23 படங்கள் மிக்ஸ் செய்யப்பட்ட மூவி மிக்சர்தான் ஜவான்..இதுதான் லிஸ்ட்..அட்லீயை வைத்து செய்த ரசிகர்கள்
சென்னை: Jawan Review (ஜவான் விமர்சனம்) 23 படங்களை மிக்ஸ் செய்து மூவி மிக்சராக ஜவானை அட்லீ கொடுத்திருக்கிறார் என ரசிகர்கள் விமர்சனம் செய்திருக்கின்றனர்.
ஜவான் படம் நேற்று வெளியானது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்திருக்கும் படம் என்பதாலும்; பாலிவுட்டில் அட்லீயின் முதல் எண்ட்ரி என்பதாலும் பெரும் எதிர்பார்ப்போடு ரசிகர்கள் படம் பார்க்க சென்றனர். படம் பார்த்த ரசிகர்கள் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்துவருகின்றனர். மேலும் ஷாருக்கானை இதுவரை யாரும் காண்பிக்காதபடி அட்லீ காண்பித்திருக்கிறார் என்றும் கூறிவருகின்றனர்.

பாக்ஸ் ஆபிஸ்: ஜவான் படமானது முதல் நாள் வசூலில் சக்கைப்போடு போட்டிருப்பதாகவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது. உலக அளவில் 150 கோடி ரூபாயை தாண்டிவிட்டதாகவும் ஹிந்தியில் மட்டும் 65 கோடி ரூபாய்; மற்ற மொழிகளையும் சேர்த்து 80 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் தமிழ்நாட்டில் மட்டும் ஐந்து கோடி ரூபாயை படம் வசூலித்திருக்கிறதாம்.
நெகட்டிவ் விமர்சனம்: படத்தின் முதல் காட்சி முடிந்ததும் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களே எழுந்தன. அதேசமயம் அடுத்தடுத்த காட்சிகளின் முடிவில் படத்துக்கு கொஞ்சம் நெகட்டிவ் விமர்சனங்களும் எழ தொடங்கின. குறிப்பாக அட்லீ பல படங்களை காப்பி அடித்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். ஒரு சீன்கூட ஃப்ரெஷ்ஷாக இல்லை. மணி ஹீஸ்ட், ஆரம்பம், சர்கார், இந்தியன், ரமணா என அத்தனை படங்களையும் இதில் கலந்திருக்கிறார் என ஓபனாகவே கூற ஆரம்பித்தனர்.
வைத்து செய்த ரசிகர்கள்: இந்நிலையில் ஜவான் குறித்து இரண்டு ரசிகர்கள் பேசிய விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த ரசிகர்கள் பேசுகையில், "160 ரூபாய் டிக்கெட்டுக்கு எத்தனை படங்கள் பார்க்கலாம். இதில் 23 படங்கள் பார்க்கலாம். 1986ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டுவரை வந்த படங்களின் சீன்கள் இந்தப் படத்துக்குள் இருக்கின்றன. இப்படி எந்த இயக்குநரால் எடுக்க முடியும் சொல்லுங்கள்.
ஜெயிலர்: இதில் பெரிய ட்விஸ்ட் என்னவென்றால் போன வாரம் வந்த ஜெயிலர் படத்தைக்கூட இதில் போட்டிருக்கிறார். அதுதான் அட்லீ. ஜெயிலரில் ஆண்களோடு ரஜினி வருவார். இதில் ஷாருக்கான் பெண்களோடு வருவார் அவ்வளவுதான் வித்தியாசம். அதேபோல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான வெப் சீரிஸையும் பார்த்து இதில் சேர்த்துட்டார் போல.
மூவி மிக்சர்: அதாவது 25ஆவது பிறந்தநாள் என்றால் 25 கிலோ கேக் வெட்டுவது; 25 மெழுகுவர்த்திகளை ஏற்றுவதை செய்வார்கள் அல்லவா. அதுபோல்தான் இதுவும். 2023ஆம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானதால் மொத்தம் 23 படங்களை இந்தப் படத்தில் மிக்ஸ் செய்து அழகான மூவி மிக்சராக அட்லீ கொடுத்திருக்கிறார்.
இதுதான் லிஸ்ட்: நான் தியேட்டருக்குள் உட்கார்ந்து என்ன செய்தேன் தெரியுமா எந்தெந்த படங்களின் காப்பி என்று லிஸ்ட் எடுத்து எழுதிக்கொண்டிருந்தேன். அதன்படி மணி ஹீஸ்ட், பிகில், தெறி, கைதி, கந்தசாமி, சிட்டிசன், ஆரஞ்ச் Vs ப்ளாக், க்ரிஷ், விவேகம், ஆரம்பம் ,என லிஸ்ட் இருக்கிறது. இந்த லிஸ்ட்டில் ரமணா, உன்னை கொடு என்னை தருவேன் படங்களை விட்டுவிட்டேன். இன்னமும் லிஸ்ட் எடுத்திருக்கலாம். ஆனால் கொஞ்சமாவது படத்தை பார்ப்போமே என்று விட்டுவிட்டேன். படத்தில் பார்க்கும்போது ஒரு சீன்கூட புதிய சீனாக இல்லை.
ஒவ்வொரு படத்திலிருந்தும் ஒவ்வொரு சீனை எடுத்திருக்கிறார். மொத்தம் 23 படங்களை கொடுத்திருக்கிறார். இந்த டிக்கெட் ரேட்டுக்கு 23 படங்களை கொடுத்ததற்காக எல்லோரும் படத்தை பார்க்க வந்து அட்லீயை உற்சாகப்படுத்துங்கள்" என்றனர். இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவிவருகிறது.


Click it and Unblock the Notifications











