அந்த ஒரே காரணத்துக்காக விஜய், அஜித்துடன் நடிக்க மறுத்த சாய் பல்லவி... அதிர்ச்சியான ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான 'உங்களில் யார் பிரபுதேவா' என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சாய் பல்லவி.
தொலைக்காட்சி கேம் ஷோக்கள் மூலம் பிரபலமான சாய் பல்லவி, மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் மலர் டீச்சராக அறிமுகமானார்.
தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியான சாய் பல்லவி, தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், விஜய், அஜித் ஆகியோருடன் சாய் பல்லவி நடிக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலர் டீச்சர் சாய் பல்லவி
விஜய் டிவியின் 'உங்களில் யார் பிரபுதேவா', 'ஜோடி நம்பர் 1' நிகழ்ச்சிகள் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தவர் சாய் பல்லவி. சிறந்த டான்ஸரான சாய் பல்லவி, பிரமேம் படத்தில் மலர் டீச்சராக அறிமுகமானார். இந்த கேரக்டர் அவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம்
முதல் படத்திலேயே சாய் பல்லவிக்கு பெரிய வரவேற்பு கிடைத்ததால், அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு திரையுலகிலும் அடியெடுத்து வைத்தார். தமிழில் தனுஷுடன் மாரி 2, சூர்யாவுடன் என்ஜிகே, கார்கி படங்களில் நடித்த சாய் பல்லவி, தற்போது சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கம் தெலுங்கிலும் ஃபிடா, லவ் ஸ்டோரி, ஷியாம் ஷிங்கா ராய் படங்களில் தனது க்யூட்டான நடிப்பால் ஸ்கோர் செய்திருந்தார்.

விஜய்க்கு ஜோடி - நோ சொன்ன சாய் பல்லவி
சினிமாவில் பிஸியாக இருந்த போதே ஜார்ஜியா சென்று மருத்துவம் படித்த அவர், தனது பாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு விஜய், அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதனை மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் வெளியான விஜய்யின் வாரிசு படத்தில் ஹீரோயினாக நடிக்க, முதலில் சாய் பல்லவியிடம் தான் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் தனது கேரக்டருக்கு முக்கியம் இல்லாததால் அதில் நடிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

அஜித்துடனும் ஜோடி சேர மறுப்பு
சாய் பல்லவி நோ சொன்ன பிறகே, வாரிசு பட நாயகி வாய்ப்பு ராஷ்மிகா மந்தனாவுக்கு சென்றதாம். இந்தப் படம் வெளியான பின்பு, ராஷ்மிகா மந்தனாவும் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லையென்றே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. விஜய்க்காக மட்டுமே வாரிசு படத்தில் நடித்ததாகக் கூறியிருந்தார். இந்நிலையில், அஜித்தின் வலிமை படத்திற்கும் முதலில் சாய் பல்லவியிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். ஆனால், அந்தப் படத்திலும் சாய் பல்லவி நடிக்க மறுத்துவிட்டாராம்.

ஹோம்லி லுக் ஒன்லி
சாய் பல்லவி எப்போதுமே ஹோம்லியான கேரக்டரில் நடிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார். அதேநேரம் அவரது கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என உறுதியாக உள்ளார். அதனால் தான் வலிமை படத்திற்கும் நோ சொல்லிவிட்டாராம். வாரிசு, வலிமை இரண்டு படங்களிலும் க்ளாமர் காட்சிகள் கிடையாது என்றாலும், நாயகிக்கு முக்கியத்துவம் இல்லாத படங்கள் என்பதே சாய் பல்லவி நடிக்காமல் போனதற்கு காரணமாம். விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்கா மறுப்பு தெரிவித்து சாய் பல்லவி நோ சொன்ன சம்பவம், ரசிகர்களிடம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











