என்ன கொடுமை இது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஒருவர் ஒருவராக இறக்குறாங்க.. கலங்கும் ரசிகர்கள்
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது சோகத்தை அளிப்பதாக ரசிகர்கள் கலக்கத்துடன் போட்டுள்ள பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வந்த நடிகர்கள் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று நடிகர் வெங்கட் சுபா உயிரிழந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களும் சக நடிகர்களும் துயரத்தின் உச்சிக்கே சென்றுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் நடித்து வரும் நடிகர்கள் அனைவரும் தமிழ் நாட்டு சீரியல் ரசிகர்களின் சொந்தங்களாகவே பார்க்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தொடர்ந்து அந்த சீரியலில் நடித்து வந்த நடிகர்களின் மரண செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.

விஜே சித்ரா மரணம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகத்தையும் சின்னத்திரை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது மரணம் தற்கொலையா? கொலையா என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

நெல்லை சிவாவும் இல்லை
கெணத்தை காணோம் காமெடி மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்ற காமெடி நடிகர் நெல்லை சிவாவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பாண்டியன் கதாபாத்திரன் நெருங்கிய நண்பராக குமரேசன் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மாரடைப்பு காரணமாக சமீபத்தில் அவர் உயிரிழந்தது மேலும் ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியது.

வெங்கட் சுபா மரணம்
இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வந்த இன்னொரு பிரபல நடிகரான வெங்கட் சுபாவும் இன்று கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தது, அந்த சீரியலில் நடித்து வரும் சக நடிகர்களுக்கு பேரிழப்பாக மாறியுள்ளது. ஜனார்தனன் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த வெங்கட் சுபா கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆக்ஸிஜன் அளவு குறைந்ததன் காரணமாக காலமானார்.

அதிர்ச்சியில் ரசிகர்கள்
என்ன கொடுமை இது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிச்சிட்டு இருந்த ஒவ்வொரு ஆளா இறக்குறாங்களே என பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், கொரோனா இரண்டாம் அலையில் தொடர்ந்து தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர்களின் மரணங்கள் பலருக்கும் வேதனையளித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











