பேச அழைத்தது தமிழக அரசு: பெப்சி - தயாரிப்பாளர் மோதல் இன்றுடன் முடிகிறது?
பெப்ஸி தொழிலாளர் அமைப்புக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே எழுந்துள்ள மோதல் இன்று முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று தெரிகிறது. அதற்கான முயற்சியில் மாநில தொழிலாளர் நலத்துறையும் இறங்கியுள்ளதால், தயாரிப்பாளர்கள் இறங்கிவரும் சூழல் உருவாகியுள்ளது.
மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பெப்ஸி தொழிலாளர்களுக்கான சம்பளம் உயர்த்தப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தோடு 8-வது ஊதிய ஒப்பந்தம் முடிந்த நிலையில், புதிய ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பெப்ஸி - தயாரிப்பாளர் சங்கங்களின் இடையேயான சம்பளப் பிரச்னையில் தீர்வு ஏற்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரு சங்கங்களும் கோரிக்கை வைத்துள்ளன.
இந்நிலையில் பெப்ஸி அமைப்பின் சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. பெப்ஸி அமைப்பின் 24 சங்கங்களின் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
சென்னை வடபழனியில் உள்ள திரை இசைக் கலைஞர்களின் சங்க வளாகத்தில் காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. பெப்ஸி அமைப்பின் தலைவர் எம்.ஏ.ராமதுரை, பொதுச்செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் அங்கமுத்து சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பெப்ஸி அமைப்பின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இயக்குநர்கள் அமீர், எஸ்.பி.ஜனநாதன், எஸ்.எஸ்.ஸ்டேன்லி, பெப்ஸியின் முன்னாள் தலைவர் பெப்ஸி விஜயன் உள்ளிட்டோரும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.
உண்ணாவிரதத்தில் பேசிய பலர், திரைப்படத் தொழிலாளர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய சம்பளத்தைத்தான் கேட்கிறோம். அதை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.
இந்த உண்ணாவிரதத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்களைக் காப்பாற்றும் வகையில் தமிழக அரசு இப்பிரச்னையில் தலையிட வேண்டும். தொழிலாளர்களின் நன்மைக்காக தயாரிப்பாளர்கள் சங்கம் உடனடியாக ஊதியத்தைப் பேசி முடிக்க வேண்டும்.
இப் பிரச்சினையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நடிகர் சங்கத்துக்கு நன்றி. தனி குழு அமைத்து பேசி முடிக்க முடிவெடுத்துள்ள இயக்குநர் சங்கத்துக்கு நன்றி என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் உண்ணாவிரதக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பேச்சுவார்த்தைக்கு அழைத்தது தமிழக அரசு
இதற்கிடையே, தொழிலாளர் நலன் கருதி, இப்பிரச்சினையில் பேசித் தீர்வு காண பெப்சி நிர்வாகிகள் மற்றும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து பிரதிநிதிகளை அழைத்துள்ளது தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை.
இன்றே இப்பிரச்சினைக்கு இறுதி முடிவு காண வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா உத்தவிட்டுள்ளதால், அநேகமாக பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்படும் என தொழிலாளர் தரப்பு நம்புகிறது.
நேற்றைய உண்ணாவிரதப் போராட்டத்தின்போது, மேடையில் முதல்வர் ஜெயலலிதா படத்துடன் பிரமாண்டமாக காணப்பட்ட வாசகம்: 'தாயே காப்பாற்று'!


Click it and Unblock the Notifications











