Femina Miss India Nandini Gupta - 19 வயதில் மிஸ் இந்தியா பட்டம் - அசத்திய நந்தினி குப்தா
டெல்லி: Femina Miss India Nandini Gupta (மிஸ் இந்தியா நந்தினி குப்தா) மிஸ் இந்தியா 2023 பட்டத்தை நந்தினி குப்தா வென்றுள்ளார். அவருக்கு வயது 19 என்பது குறிப்பிடத்தக்கது. பட்டத்தை வென்ற நந்தினி குப்தா ரத்தன் டாடாதான் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன் என தெரிவித்திருக்கிறார்.
மிஸ் இந்தியா பட்டம் என்பது கௌரவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வருடா வருடம் நடக்கும் இந்தப் போட்டியில் பங்கேற்று பட்டம் வென்றுவிட்டால் கிடைக்கும் பிரபல்யம் அதிகமானது. இதில் வென்றுவிட்டால் உலக அழகி போட்டியிலும் கலந்துகொள்ளலாம். அந்தவகையில் மிஸ் இந்தியா 2023 இறுதிச்சுற்று நேற்று பிரமாண்டமாக மணிப்பூரில் நடைபெற்றது. இந்த இறுதிச்சுற்றில் 19 வயதான நந்தினி குப்தா மிஸ் இந்தியா பட்டத்தை தட்டி சென்றார்.

யார் இந்த நந்தினி குப்தா: நந்தினி குப்தா ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். பள்ளி படிப்பை கோட்டாவில் இருக்கும் செயிண்ட் பால் மேல்நிலைப் பள்ளியில் முடித்த அவர் லாலா லாஜ்பத் ராய் கல்லூரியில் வணிக மேலாண்மை படித்திருக்கிறார். மாடலிங்கில் மட்டுமின்றி தனது படிப்பிலும் கெட்டிக்காரியாக வலம் வருவாராம் நந்தினி குப்தா. அழகு மட்டுமின்றி தனது ஆளுமையையும் அவர் நிரூபித்ததால்தான் அவர் இந்தப் பட்டத்தை பெற்றிருப்பதாக பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ரத்தன் டாடாதான் இன்ஸ்பிரேஷன்: மாடலிங்கில் நுழைந்து இப்போது மிஸ் இந்தியா பட்டம் வென்றிருக்கும் நந்தினி குப்தா கூறுகையில், "ரத்தன் டாடாதான் எனது மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். ரத்தன் டாடா மனிதகுலத்திற்காக அனைத்தையும் செய்கிறார். தனது பெரும்பாலான சொத்துகளை நன்கொடையாகவும் வழங்கியிருக்கிறார். அவர் மில்லியன் கணக்கான மக்களால் நேசிக்கப்படுபவராக இருக்கிறார்" என்றார்.
வின்னர் நந்தினி ரன்னர்ஸ் யார் யார்?: மிஸ் இந்தியா பட்டம் வென்றதை அடுத்து நந்தினி குப்தாவுக்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றன. அவருக்கு அடுத்த இடத்தில் டெல்லியைச் சேர்ந்த ஸ்ரேயா பூஞ்சா இரண்டாம் இடமும், மணிப்பூரின் தோனோஜாம் ஸ்ட்ரெலா லுவாங் மூன்றாம் இடமும் பிடித்தனர். அவர்களுக்கும் இந்தியா முழுவதுமிலிருந்து வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். மிஸ் இந்தியா பட்டத்தை நந்தினி குப்தா பெற்றிருப்பதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் நந்தினி பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகமே இதோ வருகிறார்: நந்தினி குப்தா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றதை அடுத்து மிஸ் இந்தியாவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில், "உலகமே இதோ அவர் வருகிறார். வசீகரத்தாலும், அழகினாலும் எங்களை ஈர்த்து நெஞ்சங்களை வென்றார். அவரை உலக அழகி பட்டத்திற்கான மேடையில் பார்க்க ஆவலுடன் காத்துள்ளோம். நந்தினி குப்தா, உங்களது கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் இது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

கலந்துகொண்ட பிரபலங்கள்: மிஸ் இந்தியா 2023 இறுதிச்சுற்றில் அனன்யா பாண்டே பெர்பார்மன்ஸ் செய்திருந்தார். மேலும் ஏற்கனவே மிஸ் இந்தியா பட்டம் வென்றவர்களான, சினி ஷெட்டி, சினாட்டா சௌகான், மானசா வாரணாசி, மாணிகா ஷியோகந்த், மான்யா சிங், ஷிவானி ஜாதவ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். அனன்யா பாண்டே மட்டுமின்றி நடிகர் கார்த்திக் ஆர்யனின் பெர்பார்மன்ஸும் நேற்றைய இறுதிச்சுற்றில் இடம்பெற்றது.


Click it and Unblock the Notifications











