ஜூன் 21-ல் நடக்க இருந்தது.. கொரோனா காரணமாக தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் மீண்டும் தள்ளி வைப்பு!
சென்னை: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு (TFPC) 2 வருடத்துக்கு ஒரு முறை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.
இதில் தலைவர், 2 செயலாளர்கள், 2 துணைத் தலைவர்கள், பொருளாளர் மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஓய்வுபெற்ற நீதிபதி
அடுத்த 2 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் மாதம் 21 ஆம் தேதி நடக்க இருந்தது. இதற்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் அதிகாரியும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஜெயச்சந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார். இந்நிலையில் இந்த தேர்தலில் 4 அணிகள் போட்டியிடுகின்றன.

நடிகர் விஷால்
இந்த தேர்தலில் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தலைமையில் ஒரு அணியும், மறைந்த தயாரிப்பாளர் ராம நாராயணனின் மகன் முரளி என்ற என்.ராமசாமி தலைமையில் ஒரு அணியும் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. குறைந்த முதலீட்டு பட தயாரிப்பாளர்கள் சார்பில் செந்தில் ஆனந்த், கமலக்கண்ணன் சார்பில் ஓர் அணி போடியிட இருக்கிறது.

தள்ளி வைப்பு
இந்நிலையில் இந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தொடர்பாக தனி அலுவலர் விடுத்துள்ள அறிக்கையில், 'தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலுக்கான அட்டவணை ஏப்ரல் 16-ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. சென்னையில், கொரோனா வைரஸ் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருவதைக் கருத்தில் கொண்டுள்ளோம்.

பின்னர் அறிவிக்கப்படும்
தேர்தல் நடத்த கால அவகாசம் வேண்டி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலும், தோதலை அறிவித்த தேதியில் நடத்த இயலாத சூழ்நிலை இருக்கின்ற காரணத்தால், திருத்தப்பட்ட தேர்தல் அட்டவணை வரவிருக்கும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பின்னர் அறிவிக்கப்படும்' என்று கூறியுள்ளார். இந்த தேர்தல் தள்ளி வைக்கப்படுவது இது இரண்டாவது முறை. ஏற்கனவே மே 10- ஆம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. பின் ஜூன் 21- ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.


Click it and Unblock the Notifications











