டி.வி.தொடர் படப்பிடிப்பில் திடீர் தீவிபத்து.. மின் கசிவால் பரவியது.. நடிகர், நடிகைகள் தப்பினர்!
மும்பை: சின்னத்திரை தொடருக்கான படப்பிடிப்பு அரங்கில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
ஜீ டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்தி தொடர், கும்கும் பாக்யா. இதில் ஸ்ருதி ஜா, ஷபில் அலுவாலியா, முக்தா சப்பனேகர், கிருஷ்ணா கவுல் உட்பட பலர் நடிக்கின்றனர்.
ரவீந்திரா கவுதம் இயக்கும் இந்தப் படத்தை ஏக்தா கபூர், தனது பாலாஜி டெலிபிம்ஸ் சார்பில் தயாரித்து வருகிறார்.

படப்பிடிப்புக்கு அனுமதி
சென்ஸ் அண்ட் சென்ஸிபிளிட்டி என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இது இந்தி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற தொடர். இதன் ஷூட்டிங், லாக்டவுன் காரணமாக கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் ஓரளவு கட்டுக்குள் வந்த பின், சில கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பை நடத்திக் கொள்ள மகாராஷ்டிர அரசு அனுமதி அளித்துள்ளது.

சினிமா ஸ்டூடியோ
இதையடுத்து சின்னத்திரை தொடர்களுக்கான படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன. குறைந்த நபர்களை கொண்டு படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. கொரோனா தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் படக்குழுவினர் எடுத்து வருகின்றனர். இதற்கிடையே மும்பை சாந்திவாலி பகுதியில், கில்லிக் நிக்ஸான் என்ற சினிமா ஸ்டூடியோ உள்ளது.

திடீரென தீ விபத்து
இங்கு பல டிவி தொடர்களுக்கான செட் போடப்பட்டு ஷூட்டிங் நடந்து வருகிறது.
அங்கு, கும்கும் பாக்யா தொடருக்காகவும் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த செட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டபோது, தொடரின் முன்னணி நடிகர், நடிகைகள் அங்கு இருந்தனர். இதன் அருகிலேயே மேலும் சில சீரியல் படப்பிடிப்புகளுக்கான செட்களும் இருந்ததால், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மின் கசிவு காரணமாக
பின்னர் தீ உடனடியாக அணைக்கப்பட்டது. மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். இந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை. இந்த ஸ்டூடியோவில் நடந்த கசவ்தி ஜிந்தகி கே என்ற தொடரில் நடித்த பர்த் சம்தானுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, இங்கு ஷூட்டிங் நிறுத்தப்பட்டு நேற்றுமுன் தினம் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக சின்னத்திரை வட்டாரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











