் பரவலாக எதிர்ப்பே கிளம்பியது.
கார்த்தி மன்னிப்பு: பலரும் கார்த்திக்கு ஆதரவாகவே நின்றனர். ஆனால் கார்த்தியோ பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார். இதனைப் பார்த்த தமிழ்நாட்டு ரசிகர்கள் கார்த்தி எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் தவறாக எதுவுமே பேசவில்லையே. பவன் பேசியதை கார்த்தி கண்டுகொள்ளாமல் விட்டிருக்கலாம். ஆனால் இப்படி மன்னிப்பு கேட்டு தான் திரையில் மட்டும்தான் சிறுத்தை தரையில் இல்லை என்பதை நிரூபித்துவிட்டாரே என்று பேசும் ரசிகர்கள், ஒருவேளை பவனிடம் மன்னிப்பு கேட்காமலிருந்திருந்தால் தனது படமும், தனது அண்ணன் படமும் ஆந்திராவில் கல்லா கட்டாமல் போய்விடுமோ என்று சிறுத்தை அஞ்சிவிட்டதோ. அப்போ எல்லாமே பணத்துக்காகத்தானா என்று சரமாரியாக கேள்விகளை முன்வைத்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











