twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ''அவிய்ங்க திட்டம் வரும் ஆனா... வராது''!-வடிவேலு

    By Shankar
    |

    Vadivelu
    சென்னை: எம்ஜிஆர் இப்போது கருணாநிதி உருவில் இருக்கிறார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், என்றார் நடிகர் வடிவேலு.

    சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெ.அன்பழகனை ஆதரித்து நடிகர் வடிவேலு நேற்று பிரசாரம் மேற்கொண்டார். சிந்தாதிரிப்பேட்டையில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றபடி நடிகர் வடிவேலு உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அவரது பேச்சைக் கேட்க எக்கச்சக்க கூட்டம் திரண்டுவிட்டது.

    பொதுமக்கள் முன்னிலையில் நடிகர் வடிவேலு பேசியதாவது:

    ரொம்ப கஷ்டப்பட்ட ஏழை குடும்பத்துல இருந்து வந்தவன் நான். என்னய இந்த அளவுக்கு உசத்துனது மக்களாகிய நீங்கதான்.

    என்னதான் நகைச்சுவையாக பேசி உங்கள நான் சிரிக்க வெச்சாலும் எல்லாருக்கும் குடும்பத்துல பிரச்னை இருக்கும். அதனாலதான் உங்களோட அடிப்படை தேவைய உணர்ந்து அஞ்சு முறை முதல்வராக இருந்த அய்யா கலைஞர் பல நல்ல திட்டங்கள உங்களுக்கு செய்திருக்காரு. அவரோட நல்ல திட்டங்கதான் என்னயும் கவர்ந்துடுச்சு. அதனாலதான் அவரு ஆறாவது தடவையா முதல்வரா வந்தா இன்னும் நல்ல திட்டங்கள்லாம் செய்வார்னு உங்கள நேர்ல சந்திச்சு சொல்ல வந்திருக்கேன்.

    மக்களுக்கு சம்பந்தமே இல்லாம இருந்த ஒருத்தரு திடீரென கட்சி ஆரம்பிச்சுட்டு, நான் கருப்பு எம்ஜிஆர்ங்கறான். யாரோடயும் கூட்டணி இல்ல தெய்வத்தோடயும், மக்களோடும்தான் கூட்டணின்னார். இப்ப எனது மானசீக குரு தொடங்கிய கட்சியோடத்தான் கூட்டணி சேர்ந்திருக்கேங்கறார். போன வருஷம் தேர்தல்ல அந்த கட்சி இல்லையா, அப்ப கூட்டணி சேர வேண்டியதுதானே.

    எங்கோ ஒரு நாட்டுல தீவிரவாதம் நடக்கும். இவன் படத்துல முஸ்லிம்கள தீவிரவாதியா காட்டி அடிக்கிறது, அரஸ்ட் பண்ணுறதுபோல காட்டுவான். திடீர்னு குல்லா மாட்டிக்கிட்டு கஞ்சி குடிக்க வந்திருவான். இவன் ஆரம்பிச்சிருக்கிறதுக்கு பேரு கட்சி இல்ல.. அது ஒரு கடை.

    காலைல 10 மணிக்கு சூட்டிங்குக்கு வந்தா 11.30 மணிக்கெல்லாம் 'கட்டிங்"தான். பக்கத்துல இருக்கறவங்க கொஞ்சம் தண்ணி ஊத்தவான்னு கேட்டாகூட அவனுக்கு அடி விழும். அப்படியே ராவா அடிக்கறதுதான் அவரோட பழக்கம். இன்ன வரைக்கும் அந்த அம்மாவை முதலமைச்சருன்னு சொல்ல மாட்டேங்காரு. அவரு மனசுல ஏதோ திட்டம் இருக்கு.

    பிரசாரத்துலயே தண்ணி அடிச்சிட்டு, எல்லாரு முன்னாலேயும் வேட்பாளர அடிக்கிறாரு. கேட்டா, என்கிட்ட அடிவாங்கினா மகாராஜா ஆவாங்கிறார். அப்போ எதுக்கு தேர்தல் நடத்தனும். எல்லாரையும் இவரு கல்யாண மண்டபத்துக்கு வரவெச்சு வரிசையா நிக்கவெச்சு அடிக்க வேண்டியதுதானே. கூட்டணி தலைவர்கள வரவச்சு குத்துவிட வேண்டியதுதானே? நான் படத்துல பண்ணின காமெடிய பூராவும் இப்ப அவங்க நெசத்துல பண்றாங்க. கலைஞர் போட்ட திட்டங்கள்லாம் வரும். ஆனால் அவிய்ங்க திட்டம் வரும் ஆனா.... வராது.

    இப்ப இருக்கிறதுக்கு பேரு அதிமுக இல்லை அனைத்தும் திமுக. உண்மையான அதிமுக தொண்டருங்க எல்லாரும் இப்ப இங்க இருக்காங்க. 41 சீட்ல போட்டியிடுற வேட்பாளர் பெயரை சரியா உன்னாலே சொல்ல முடியுமா?.

    ஒரு வேட்பாளர் பெயர சரியா சொல்ல முடியல. அண்ண இது என் பெரு இல்லன்னு சொன்னதுக்கே அடி விழுது.

    இப்ராகிம் ராவுத்தரு உன்னோட நெருங்கிய நண்பன்தானே. உண்மையான நண்பனையே தெருவுல நிக்கவுட்டுட்ட. நீ எப்படி கூட்டணியில இருக்கிறவங்களுக்கு நண்பனா இருப்ப?.

    புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மக்களுக்கு என்னவெல்லாம் செய்தாரோ, செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ அவற்றையெல்லாம் இப்போது செய்து கொண்டிருப்பவர் நமது தமிழக முதல்வர் கருணாநிதிதான். அவர் சத்துணவு தந்தார். இவர் அந்த சத்துணவோடு முட்டையும் வழங்கிட உத்தரவிட்டார்.

    கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி திட்டம், ஏழைப்பெண்களுக்கு நிதி உதவி திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவை போன்ற திட்டங்கள் என்னை மிகவும் கவர்ந்த திட்டங்கள் ஆகும். சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால உதவித்தொகை 6000 ரூபாயில் இருந்து 10000 ரூபாய்-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

    வேறு எந்த மாநிலத்திலாவது வயிற்றில் இருக்கும் சிசுக்களுக்கு பணம் அளிக்கும் திட்டங்கள் உண்டா? இல்லை. அந்த குழந்தை வயிற்றில் இருந்து கருணாநிதிக்கு இரண்டு கைகளை எடுத்து நன்றி செலுத்துகிறது.

    தகுதி இல்லை

    நானும் உங்களை போன்ற ஒருவன்தான். நான் சினிமாவில் பெரிய நடிகனாக ஆகிவிட்டாலும், என்னுடைய தாய்-தந்தையர் இன்னும் கிராமத்து வாழ்க்கைதான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய மகன் சினிமாவில் பெரிய ஆளாகி விட்டான் என்று பந்தா ஏதும் செய்து கொண்டு திரிவதில்லை. உங்களை போலவும், என்னை போலவும் இன்னும் அவர்கள் கறுப்பு நிறத்தில்தான் காணப்படுகிறார்கள்.

    அப்படி இருக்கையில் 5 ஆண்டுகளில் கட்சி ஆரம்பித்துவிட்டு தன்னை ஒரு கறுப்பு எம்.ஜி.ஆர். என்றும், அடுத்த முதல்வர் நான்தான் என்றும் சிலர் கூறி வருகின்றனர். நிதானத்தின் இருப்பிடம்தான் முதல்வர் கருணாநிதி. அவர் 6வது முறையாக மீண்டும் முதல்வராக பதவியேற்பது உறுதி.

    நாட்டுக்கு ஒரு நல்ல தலைவர் ஒருவர் உண்டு என்றால் அது கருணாநிதிதான் ஆவார். தன்னுடைய கட்சி வேட்பாளரை அடிப்பவருக்கு தலைவராக ஆகக்கூடிய தகுதி எப்படி இருக்க முடியும்?

    உண்மையான தொண்டர்கள் யாரும் தேமுதிக கட்சியில் இருக்க வேண்டாம். கட்சியை விட்டு இரவோடு இரவாக வெளியே வந்துவிடுங்கள். கருணாநிதி குடும்ப அரசியல் நடத்தி வருவதாக கூறுகின்றனர். அவர் ஆட்சிக்கு வந்தபிறகு அது குடும்பங்களின் எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் அரசியல் கட்சியாகத்தான் இருக்குமே தவிர குடும்ப அரசியலாக இருக்காது.

    கறுப்பு எம்.ஜி.ஆர்., பச்சை எம்.ஜி.ஆர்., சிகப்பு எம்.ஜி.ஆர். என்று இனிமேல் யாராவது உங்களிடம் வந்து கூறினால் அவர்களின் பேச்சை எல்லாம் நம்பி ஏமாந்துவிடாதீர்கள்.

    எம்.ஜி.ஆரின் மொத்த உருவமே இப்போது கருணாநிதிதான். அது மட்டுமில்லை, அண்ணா, காமராஜர், பெரியார் போன்ற தலைவர்களின் ஒட்டுமொத்த உருவம்கூட முதல்வர் கருணாநிதிதான்.

    எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு அருகே உள்ள பட்டனை அழுத்தி உங்களுடைய வாக்குகளை பதிவு செய்யுங்கள். எதிரில் உள்ள பட்டனை நீங்கள் அழுத்தினால் இலவசம் வரும்! ஆனால் வராது! அப்புறம் திண்டாட வேண்டியதுதான்!" என்றார்.

    மீதி இருக்கிற அனைத்து வேட்பாளருக்கும் அடி இருக்கு:

    இந் நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரம் செய்து பேசுகையில்,

    விஜயகாந்த் பிரச்சாரம் செய்யும்போது, அதிமுகவினர் அவர்களது கட்சி கொடியை தூக்கி காட்டினார்கள். அவர்களை பார்த்து கொடியை இறக்குங்குங்கடா. சொல்லிக்கிட்டே இருக்கிறேன். இங்க இருக்கிறவன் எல்லாம் முட்டாளா. நீங்க மட்டும் அறிவாளியா என்கிறார்.

    இதுக்கு அதிமுகவினர் கொடியை இறக்க முடியாது என்று சொன்னதும், நான் என் கட்சிக்குதான் பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறேன் என விஜயகாந்த் சொல்கிறார். கூட்டணி கட்சி என்றால் என்ன. ஒருத்தருக்கு ஒருத்தர் ஓட்டு கேட்க வேண்டும். அதுதான் கூட்டணி.

    ஆனால் நீ வேற, நான் (விஜயகாந்த்) வேற என்று சொல்லும் நீ ஏன் கூட்டணி சேர்ந்திருக்க?. அந்த கூட்டணி எதுக்கு உனக்கு?. அந்த கட்சியில அந்த ஆள தப்பா சேர்த்துட்டாய்ங்க. ஒரே அக்கப் போரு.

    தேமுதிக வேட்பாளர் பெயரை தப்பா சொல்லிருக்கார் இந்த ஆளு. வேட்பாளர் பெயர் பாஸ்கர். இந்த ஆளு பாண்டியன் என்று சொல்லிருக்காரு. அண்ணே அண்ணே என் பெயர் பாஸ்கர் இல்லையென சொல்லியிருக்கிறார். நான் வைக்கிறது தான்டா பேருனு சொல்லி அவர் வாயிலேயே குத்தி ரத்தம் கொட்ட வச்சுட்ட. மீதி இருக்கிற அனைத்து வேட்பாளருக்கும் அடி இருக்கு.

    வேட்பாளரை தாக்கியது ஏன் என்று கேட்டால், என்கிட்ட அடிவாங்கியவர்களெல்லாம் நாளைக்கு மகாராஜாவா ஆகிடுவாங்கனு சொல்ற. அப்புறம் எதுக்கு கட்சி. கட்சியை கலைத்துவிட்டு கல்யாண மண்டபத்தில் அனைவரையும் அழைத்து வாயிலேயே குத்த வேண்டியதுதானே.

    அதாவது சிந்தனையே இல்ல. சுய நினைவே இல்லாமல் சுத்திக்கிட்டு இருக்கு அந்த பீஸு என்றார் வடிவேலு.

    English summary
    Vadivelu says that Karunanidhi is doing what MGR had dreamed during his tenure. He urged the voters not to waste their votes by casting to AIADMK and its allies in this election.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X