சிவாஜி, காஞ்சனா, நான்காம் பிறை... 3 டிக்கு வந்த திடீர் மவுசு!
தமிழ் சினிமாவில் 3 டி படங்களுக்கு திடீரென மவுசு அதிகரித்துள்ளது. ஒரே நேரத்தில் ரஜினியின் சிவாஜி, கோச்சடையான், ராகவா லாரன்ஸின் காஞ்சனா மற்றும் நான்காம் பிறை, அதிசய உலகம் போன்ற படங்கள் 3 டியில் தயாராகின்றன.
இதில் கமல்ஹாஸனின் விஸ்வரூபமும் இணையக்கூடும் என்று பேசிக் கொள்கிறார்கள்.

சிவாஜி 3 டி
சூப்பர் ஸ்டார் ரஜினி - ஸ்ரேயா நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஷங்கர் இயக்கிய இந்த பிளாக்பஸ்டர் படத்தை, மீண்டும் பல கோடி ரூபாய் செலவில் 3 டிக்கு மாற்றியுள்ளனர்.
450 கலைஞர்களின் கடின உழைப்பில் தயாராகியுள்ள இந்த 3 டி வடிவம் சமீபத்தில் ஜப்பானில் திரையிடப்பட்ட போது, ஏக வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் நாயகி ஸ்ரேயா நேரில் சென்று அந்த வரவேற்பைக் கண்டு அதிசயித்தார்.

கோச்சடையான்
3டி மட்டுமல்ல, மோஷன் கேப்சரிங் எனும் புதிய தொழில் நுட்பத்தில் தயாராகும் ரஜினியின் படம் இது. ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இந்தப் படத்துக்காக காத்திருக்கின்றனர். தீபிகா படுகோன் ஜோடியாக நடித்துள்ளார். ரஹ்மான் இசையமைக்க, கேஎஸ் ரவிக்குமார் கதை திரைக்கதை வசனம், டைரக்ஷன் மேற்பார்வையில் சௌந்தர்யா இயக்கும் படம் இது.

காஞ்சனா
முனி படத்தின் இரண்டாம் பாகமாக ராகவா லாரன்ஸ் இயக்கிய இந்தப் படம் கடந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் படமாக வசூலைக் குவித்தது. லட்சுமிராய்தான் கதாநாயகி. கோவை சரளாவின் நகைச்சுவையும் ராகவா லாரன்ஸ் - சரத்குமாரின் பேயாட்டமும் அனைவரையும் ஒரு வழி பண்ணிவிட்டது.

நான்காம் பிறை
காசி என்ற படத்தைத் தந்த வினயன் இயக்கியுள்ள புதிய 3 டி படம் இந்த நான்காம் பிறை. புகழ்பெற்ற நாவலாசிரியர், பிராம் ஸ்டோகர் எழுதிய, "டிராகுலா என்ற நாவல் கதையை மையமாக வைத்து உருவாகிறது. இப்படத்தில் கிருஷ்ணா, சுதீர், பிரபு, நாசர், மோனல் கஜார், சாரதா தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

அதிசய உலகம்
தமிழில் வரும் முதல் டயனோசர் கதை என்ற அடையாளத்தோடு வரும் 3 டி படம் அதிசய உலகம்.
3D அனிமேசனில் குழந்தைகளின் மனத்தைக் கொள்ளைக் கொள்ளும் விதமாக காட்சிகளாக்கப்பட்டிருக்கும் இப்படம் ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடியது.
அதிசய உலகம் திரைப்படத்தின் இசை, இயக்கம், கிராபிக்ஸ் மற்றும் கதை, திரைக்கதை என்று அனைத்தும் சக்தி ஸ்காட் என்ற 24 வயது இளைஞர் கவனித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications