திரையரங்குகளில் தினசரி 5 காட்சிகளுக்கு அனுமதி.. சினிமா துறையை சந்தோஷத்தில் ஆழ்த்திய சிஎம் விஜய்!
சென்னை: புதிய திரைப்படங்கள் வெளியாகி ஒரு வாரத்திற்கு 5 காட்சிகள் திரையிடலாம், மேலும், வார இறுதி நாட்கள், பொது விடுமுறை நாட்கள், உள்ளூர் பண்டிகை நாட்களிலும் தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி அளித்து முதலமைச்சர் விஜய் சிக்ஸர் அடித்துள்ளார்.
தமிழ்நாட்டில் எந்தவொரு துறையில் மோசடி அல்லது குளறுபடி நடந்தாலும் உடனடியாக விமர்சனங்கள் கிளம்புவதற்கு முன்பாக விரைவான துறை ரீதியான நடவடிக்கைகளை முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் மதுக்கடைகள் மூடினால் தான் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நிலை உள்ளதால் தொடர்ந்து அதற்கான முயற்சிகளை பதவி வகித்த நாளில் இருந்து துரிதப்படுத்தி வருகிறார் முதலமைச்சர் விஜய். மேலும், சினிமாவில் இருந்து வந்து சிஎம் ஆன நிலையில், பல சினிமா பிரபங்கள் தொடர்ந்து விஜய்யை சந்தித்து முறையிட்டு வந்த நிலையில், தியேட்டர்கள் மற்றும் சினிமாவின் எதிர்காலம் கருதி தற்போது இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த வாரம் ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பிளாஸ்ட் திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு வாரத்துக்கு 5 ஷோ ஓட்டலாம்: திமுக ஆட்சியில் தினமும் 4 காட்சிகள் மட்டுமே ஓட்ட வேண்டிய சூழல் இருந்தது. சிறப்புக் காட்சிக்காக அரசிடம் அனுமதி பெற வேண்டும். 9 மணி காட்சிக்கான அனுமதி கிடைப்பதில் கூட சில படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில், புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியான முதல் நாளிலிருந்து தொடர்ந்து 7 நாட்களுக்கு தினமும் 5 ஷோ ஓட்டுவதற்கான அனுமதியை முதலமைச்சர் விஜய் அளித்துள்ளார்.
பண்டிகை நாளிலும் எக்ஸ்ட்ரா: மேலும், பண்டிகை நாட்களிலும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறுகளிலும் 5 காட்சிகளை திரையிட அனுமதி வழங்கியுள்ளார். 9 மணி காட்சியை தாண்டி 6 மணி அல்லது 7 மணிக்கான காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதிய படங்கள் வெளியான முதல் வாரத்தில் நல்ல வசூல் வேட்டை நடத்த இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு ஓடிடி வருமா?: நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், சின்னத்திரை சங்கம் என பலரும் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களது முதல் கோரிக்கைக்கு விஜய் பச்சைக்கொடி காட்டியுள்ளார். தமிழ்நாடு அரசு சார்பாக ஓடிடி ஒன்றும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நிறைவேறுமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. டிக்கெட் விலை உயர்வு குறித்த கோரிக்கை தொடர்பாக இப்போதைக்கு விஜய் எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்கின்றனர்.


Click it and Unblock the Notifications