தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லை.. கொரோனா வைரஸுக்கு சினிமா நடிகர் பலி.. திரையுலகம் சோகம்!
சார்ஜா: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக நடிகர் ஒருவர் உயிரிழந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கொரோனா உலகம் முழுவதும் மிரட்டி வருகிறது. இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கிறது

தயாரிப்பாளர்
இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் முயற்சி எடுத்தாலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனாவுக்கு தயாரிப்பாளரும் நடிகருமான எஸ்.ஏ.ஹாசன் என்பவர் உயிரிழந்துள்ளார். இவர், கேரள மாநிலம் ஆலுவா அருகில் உள்ள சங்கரன்குழியை சேர்ந்தவர்.

உடல் நலக்குறைவு
இவர், துபாயில் டெக்ஸ்டைல் பிசினஸ் செய்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சார்ஜாவின் ரஸ் அல் கைமா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள், அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினர்.

செயற்கை சுவாசம்
இதையடுத்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நோய் தீவிரம் அடைந்ததால், அங்கிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு செயற்கை சுவாசக் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் அவர் உடல் நிலை மோசமானது. இந்நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 51.

ஹலோ துபாய்க்காரன்
இதனால் அவரது உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர். கொரோனாவால் உயிரிழந்த ஹாசன், திரைப்படம் தயாரித்து அதில் நடித்துள்ளார். அவர் தயாரித்து நடித்த மலையாள படம், ஹலோ துபாய்க்காரன். அடில் இப்ராஹிம், தேவன், மாளவிகா மேனன், தர்மராஜன் உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தில் ஹாசனும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

திரையுலகினர்
துபாய் கனவில் இருக்கும் ஒருவர், துபாய்காரனாவது பற்றிய கதையை கொண்ட இந்த படம் கடந்த 2017 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. பாபுராஜ் ஹரிஶ்ரீ, ஹரிஶ்ரீ யூசுப் ஆகியோர் இயக்கி இருந்தனர். இந்நிலையில் ஹாசன் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த ஹாசனுக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications