தக் லைஃப் கமலை காப்பாற்ற களத்தில் குதித்த லால் சலாம் ரஜினிகாந்த்?.. இப்படி வெச்சு செய்றாங்களே
சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் தக் லைஃப் திரைப்படம் நேற்று வெளியானது. மணிரத்னத்தின் இயக்கம் என்பதாலும், மீண்டும் அவர்கள் இரண்டு பேரும் பல வருடங்கள் கழித்து இணைந்திருப்பதாலும் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை வைத்துக்கொண்டு படம் பார்க்க சென்றார்கள் ரசிகர்கள். ஆனால் அவர்களுக்கு படம் திருப்தியை கொடுக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில் ரஜினிகாந்த்தையும் வைத்து செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் நெட்டிசன்கள்.
மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணி என்றாலே தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இத்தனைக்கும் அவர்கள் சேர்ந்து படம் செய்து கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. அவர்கள் இணைந்து கொடுத்த நாயகன் படம்தான் அக்கூட்டணி மீதான எதிர்பார்ப்பு எகிறியதற்கு காரணம். இன்றுவரை அந்தப் படத்தை கொண்டாடாதவர்கள் இந்திய திரையுலகில் இருப்பது சொற்பம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தக் லைஃப் கூட்டணி: இப்படிப்பட்ட நிலைமையில்தான் அவர்கள் இரண்டு பேரும் தக் லைஃப் படத்துக்காக மீண்டும் சேர்ந்தார்கள். இதில் சிம்பு, திரிஷா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். நாயகன் போன்றொரு மேஜிக்கான படத்தை கண்டிப்பாக இதில் நமக்கு கொடுப்பார்கள் என்றுதான் திரைத்துறையினரும் ரசிகர்களும் தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தார்கள். அதற்கேற்றபடிதான் படத்தின் அறிவிப்பு வீடியோ, ட்ரெய்லர் என அத்தனையும் அமைந்தது.

நேற்று ரிலீஸானது படம்: படமானது நேற்று திரையரங்குகளில் வெளியானது. கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் மட்டும் அந்தப் படம் ரிலீஸாகவில்லை. அந்த மாநிலம் தவிர்த்து வெளியான இடங்களில் எல்லாம் நாயகன் அனுபவத்தை எதிர்பார்த்துதான் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு சென்றார்கள். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றத்தைத்தான் அந்தக் கூட்டணி கொடுத்தது.
என்ன மணி சார் இதெல்லாம்?: படத்தின் ட்ரெய்லர் உணர்த்தியதோ இது பக்காவான கேங்ஸ்டர் கதையாக இருக்கும் என்பதுதான். ஆனால் படத்தில் இருப்பதோ திரிஷாவுக்காக சிம்புவும், கமலும் அடித்துக்கொள்கிறார்கள். இதெல்லாம் என்ன மாதிரியான கதை என்று ஆளாளுக்கு கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள். வசூலிலும் முதல் நாளில் பெரிய இம்பேக்ட்டை படமானது உருவாக்கவில்லை. இதனால் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் அடி வாங்கியிருப்பது உறுதியாகியிருப்பது கவனிக்கத்தக்கது.
கதை கமலுடையது?: இந்தக் கதை மணிரத்னத்துடையது கிடையாது; கமல்ஹாசன் எழுதியதுதான். இதையும் கையிலெடுத்திருக்கும் நெட்டிசன்கள், 'கமலின் ஐ பேடில் கிட்டத்தட்ட 1000 ஸ்க்ரிப்ட்டுகள் இருக்கின்றன' என்று பட ப்ரோமோஷனில் பேசப்பட்டதை குறிப்பிட்டு அந்த ஆயிரம் கதைகளில் ஒன்றுதான் இந்தக் கதையா. அப்போது மீதமிருக்கும் 999 கதைகள் எப்படி இருக்குமோ கமலையும் வறுத்தெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
ரஜினியையும் விடாத ரசிகர்கள்: இந்தியன் 2வை தொடர்ந்து தக் லைஃபாலும் கமல் ட்ரோலுக்கு உள்ளாகியிருக்கிறார். இந்நிலையில் ரஜினிகாந்த்தையும் கிண்டல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் நெட்டிசன்கள். அதாவது, ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்த லால் சலாம் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ஸ்ட்ரீமாக ஆரம்பித்திருக்கிறது. அந்தப் படம் படுதோல்வியையும், செம ட்ரோலையும் சந்தித்தது. இப்போது தக் லைஃப் படத்தால் கமலை எல்லோரும் கிண்டலடிக்கிறார்கள். அதனை பார்த்து பொறுக்க முடியாத ரஜினிகாந்த், லால் சலாமை ஓடிடியில் ரிலீஸ் செய்து கமலை காப்பாற்ற பார்க்கிறார்; இதுதான் நட்பு என்று ஜாலியாக கமெண்ட்ஸ் செய்து ட்ரோல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











