twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'கூத்தாடிகளே ரெண்டுபட்டால்....' - சனிக்கிழமை ஒரு சமரச முயற்சி!

    By Shankar
    |

    நடிகர்கள் சங்கத் தேர்தலால் இரண்டு அணிகளுமே நிரந்தரமாக எதிரெதிராக மாறிவிடக்கூடாது என்பதால் அவர்களிடையே ஒற்றுமை ஏற்படுத்த திரையுலக சங்கங்கள் முயற்சி செய்ய உள்ளன.

    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2015-18-ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் சென்னை மயிலாப்பூரில் அக்டோபர் 18-ல் நடைபெறுகிறது. இதில் சரத்குமார் தலைமையிலான அணியும், நடிகர் நாசர் தலைமையிலான அணியும் களம் காண உள்ளன.

    Film bodies try to bring unity among actors

    நாசர் அணியில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச் செயலர் பதவிக்கு விஷால், துணைத் தலைவர் பதவிகளுக்கு பொன்வண்ணன், கருணாஸ், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, 24 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு கோவை சரளா, பிரசன்னா, ஸ்ரீமன் உள்ளிட்டோரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

    சரத்குமார் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு சரத்குமார், பொதுச் செயலர் பதவிக்கு ராதாரவி, துணைத் தலைவர் பதவிகளுக்கு விஜயகுமார், சிம்பு, பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர்.கண்ணன், 24 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு நளினி உள்ளிட்டோரும் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

    இப்போது இரு அணிகளுக்கு இடையே சமரசம் உண்டாக தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்தியத் திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் ஆகிய சங்கங்கள் முயற்சி செய்ய உள்ளன.

    இது தொடர்பாக, திரையுலக சங்கங்கள் இணைந்து இன்று வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    "காலம் சென்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜிகணேசன், இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் அன்றைய காலகட்டத்தில் முன்னணியில் இருந்த நடிகர், நடிகையரால் கட்டிக் காப்பாற்றப்பட்டு வந்த சங்கம்தான் தென்னிந்திய நடிகர் சங்கம். அந்தச் சங்கத்தில் எப்பொழுது தேர்தல் வந்தாலும் அமைதியாக நடைபெற்று தேர்தல் முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் கைகொடுத்து, கட்டிப் பிடித்து அன்பைப் பரிமாறி கொள்வர்.

    சக சங்கங்களான தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம், தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் மக்கள் தொடர்பாளர்கள் யூனியன் ஆகியவையுடன் இணக்கமாக நட்புறவு பாராட்டி வருவது நடிகர் சங்கம்தான்.

    தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தேர்தல் என்றவுடன் அனைவரின் பார்வையும், கவனமும் நடிகர் சங்கத்தின் மீது விழுந்துள்ளது. தேர்தலைத் தவிர்த்து சுமூகமாக முடிவு எடுக்கவும், இரு அணி சார்பிலும் ஒருவர் மீது மற்றொருவர் அறிக்கைபோர், பேட்டிகள் கொடுப்பதைத் தவிக்க வேண்டும் என இந்த கூட்டறிக்கை வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.

    ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று பழைய பழமொழி உள்ளது. ஆனால் இன்று கூத்தாடி ரெண்டுபட்டதால் ஊருக்கு திண்டாட்டமாக உள்ளது.

    திரையில் தோன்றி மக்களைப் பரவசப்படுத்தும் நடிகர்கள், அவர்களைப் பின்பற்றும் ரசிகர்கள், பணம் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவரும் நடிகர் சங்கத் தேர்தலைக் கண்காணித்து வருகின்றனர். இரு அணிகளிலும் போட்டியிடும் அனைவருமே எங்களுக்கு நண்பர்கள்தான்.

    நடைபெற இருக்கின்ற நடிகர்கள் சங்கத் தேர்தலில் இரண்டு அணிகளுமே நிரந்தரமாக எதிரெதிராக மாறிவிடுவார்களோ என்ற கவலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இரு அணியினரையும் சாராத பொதுவான திரைக் கலைஞர்கள் இதே கவலையை எங்களிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

    சனிக்கிழமை சமாதான முயற்சி

    ஆகவே, எல்லோருக்கும் நன்மை பயக்கும் விதமாக இந்த ஒற்றுமை ஏற்படுத்தும் முயற்சியைத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்தியத் திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் ஆகிய சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. ஆகவே, வரும் சனிக்கிழமை (10.10.2015) அன்று இரு அணியினரையும் அழைத்துப் பேசி ஒரு சுமூகமான உடன்பாடு ஏற்பட ஒரு கூட்டுக்குழு முயற்சிக்கிறது,' என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Tamil Film trades bodies have making serious efforts to bring unity between actors in their association election.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X