அரண்மனை 4: கவர்ச்சியை தவிர்த்த சுந்தர் சி.. இந்த கண்றாவி சீன்களை ஏன் வைத்தார்? உவ்வே
சென்னை: ராகவா லாரன்ஸ் காஞ்சனா சீரிஸ் படங்களை பேய் காமெடி மற்றும் கவர்ச்சியை வைத்து கொடுத்து வந்தார். அதே பாணியில் அரண்மனை சீரிஸ் படங்களை சுந்தர் சி கொடுத்து வருகிறார். சுந்தர் சி படங்களில் பொதுவாகவே கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. ஹீரோயின்களை எந்த அளவுக்கு அழகாக காட்ட முடியுமோ அந்த அளவுக்கு காட்ட சில எல்லைகளையும் மீறி விடுவார்.
அரண்மனை முதல் பாகத்தில் ஹன்சிகா மற்றும் ஆண்ட்ரியா நடித்திருந்தனர். அவர்களுடன் கவர்ச்சிக்காக ராய் லக்ஷ்மியை களமிறக்கினார். ராய் லட்சுமி உடன் சந்தானம் நடித்த காமெடி காட்சிகள் காம நெடி காட்சிகளாகவே இருந்திருக்கும்.

அதே போல அரண்மனை இரண்டாம் பாகத்தில் திரிஷா, ஹன்சிகா மற்றும் பூனம் பஜ்வாவை நடிக்க வைத்திருப்பார். சூரி மற்றும் பூனம் பஜ்வா காட்சிகளும் காமெடியை தாண்டிய கண்றாவி காட்சிகளாகவே இருக்கும். அரண்மனை 3 படத்தில் ஹீரோயின் ராஷி கன்னாவையே கிளாமரின் உச்சமாகவே காட்டியிருப்பார்.

அடக்கி வாசித்த தமன்னா, ராஷி கன்னா: இந்நிலையில், அரண்மனை 4 படத்தில் தமன்னா மற்றும் ராஷி கன்னாவை எப்படி காட்டப் போகிறார் சுந்தர் சி என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இருவரையும் ஹோம்லி கெட்டப்பிலேயே நடிக்க வைத்திருந்தார். இது ரொம்ப நல்ல விஷயமாக இருக்கிறது என குடும்பத்துடன் ரசிகர்கள் அரண்மனை 4 படத்தை பார்த்து வருகின்றனர். கடைசியாக படம் முடிந்த பின்னர் தான் தமன்னா மற்றும் ராஷி கன்னா தாறுமாறாக கவர்ச்சி உடையை அணிந்து ஆடும் "அச்சச்சோ" பாடல் இடம்பெறுகிறது. ஆனால், படத்தில் தேவையில்லாமல் சுந்தர் சி பார்த்த ஒரு விஷயம் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்து வருகிறது.

கோவை சரளா - சேஷு போர்ஷன்: யோகி பாபு, விடிவி கணேஷ் வித்தியாசமான கெட்டப்பை போட்டுக் கொண்டு இந்த படத்தில் நடித்தாலும் அவர்களின் காமெடி காட்சிகள் பெரிதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. அவர்களைத் தாண்டி கோவை சரளா மற்றும் சமீபத்தில் மறைந்த லொள்ளு சபா சேஷுவை வைத்து சுந்தர் சி செய்துள்ள போர்ஷன் தான் தற்போது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
காமெடி இல்லை காம நெடி: தங்கை தமன்னா குடும்பத்துக்கு என்ன ஆனது என்பதை விசாரிக்க தனது அத்தை கோவை சரளாவுடன் அரண்மனைக்கு வருகிறார் சுந்தர் சி. கோவை சரளாவுக்கு கட்டை தலையில் பட்டு அடிபட்ட நிலையில், கண்ணடிக்கும் வியாதி தொற்றிக் கொள்கிறது. இவர் கண் அடிப்பதை பார்த்து லொள்ளு சபா சேஷு தன்னை கோவை சரளா காதலிப்பதை போல நினைத்துக்கொண்டு காதல் வசனங்களை பேசித் திரிவது எல்லாம் தியேட்டரில் உட்கார்ந்து பார்க்க முடியாத கொடுமையான கிரிஞ்சாக உள்ளது.

வில்லு படம் போல கரண்ட் ஷாக் சீன்: வில்லு படத்தில் விஜய்க்கும் நயன்தாராவுக்கும் இடையே ஒரு நம்ப முடியாத கரண்ட் ஷாக் சீனை ஆபாசத்தின் உச்சமாகவே பிரபுதேவா வைத்திருப்பார். அதே போல ஒரு காட்சி சேஷுவுக்கும் கோவை சரளாவுக்கும் சுந்தர் சி வைத்திருக்கிறார். அந்த காட்சியில் சேஷு மீது கோவை சரளா ஏறி உட்காருவது எல்லாம் குழந்தைகளுடன் நிச்சயம் பார்க்க முடியவில்லை என கடுமையாக பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்த சீன் முடிந்ததுமே கோவை சரளா உடல் அமைப்பை பற்றி சேசு ஆபாசமாக கமெண்ட் அடிக்கும் சீனும் வைக்கப்பட்டுள்ளது. யாரையுமே வக்கிரமாக பார்க்க கூடாது. அதிலும் வயதில் மூத்தவர்களை மரியாதையுடன் பார்க்க குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டுமே தவிர இப்படி அல்ல. இப்படியான ஆபாசமான காமெடி காட்சிகளை வைப்பதை சுந்தர் சி எப்போது நிறுத்தப் போகிறார் என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications