பெப்சி Vs தயாரிப்பாளர்கள்: 'ரகளைபுரமாக' மாறிய கோடம்பாக்கம்!

பெப்சி தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக தொழிலாளர்களுக்கும்,தயாரிப்பாளர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு தரப்பினரையும் அழைத்து தொழிலாளர் நல ஆணையம் பேச்சுவார்த்தை நடத்தியது.
5 சங்கங்களுக்கான சம்பள உயர்வு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், இருதரப்பிலும் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது.
வேலை நிறுத்தம்
அதைத்தொடர்ந்து சினிமா தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தார்கள். இன்று (சனிக்கிழமை) முதல் படப்பிடிப்பு, எடிட்டிங், டப்பிங் உள்பட எந்த பணிகளுக்கும் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என்று 'பெப்சி' சார்பில் அறிவிக்கப்பட்டது.
"வேலை நிறுத்தம் செய்ய நாங்கள் தயாராக இல்லை. இன்று முதல் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறும்'' என்று தயாரிப்பாளர்கள் அறிவித்தார்கள். "எங்களுடன் இணைந்து பணிபுரிய விரும்பும் தொழிலாளர்களை வைத்து தனி அமைப்பு உருவாக்கி படப்பிடிப்பு நடத்துவோம்'' என்று அவர்கள் கூறியுள்ளனர்.
டி.ஜி.பி.யுடன் சந்திப்பு
இந்த நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத்தலைவர் டி.சிவா, செயலாளர்கள் கே.முரளிதரன், பி.எல்.தேனப்பன் மற்றும் பட அதிபர்கள் ஞானவேல்ராஜா, சுபாஷ் சந்திர போஸ், பஞ்சு சுப்பு, சித்ரா லட்சுமணன் ஆகியோர் போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜத்தை நேற்று சந்தித்து ஒரு மனு கொடுத்தார்கள்.
"ஏப்ரல் 7 முதல் படப்பிடிப்பு நடத்துவதற்கு எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்'' என்று அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது. போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜத்தை சந்தித்து விட்டு வந்த தயாரிப்பாளர்கள், "இன்று போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடைபெறும்'' என்றனர்.
'பெப்சி' முடிவு
இதுபற்றி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) பொதுச்செயலாளர் ஜி.சிவா கூறுகையில், "திட்டமிட்டபடி, எங்கள் வேலை நிறுத்தம் சனிக்கிழமை முதல் நடைபெறும். வெளியூர் படப்பிடிப்புகளுக்கு சென்றிருந்த 'பெப்சி' தொழிலாளர்கள், சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் அரசு முடிவுக்காக காத்திருக்கிறோம். இந்த நிலைக்குக் காரணம் தயாரிப்பாளர்கள்தான். அவர்களின் ஈகோதான். நாங்கள் எவ்வளவோ விட்டுக்கொடுத்துப் பார்த்துவிட்டோம். அடுத்த கட்ட போராட்டம் பற்றி விரைவில் தெரிவிப்போம்,'' என்றார்.
ரகளைபுரம்
நடிகரும், தயாரிப்பாளருமான கருணாஸ் தனது சொந்தப் படத்தின் படப்பிடிப்பை இன்று (சனிக்கிழமை) ரெட்ஹில்ஸ் அருகே நடத்த திட்டமிட்டுள்ளார்.
"பெப்சி வேலை நிறுத்தத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனக்கு தேவைப்படும் தொழிலாளர்களை வைத்து, படப்பிடிப்பை நடத்திக் காட்டுவேன்'' என்று கூறி படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார் அவர்.
இதுபோல் மேலும் சிலதயாரிப்பாளர்களும் போலீஸ் பாதுகாப்புடன் இன்று படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இப்படி சிண்டைப் பிடித்துக் கொண்டு சண்டைப் போட்டபடி தொடங்கவிருக்கும் முதல் படத்தின் பெயர் 'ரகளைபுரம்'. சினிமாக்காரர்களாச்சே... தகராறிலும் ஒரு 'சினிமா டச்' வேண்டுமல்லவா...!


Click it and Unblock the Notifications











