Rajinikanth: படையப்பாவைக் கொண்டாடும் வெளிநாட்டு ரசிகர்கள்.. இது லிஸ்ட்லயே இல்லையேப்பா!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை அதாவது டிசம்பர் 12ஆம் தேதி தனது 75 ஆவது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளார். இவரது பிறந்த நாளைக் கொண்டாட ரசிகர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். படையப்பா படத்தின் ரீ ரிலீஸ் வேலைகளும் சிறப்பாக சென்று கொண்டுள்ளது. படையப்பா படத்தின் மாஸ் காட்சிகளில் ஒன்றை வெளிநாட்டு தம்பதியர் ரீல்ஸ் போல நடித்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியுடன் 50 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 1978ஆம் ஆண்டு வெளியான பைரவி படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தைப் பார்த்து ஸ்ரீதேவி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பார். அதன் பின்னர் அவரது ரசிகர்களில் கணிசமானோர் ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைத்தார்கள். அதன் பின்னரும் சில படங்கள் வெளியானது. ஆனால் 1980ஆம் ஆண்டு வெளியான படமான நான் பாடும் பாடல் படத்தின் டைட்டில் கார்டில் தான் முதன் முதலாக சூப்பர் ஸ்டார் என்று போடப்பட்டது.

அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் என்பதை மிகப்பெரிய பிராண்டாக மாற்றும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டார். சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல், திரையுலகிலும் அவரது படங்களிலுமே கொண்டாடப்பட்டது. சூப்பர் ஸ்டாருக்கு தமிழ்நாட்டை கடந்து தென்னிந்திய மாநிலங்களில் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதேபோல் இந்தி திரையுலகிலும் சூப்பர் ஸ்டார் என்றால் தனி மரியாதையும் வரவேற்பும் உள்ளது. தலைவர் என்றால் இந்தியா முழுவதும் உள்ள திரையுலகில் மனதிற்குள் பட்டென வரும் முகம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் முகம் தான்.
படையப்பா - நீலாம்பரி: இந்தியாவைக் கடந்து வெளிநாடுகளிலும் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. குறிப்பாக ஜப்பானிலும் சீனாவிலும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் என்பது தமிழ்நாட்டில் இருப்பது போல வெறித்தனமாக இருக்கிறது. இப்படி இருக்கும்போது வெளிநாட்டு தம்பதியர் படையப்பா ரீ ரிலீஸை முன்னிட்டு, படையப்பா படத்தின் மிகவும் முக்கியமான காட்சிகளில் ஒன்றான ஊஞ்சல் காட்சியை ரீல்ஸ் போல செய்து வீடியோ பதிவிட்டுள்ளனர். குறிப்பாக நீலாம்பரி மற்றும் படையாப்பா கதாபாத்திரங்களுக்கு இடையிலான வசனங்களையும் உச்சரித்து நடித்துள்ளனர். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ரசிகர்களும் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகிறார்கள்.
சாதனை: படையப்பா படம் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் ரீ ரிலீஸ் செய்யப்படுவதால் ரசிகர்கள் படத்தை மீண்டும் தியேட்டரில் பார்க்க ஆவலாக இருக்கிறார்கள். இதுவரை 15 ஆயிரம் டிக்கெட்டுகளுக்கு மேல் விற்பனை ஆகி ரீ ரிலீஸ் படங்களில் தனி சாதனை படைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











