Filmfare awards 2025: 6வது பிலிம் ஃபேர் விருதை தட்டித் தூக்கிய ஆலியா பட்.. 13 விருதுகளை அள்ளிய லபதா லேடீஸ்!
குஜராத்: அகமதாபாத்தில் உள்ள EKA அரங்கில் 70வது ஃபிலிம்ஃபேர் விருதுகள் விழா நடைபெற்றது. இதில் கிரண் ராவின் 'லபதா லேடீஸ்' திரைப்படம் 13 விருதுகளை வென்றது. 'தி பேட்ஸ் ஆஃப் பாலிவுட்' லட்சயா, கிங் கான் முன்னிலையில் 'கில்' படத்துக்காக சிறந்த அறிமுக நடிகர் (ஆண்) விருதை வென்றார்.
ஆலியா பட், 'ஜிக்ரா' படத்திற்காக சிறந்த நடிகை விருதை வென்றது இணையவாசிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜிக்ரா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்த ஒரு நாள் கழித்து, ஆலியா பட் 70வது ஃபிலிம்ஃபேர் விருதுகள் 2025 விழாவில் 'ஜிக்ரா' படத்திற்காக சிறந்த நடிகை விருதை வென்றார். வசந்த் பாலா இயக்கிய 'ஜிக்ரா' படத்தை கரண் ஜோகர் மற்றும் ஆலியா இணைந்து தயாரித்தனர். இப்படத்தில் ஆலியா பட் மற்றும் வேதாங் ரெய்னா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

விருது பெற்றவர்கள்: கரீனா கபூர் கான் (க்ரூ), ஷ்ரத்தா கபூர் (ஸ்த்ரீ 2), தபு (க்ரூ), யாமி கௌதம் (ஆர்டிகிள் 370) மற்றும் கிருத்தி சனோன் (தேரி பாட்டோன் மே அய்ஸா உல்ஜா ஜியா) போன்ற முன்னணி நடிகைகளைத் தாண்டி ஆலியா பட் 'பிரபலமான' பிரிவில் இந்த விருதை வென்றார். இதேவேளை, லபதா லேடீஸ் படத்திற்காக பிரதிபா ராந்தா சிறந்த நடிகை (விமர்சகர்கள்) விருதை வென்றார். கார்த்திக் ஆர்யன் 'சந்து சாம்பியன்' படத்திற்காகவும், அபிஷேக் பச்சன் 'ஐ வாண்ட் டு டாக்' படத்திற்காகவும் சிறந்த நடிகர் (முன்னணி கதாபாத்திரம் - ஆண்) விருதை கூட்டாகப் பெற்றனர். ராஜ்குமார் ராவ் 'ஸ்ரீகாந்த்' படத்திற்காக சிறந்த நடிகர் (விமர்சகர்கள்) விருதை தட்டிச் சென்றார்.
ஆலியா பட்டின் இந்த வெற்றி குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதம் சூடுபிடித்துள்ளது. ஃபிலிம்ஃபேர் விருதுகள் ஆலியா பட்டுக்கு சாதகமாக இருப்பதாக பலர் குற்றம் சாட்டுகின்றனர். யாமி கௌதம் 'ஆர்டிகிள் 370' படத்தில் சிறப்பாக நடித்திருந்தும் புறக்கணிக்கப்பட்டதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் அதிருப்தி: ஒரு ரெட்டிட்வாசி, "ஆலியா பட் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நடிகை விருதை எப்படி வெல்கிறார் என்று தெரியவில்லை. இந்த முறை அவரது படம் தோல்வி அடைந்தும் 'பிரபலமான பிரிவில்' விருதை வென்றது வியப்பை அளிக்கிறது. அவர் திறமையானவர் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அவர் வென்ற 6 விருதுகளில் 3 மட்டுமே நியாயமானவை. மற்றவை பாரபட்சமானவை. ஒவ்வொரு வருடமும் ஃபிலிம்ஃபேர் விருதுகள் ஒரே பெயர்களைச் சுற்றி வருவது போல் உள்ளது. யாமி கௌதம் இந்த ஆண்டு மிகவும் திறமையான நடிப்பை வெளிப்படுத்திய போதிலும் புறக்கணிக்கப்பட்டார். இது 'பிரபலமான’ விருது என்பதையும் தாண்டி ஒரு அரசியல் போல் இருக்கிறது. தகுதியான நடிகைகள் புறக்கணிக்கப்படுவதைப் பார்ப்பது வேதனையாக உள்ளது," என்று குறிப்பிட்டிருந்தார்.
தகுதியற்றவர்களுக்கு விருது: மற்றொருவர், "இந்த விருதுகள் ஒரு நகைச்சுவை என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் தகுதியற்றவர்களுக்கு விருதுகள் கிடைக்கும்போது எரிச்சலாக இருக்கிறது," என்றார். மூன்றாவது பயனர், "ஃபிலிம்ஃபேர் ஏன் தொடர்ந்து ஆலியாவுக்கு விருதுகளை வழங்குகிறது? இது அவருக்கு எவ்வளவு வெறுப்பைத் தருகிறது என்று அவர் உணரவில்லையா? சிறந்த நடிகர்களுக்கு இருவர் விருது பெற்ற நிலையில், சிறந்த நடிகைக்கு ஏன் இல்லை? அபிஷேக் பச்சன் 1.50 கோடி வசூலித்த படத்திற்காக சிறந்த பிரபலமான நடிகர் விருதை வென்றது மற்றொரு நகைச்சுவை," என்று கருத்து தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











