பாரதிராஜாவுக்கு எத்தனை காதல்கள் தெரியுமா?.. முதல் காதலை கடைசிவரை அவர் மறக்கவே இல்ல
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். இன்று மாலை அவரது இறுதிச்சடங்கு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த திரைத்துறையையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர்களில் ஒருவர் பாரதிராஜா. 80களில் அவர் இயக்கிய படங்கள்தான்; பலரும் சினிமாவுக்குள் வருவதற்கு உத்வேகமாக இருந்தது.அவர் இயக்கிய முதல் படமே மெகா ஹிட்டானது. முதல் படத்தின் வெற்றி பாரதிராஜாவை உச்சத்தில் கொண்டு சென்று நிறுத்தியது. உச்சத்துக்கு சென்ற பிறகு மேற்கொண்டு பொறுப்பாக மாறினார். தொடர்ந்து அவர் இயக்கிய அத்தனை படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இதன் காரணமாக தென்னிந்திய திரையுலகத்தில் தவிர்க்க முடியாத இயக்குநராக அவர் மாறினார்.

பாரதிராஜாவின் அறிமுகங்கள்: அதேபோல் தமிழ் சினிமாவுக்கு எக்கச்சக்க பேரை அவர் அறிமுகம் செய்திருக்கிறார். ராதா, ராதிகா, ரேவதி, பாண்டியன், கார்த்திக், நெப்போலியன், பிரியாமணி, காஜல் அகர்வால் என பலர் அவரது அறிமுகங்கள்தான். அவர் அறிமுகம் செய்தவர்களும் சளைத்தவர்கள் இல்லை. தென்னிந்திய சினிமாக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் தங்களுக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த மகன் மனோஜ்: இயக்குநராக மார்க்கெட் போன பிறகு தனது ரூட்டை மாற்றிய அவர் நடிகராக கலக்கினார். பாண்டிய நாடு,குரங்கு பொம்மை என பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.நிலைமை இப்படி இருக்க அவரது மகனான மனோஜ் கடந்த வருடத்தில் திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு இயக்குநர் இமயத்தை சரிய வைத்தது. தீவிரமான மன உளைச்சலில் அவர் இருந்ததாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினார்கள்.
உயிரிழந்த பாரதிராஜா: மேலும் உடல்நல குறைவும் ஏற்பட மருத்துவமனையில் வைத்தும், வீட்டில் வைத்தும் மாறி மாறி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் காதல் குறித்து பாரதிராஜா பேசிய வீடியோ இப்போது ட்ரெண்டாகியுள்ளது.
காதல் பற்றி சொன்னது: அந்தப் பேட்டியில் அவர், "காதல் கொஞ்சம் கொஞ்சமாக கருத்தரித்தது. ஒன்பதாம் வகுப்பில் நான் செய்த காதலின் ஈரம் வேறு எதிலும் இல்லை. அதற்கு பிறகு இரண்டு, மூன்று காதல்கள் செய்தேன். அதையெல்லாம் தாண்டித்தான் வந்தேன். இருந்தாலும் முதல் காதலை மறக்க முடியவில்லை. அந்த முதல் உணர்வுதான் மரமாக வளரும். இடையில் இன்னொரு செடியும் வரும். ஆனால் அந்த மரத்துக்கு ஈடாக வளராது. முதல் காதலில் நேசம் மட்டும்தான் இருந்தது" என்றிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
