சிம்பு பிரச்சினை இன்னும் ஓய்ந்தபாடில்ல.. ஆனா, சத்தமில்லாம வேலையை முடிச்சுட்டாரே புளூ சட்டை மாறன் !
தனது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்.
சென்னை: பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டார்.
யூடியூப்பில் சினிமா விமர்சனம் செய்பவர் ப்ளூ சட்டை மாறன். அஜித், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களில் படங்களை மிகக் கடுமையாக விமர்சித்ததால், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார். இருப்பினும் இவரது விமர்சனத்தை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.

ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தால் பல படங்கள் தோல்வியை சந்தித்திருக்கின்றன. இதனால் இவர் மீது திரைத்துறையினருக்கு கடும் கோபம் இருக்கிறது. அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, இயக்குனர் ஷக்சி சிதம்பரம் ஆகியோர் ப்ளூ சட்டை மாறனை கைது செய்யக் கோரி காவல்துறையில் புகார் கொடுத்த கதை எல்லாம் நடந்திருக்கிறது.

இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் படம் ஒன்றை இயக்குகிறார். பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தான் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கியது.
தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கர்மா இஸ் பூமராங் என்பது போல் ப்ளூ சட்டை மாறன் இயக்கும் படத்தை பார்க்க திரைத்துறையே ஆவலாக காத்திருக்கிறது. எல்லோர் படங்களையும் கண்டபடி விமர்சித்த அவரது படம் எப்படி இருக்கிறது என்பதை அறிய துடித்துக்கொண்டிருக்கிறார் பலர்.

முன்னதாக சிம்பு, வெங்கட் பிரபு கூட்டணியில் மாநாடு படத்தை தயாரிப்பதற்காக தான் சுரேஷ் காமாட்சி போராடிக்கொண்டிருந்தார். ஆனால் அந்த படத்தை கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. படத்தில் இருந்து சிம்புவை நீக்கிய தயாரிப்பாளர், அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை வைத்து படத்தை ஆரம்பிக்க முடிவு செய்தார். ஆனால் அதுவும் இன்னும் ஆரம்பித்தபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











