Kanal Kannan - சர்ச்சையை கிளப்பிய வீடியோ.. சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது
சென்னை: Kanal Kannan Arrest (கனல் கண்ணன் கைது) பிரபல சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீண்டும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய சேரன் பாண்டியன் என்ற படத்தின் மூலம் சண்டை பயிற்சியாளராக அறிமுகமானவர் கனல் கண்ணன். அதன் பிறகு நாட்டாமை, முத்து, விஷ்ணு, அவ்வை சண்முகி, மிஸ்டர் ரோமியோ, சூர்ய வம்சம், படையப்பா என 90களில் கொடிகட்டி பறந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியிருக்கிறார் கனல் கண்ணன்.

ஸ்க்ரீன் பிரெசன்ஸும் உண்டு: சண்டை பயிற்சியாளராக கேமராவுக்கு பின்னால் மட்டும் நிற்காமல் கேமராவுக்கு முன்னாலும் நடிப்பவர் கனல் கண்ணன். அப்படி அவர் அவ்வை சண்முகி, முத்து, படையப்பா என பல படங்களில் ஏதேனும் ஒரு சண்டை காட்சியில் தலை காண்பித்துவிடுவார். அப்படி அவர் வருகையில் தனது பாடி லாங்குவேஜில் கொஞ்சம் காமெடித்தனத்தையும் சேர்த்து நடிப்பது வழக்கம். கடைசியாக அவர் பொம்மை உள்ளிட்ட படங்களுக்கு சண்டை பயிற்சியாளராக பணியாற்றினார்.
அனல் கிளப்பிய கனல்: ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் போக இந்து முன்னணியில் இணைந்து ஹிந்து மதத்தை ஆதரித்து பேசுகிறேன் என்ற பெயரில் மேடை ஏறினார். மேடை ஏறியவரின் ஒவ்வொரு பேச்சிலும் சர்ச்சைகள் மட்டுமே உருவாகின. அப்படி அவர் தந்தை பெரியார் குறித்து பேசிய பேச்சு பெரும் பூதாகரமாக வெடிக்க உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார். சில நாட்கள் சிறையில் இருந்த அவர் கடந்த வருடத்தில் வெளிவந்தார்.
மீண்டும் சர்ச்சை: இந்நிலையில் முதல் கைதோடு அடங்கிவிடுவார் என பலரும் எதிர்பார்த்திருக்க மீண்டும் ஒரு சர்ச்சையை பற்ற வைத்திருக்கிறார் கனல் கண்ணன். அதாவது மதபோதகர் ஒருவர் பெண்ணுடன் ஆடும் வீடியோ ஒன்றை கனல் கண்ணன் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ தமிழ் பாடலுடன் எடிட் செய்யப்பட்டிருந்தது.

மேலும் அதற்கு கேப்ஷனாக, வெளிநாட்டு மத கலாசாரத்தின் உண்மை நிலை இதுதான். மதம் மாறிய ஹிந்துக்களே சிந்தியுங்கள் என்றும் குறுப்பிட்டிருந்தார். இதனையடுத்து அவர் பிற மத உணர்வுகளை கொச்சைப்படுத்துகிறார் என்ற விமர்சனத்தை கடுமையாக பலர் முன்வைத்தனர். தொடர்ந்து கனல் கண்ணன் மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
கனல் கண்ணன் கைது: திமுகவைச் சேர்ந்த ஜோசப் பெனடிக்ட் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது சாதி, மத ரீதியான சொற்களை பயன்படுத்துவது, பிரிவினையை தூண்டுவது என இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நாகர்கோவில் சைபர் கிரைம் காவல் துறையினர் கனல் கண்ணனை கைது செய்தனர். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











