twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருவிழாக்களில் கொண்டாட்டமாகும் திரைப்படங்கள்!

    By Shankar
    |

    - கவிஞர் மகுடேசுவரன்

    திரைப்படங்கள் படச்சுருளிலிருந்து விடுபட்டு 'வீடியோ கேசட்டுகள்' எனப்படும் ஒளிப்பேழைகளாக மாற்றம் பெற்று வலம் வந்தன. அந்த அறிவியல் வளர்ச்சி நம்மை வந்தடைந்த காலகட்டம் எண்பதுகளின் தொடக்கம். அன்றைக்கு ஒரு வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இருப்பது அவ்வீட்டுச் செல்வ வளத்தின் முதற்குறியீடு. தொலைகாட்சிப் பெட்டி என்று பெயர்தானே தவிர எவ்வொரு களிநயமான நிகழ்ச்சியையும் அதில் காண்பதற்கில்லை. அரசு ஒளிபரப்புக்கும் மக்கள் நாடிய பொழுதுபோக்குக்கும் தொடர்பில்லாத காலகட்டம் அது. இப்போது எண்ணிப் பார்த்தால் எவ்வளவு மடத்தனமான முடக்கங்கள் அவை என்று வியப்பாக இருக்கிறது. வானொலி நிலையங்களில்கூட காலையில் நான்கு பாடல்கள், மாலையில் நான்கு பாடல்கள்தாம். அந்த இறுக்கங்களேகூட அக்காலத்தினரைத் திரையரங்குகளுக்கு அழைத்து வந்தன என்று அறுதியிட்டுக் கூறலாம். செவ்வாய்க்கிழமை நாடகம், ஞாயிற்றுக்கிழமையில் பழைய படம் ஆகியவற்றைக் கண்டு விதியே என்று இருந்திருக்கிறோம். அத்தகைய இறுக்கங்கள் நிலவியபோது நமக்குக் கிட்டிய முதல் விடுதலைதான் ஒளிப்பேழை.

    Festivals and movies

    ஒளிப்பேழையை வாடகைக்கு விடும் கடைகள் வீதிதோறும் இருந்ததை மறக்க முடியுமா? தொலைக்காட்சியைப் பெட்டியையும் வாடகைக்கு எடுத்து, ஒளிப்பேழை இயக்கியையும் வாடகைக்கு எடுத்து, ஒளிப்பேழைகளையும் வாடகைக்கு எடுத்து விடிய விடிய இரண்டு மூன்று திரைப்படங்களைப் பார்த்ததை எப்படி மறப்போம்? தொலைக்காட்சிப் பெட்டி வாடகைக்கு எடுக்கப்படுகிறது என்றாலே அவ்வூரில் அல்லது ஒரு வீட்டில் அன்றைக்கு ஏதோ விழா, திருநாள், கொண்டாட்டம் என்று எளிதில் கணிக்கலாம். அவரவர் தத்தம் கைப்பேசிக்குள் கண்களைப் புதைத்த பிறகுதானே பேருந்துகளில்கூட 'வீடியோ கோச்' வகையறாக்கள் ஒழிந்தன !

    நான் முதன்முதலில் ஒளிப்பேழை ஒளிபரப்பில் பார்த்த படம் நன்றாக நினைவிருக்கிறது. 'சின்ன தம்பி பெரிய தம்பி' என்ற படம்தான் அது. கரட்டடிக் கோவில் குடமுழுக்கு விழாவின் நள்ளிரவுக் கொண்டாட்டமாக 'வீடியோ போடறாங்க...' என்னும் வாய்மொழிச் செய்தி பரவியது. படத்தை ஒன்பது மணிக்குத்தான் போடுவார்கள் என்னும் நிலையில் என் அகவையொத்த சிறுவர்கள் ஏழு மணிக்கே சென்று முன்னிடம் பிடித்து அமர்ந்துவிட்டோம். எங்கள் முன்னால் ஒரு மேசை போடப்பட்டு அதன்மீது தொலைக்காட்சிப் பெட்டி வைக்கப்பட்டது. கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சிப் பெட்டி அது. அதனால் என்ன? நாங்கள் காண இருப்பது புத்தம் புதிய படம். கடைகளில் காட்சிப் பொருளாகப் பார்த்ததைத் தவிர்த்தால் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியில் படம் பார்ப்பது எனக்கு அஃதே முதன்முறை. திரையரங்கில் பார்த்த அந்த நிறைவு கிட்டியது என்று சொல்வதற்கில்லை. சின்ன சின்னதாய் ஆளுருக்கள் தெரிந்தன. திரையில் காணும் காட்சியின் வியப்பு தொலைக்காட்சிப் பெட்டியில் இல்லை. ஆனாலும் முழுப்படத்தையும் வெறி பிடித்தவர்களைப்போல் பார்த்தோம். அன்று எங்கள் தலைமுறையினரைப் பீடித்திருந்த திரைப்பட மயக்கத்தைத் தீரா விருப்பு, வெறி, பைத்தியம், மடமை, பேதைமை, அறியாமை, நோய் என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

    Festivals and movies

    அப்படத்தின் சில காட்சிகள் எங்கள் ஊரில்தான் எடுக்கப்பட்டன. பின்னலாடை நிறுவனக் கட்டடமொன்றில் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அந்தக் கட்டடம் இருந்த தெரு வழியாகச் செல்ல முடியாதபடி மக்கள் திரள் கூடிவிட்டது. "பிரபு சத்தியராஜ் நதியா எல்லாரையும் பார்த்துட்டேன்...," என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டு திரிந்தார்கள். படப்பிடிப்பு முடிந்த சூட்டோடு அந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாயிற்று. அப்போதெல்லாம் படப்பிடிப்பு முடிந்தாலே படம் வெளியாகிவிடும் என்று நம்பலாம்.

    திரையரங்குகளில் வெளியான படங்களின் காணொளிப் பேழைகள்தாம் கடைகளிலும் கிடைத்தன. அன்றைக்கு ஏவிஎம் நிறுவனத்து அதிபர்களின் தலைமையில் 'திருட்டு வீடியோ'வை ஒழிப்பதற்கு உண்ணா நோன்பு இருந்தார்கள். ஊர்வலம் சென்றார்கள். முதலமைச்சரிடம் வேண்டல் கடிதம் கொடுத்தார்கள். திரைப்படத் திருட்டுக்கு எதிராக அன்றைக்குத் தொடங்கிய கூக்குரல் இன்றுவரை அடங்கவில்லை. அதற்கு எதிராக எதையுமே கிள்ளிப்போட முடியவில்லை. இந்த அறிவியல் வளர்ச்சியை ஆக்க வழியில் எண்ணுவதற்குத் திரையுலகமும் அணியமாக இல்லை. ஒருவர்க்கொருவர் முட்டுக்கட்டை இடுவதில் நம்மவர்கள் மன்னர்கள். நிற்க.

    கூத்து, கரகம், நையாண்டி மேளம், இசைக்கச்சேரி ஆகியவற்றை நடத்துவது சற்றே செலவு பிடிக்கும் ஏற்பாடுகள். அந்நேரத்தில் 'வீடியோ போட்டு விடுவது' கோவில் விழாக் குழுவினர்க்குச் செலவைக் குறைக்க உதவியது. ஒளிப்பேழைகள் பரவலாவதற்கு முன்பாக விழாக்களில் திரைப்படங்கள் திரையிடப்படவில்லையா என்று கேட்பீர்கள். திருவிழா என்றாலே திரைப்படங்கள் காண்பிக்கப்படுவது எப்படியோ கட்டாயமாகிவிட்டது. ஊர்த் திடலிலோ அல்லது பள்ளி மைதானத்திலோ வெள்ளைத் திரைகட்டி ஒளிப்பெருக்கியின் (Projector) வழியாகவே படச்சுருளைக் 'கர்ர்ர்ர்' என்ற ஒலியோடு ஓட்டிப் படம்காட்டினார்கள். அவ்வாறு படம்காட்டிய மாரியம்மன் கோவில் திருவிழாவில் 'அண்ணன் ஒரு கோவில்', 'பணம் படைத்தவன்' ஆகிய இரண்டு படங்களைப் பார்த்தேன். பணம் படைத்தவன் திரைப்படத்தில் பிள்ளையைப் பிரிந்த ஏக்கத்தைப் பாடுபொருளாகக் கொண்ட 'மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க... மன்னவன் மட்டும் அங்கிருக்க.... காணிக்கையாக யார் கொடுத்தாள் ? அவள் தாயென்று ஏன்தான் பேரெடுத்தாள் ?' என்னும் பாடலுக்கு ஊரே அழுதது.

    திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்ப்பதற்கு நம்மோடிருக்கும் ஓரிரு நண்பர்களோடு அல்லது உறவினர்களோடுதான் செல்ல முடியும். ஆனால், ஊர்த்திருவிழாவில்தான் நம்மோடு வாழும் எல்லாரோடும் சேர்ந்து ஒரு படத்தைப் பார்க்க முடியும். அந்த ஒன்றுகூடலுக்கு இணையாக எதையும் கூறுதற்கில்லை.

    ஒளிப்பேழைகள் வந்த பிறகு திருவிழாக்களில் படச்சுருள் திரையிடல்கள் குறையத் தொடங்கின. தொலைக்காட்சிப் பெட்டியையும் ஒளிப்பேழைகளையும் வாடகைக்கு எடுத்து நான்கு படங்களைப் போட்டால் விடிய விடிய ஓடிக்கொண்டிருக்கும். அரிசிச் சாக்கு, முடைந்த தென்னங்கீற்று, கோரைப்பாய் போன்றவற்றை எடுத்துவந்து படுத்துக்கொண்டே படம் பார்ப்பார்கள். படம் நன்றாக இருந்தால் கண் துஞ்சாமல் விடியும்வரை பார்ப்பார்கள். படம் இழுக்கிறது என்றால் அப்படியே தூங்கிவிடுவார்கள். அடுத்த சில நாள்களுக்கு ஊர்ப்பெரியவர்களின் பேச்சுகளில் அவர்கள் பார்த்த திரைப்படங்களிலுருந்து மேற்கோள்கள் தெறித்து விழும். "அந்த மைனரு அடங்காமத் திரிஞ்சவன் கடைசீட்டுல எப்படி அழிஞ்சு போனான், பார்த்தீல்ல...?" என்று குறிப்பிட்டுப் பேசுவதைக் கேட்கலாம்.

    இப்போதைய ஊர்த்திருவிழாக்களின் இரவுகளில் என்னென்ன கலைச்செயல்கள் இடம்பெறுகின்றன என்று கவனித்தேன். கொஞ்சம் பொருட்செலவு மிக்க திருவிழாக்களில் பாடலைப் பாடியபடி பேசும் பட்டிமன்றங்கள் நடக்கின்றன. மேற்கோளாகக் காட்டும் திரைப்பாடலை அந்தப் பேச்சாளரே பாடுகிறார். அதற்கொருவர் மின்னியற்கருவியிலேயே தாளம் அடிக்கிறார். காதுச்சவ்வு கிழிந்துவிடுமளவுக்கு ஒலிபெருக்கிகள் அலறுகின்றன. மற்றொரு திருவிழாவில், "விசாலு நடித்த மலைக்கோட்டை திரைப்படம் போடப்படும்," என்னும் அறிவிப்பைக் கேட்டேன். ஆறடித் திரையைக் கட்டி 'எண்ணியற் பன்திற வட்டு' (DVD) வழியாக ஒளிபெருக்கியால் திரையில் காண்பிப்பார்களாம். எப்படியோ மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் சரிதான்!

    English summary
    In moct of the Tamil festivals movies screening for public as the part of the celebration.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X