தயாரிப்பாளர்களைக் கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதம் - சினிமா தொழிலாளர்கள்

சினிமா தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், தயாரிப்பாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே மீண்டும் பிரச்சினை உருவாகியிருக்கிறது.
கே.ஈ.ஞானவேல் தயாரிக்கும் 'அலெக்ஸ் பாண்டியன்' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதை அடுத்து, இரு தரப்பினர் இடையே பிரச்சினை வளர்ந்து இருக்கிறது.
சினிமா தொழிலாளர்களின் போக்கை கண்டித்து, நாளை (திங்கட்கிழமை) ஒருநாள் மட்டும் அடையாள வேலை நிறுத்தம் செய்ய தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். நாளை, படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
'பெப்சி' அறிக்கை
இந்த நிலையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) சார்பில் நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், "கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வேலை நிறுத்தத்தை நடைமுறைப்படுத்தி தொழிலாளர்கள் வாழ்விலும், படம் எடுத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் வாழ்விலும் கஷ்டத்தையும், நஷ்டத்தையும் ஏற்படுத்தியது, தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளில் சிலரே.
அவர்களே ஆரம்பம் முதல் இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பிரச்சினை செய்து கொண்டு ஊதியக்குழு தலைவராக இருக்கும் அமீரை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்கள்.
ஞானவேலுக்கு ஒத்துழைப்பு இல்லை
இந்த பிரச்சினையில், தொடர்ந்து எங்களை கேவலப்படுத்திய-மன உளைச்சலை ஏற்படுத்திய ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துடன், பெப்சியை சேர்ந்த 23 சங்கங்களும் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்தே ஆந்திராவில் நடைபெற்ற ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் திரைப்படத்துக்கு ஒத்துழைப்பு மறுக்கப்பட்டது.
அமீருக்கு தொடர்பில்லை
மற்றபடி, இந்த பிரச்சினையில் ஊதியக்குழு தலைவர் அமீருக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
பல தயாரிப்பாளர்கள் படப்பிடிப்புக்கு சென்ற நிலையில், மீண்டும் அதை கெடுக்கும் நோக்குடனும், பல கோடிகள் நஷ்டத்தை ஏற்படுத்தும் நோக்குடனும் அறிவிக்கப்பட்டிருக்கும் வேலைநிறுத்தத்தை பெப்சி கண்டிக்கிறது.
காலவரையற்ற உண்ணாவிரதம்
இத்தனை நிகழ்வுகள் நடந்த பிறகும், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சில நிர்வாகிகள் தங்களை மாற்றிக்கொள்ளாவிட்டால், பெப்சியை சேர்ந்த இருபத்தி மூவாயிரம் தொழிலாளர்களும் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்வதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து நடந்த உண்மைகளை தெரிவிக்கவும் தயாராக இருக்கிறோம்.''
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications











