பட்டிமன்ற பேச்சாளர் ராஜா சாதி குறித்து கேட்டாரா? விளக்க வீடியோவுக்கு பிறகும் விளாசிய வெளிநாடு வாழ் தமிழர்!
சென்னை: அமெரிக்காவில் பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா மீது எழுந்த சாதி தொடர்பான குற்றச்சாட்டு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து எழுந்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்து, ராஜா வீடியோவை வெளியிட்டார். அதன் பின்னர் குற்றம் சாட்டிய நபர் மீண்டும் ராஜா மீது குற்றம் சுமத்தி உள்ளார்.
சமீபத்தில், அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடைபெற்ற தமிழ் சங்க விழாவிற்கு, பேச்சாளர்கள் ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் ஆகியோர் சென்றிருந்தனர். அங்கு அவர்களுக்கு உணவு சமைத்து உபசரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட கார்த்திகேயன் என்பவரின் தங்கை, தனது கசப்பான அனுபவத்தை வெளிப்படுத்தினார். இது குறித்து கார்த்திகேயன் பதிவிட்ட ஒரு முகநூல் பதிவில், தனது தங்கை மிகுந்த ஆர்வத்துடன் உணவு சமைத்து வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது, நிகழ்வில் இருந்தவர்களிடம் ராஜா அவர்களின் ஊர் பெயரைக் கேட்டு, அதன் மூலம் அவர்களின் சாதியை ஊகிக்க முயன்றதாக அப்பதிவில் கூறப்பட்டுள்ளது. கார்த்திகேயனின் தங்கை காரைக்குடி என்றதும், ராஜா அவரிடம் "நீங்கள் செட்டியாரா?" என்று நேரடியாகக் கேட்டுள்ளார். அவர் அமைதியாக இருந்தபோதும், "நீங்கள் வேறு என்ன ஆட்கள்?" என்று மீண்டும் மீண்டும் துருவி ஆராய்ந்து கேட்டுள்ளார்.
சாதிய அடையாளங்களைக் கடந்து வாழ்வதற்காக வெளிநாடு சென்ற இடத்தில், தமிழ்நாட்டிலிருந்து வந்த பிரபல பேச்சாளர் ஒருவர் இத்தகைய கேள்வியைக் கேட்டது தனது தங்கையை மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கியதாகவும், அவர் கண்ணீர் விட்டு அழுததாகவும் கார்த்திகேயன் தனது பதிவில் வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார்.

பட்டிமன்றம் ராஜா விளக்கம்: இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்ததைத் தொடர்ந்து, பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா தனது விளக்க வீடியோவை வெளியிட்டார். அதில், உணவு மிகவும் ருசியாக இருந்ததால், அது செட்டிநாட்டு முறைப்படி சமைக்கப்பட்டதா என்பதை அறியவே "செட்டிநாடா?" என்று கேட்டதாகத் தெரிவித்துள்ளார். மற்றபடி, "செட்டியாரா?" என்று சாதி ரீதியாக தான் கேட்கவில்லை என அவர் விளக்கமளித்தார்.
அந்த வீடியோவில் மேலும் பேசிய ராஜா, "அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் ஒரு நிகழ்வுக்காகச் சென்றிருந்தோம். அங்குப் பல தமிழ் குடும்பங்கள் சமைத்து உணவளிப்பார்கள். சில நேரங்களில், நம் ஊர் உணவைவிட இங்கு சமைக்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். அப்போது, ஊர் பெயரைச் சொல்லி, 'நான் உங்களது ஊரைச் சேர்ந்தவன், மதுரை, திருச்சி, வாடிப்பட்டி, தேனி' என்றெல்லாம் சிலர் கூறுவார்கள். அதுபோல, ஒருவர் காரைக்குடி என்று சொன்னார்.
செட்டி நாடு - செட்டியார்: நான் செட்டிநாடா என்று கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. சாதி ரீதியாக 'செட்டியாரா' என்று நான் கேட்கவில்லை. அவ்வளவு சுவையாக செட்டிநாட்டு உணவு இருக்கிறதே என்ற ஆச்சரியத்தில்தான் நான் கேட்டேன். அவர்கள் யார், என்ன சாதி என்று யோசிக்கும் அளவிற்கு எனக்கு குறுகிய புத்தி இல்லை. இத்தனை வருடங்களாக தமிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழ் மக்களுடன் பயணித்துள்ள நான், ஒருபோதும் சாதி, சமய உணர்வுடன் நடந்ததில்லை; இது என்னுடன் பயணித்தவர்களுக்கும், என்னைச் சந்தித்தவர்களுக்கும் தெரியும்" என்று ராஜா உறுதிபடத் தெரிவித்தார்.
மேலும், "தமிழர் என்ற ஒரே இன அடையாளத்தைத்தான் நான் பெருமையாகக் கருதுகிறேன்; இதில் வேறு எந்த சாதியும் இல்லை" என்று அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்வு பிப்ரவரி 3ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றதாகவும், இதுகுறித்த தகவல்கள் பிப்ரவரி 9ஆம் தேதி, அதாவது நிகழ்வு நடந்து பல நாட்கள் கழித்தே பரப்பப்பட்டதாகவும் ராஜா குறிப்பிட்டார். ஒருவேளை தான் அப்படி பேசியிருந்தால், அந்தச் சகோதரி அப்போதே தன்னிடம் நேரடியாகக் கேட்டிருக்கலாம் அல்லது அன்று மாலை நடந்த பட்டிமன்றத்தில் இது குறித்துப் பேசியிருக்கலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தவறான கருத்துக்கள்: "எந்தக் காலத்திலும் நான் அப்படி இருந்ததும் இல்லை, இருக்கப்போவதும் இல்லை. என் பிள்ளைகளைப் போன்று வந்து அன்புடன் உணவளிக்கும் அவர்களிடம் நான் எப்படி சாதி கேட்பேன்? தமிழ் சொந்தங்களே, தயவுசெய்து இந்தத் தவறான கருத்துகளைப் புறந்தள்ளுங்கள். கடவுள் அறிய, நான் அப்படி நடந்ததாக எனக்குத் தெரியவில்லை. இந்த நீண்ட பயணங்களில் சாப்பாடு கொடுத்து எங்களைக் காப்பாற்றும் அவர்களை நான் எப்படி சாதி கேட்பேன்? தவறான புரிதல் இருந்தால், கருத்துக்களை மாற்றிக்கொள்ளுங்கள். முகநூலில் இதை பரப்புபவர்கள் இந்த உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் என்று அவர் தனது அன்பான வேண்டுகோளை முன்வைத்தார்.
காட்டமான பதில்: இவரது இந்த வீடியோவிற்கு, கார்த்திகேயன் என்ற அந்த நபர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள கடைசி பதிவில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் மேலும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, , " எனது தங்கையின் நலம் பொருட்டு இந்த பிரச்சினையை நான் கடந்து செல்லவே விரும்புகின்றேன். ஆனால் இதனை அவதூறு என்று சொன்னால் நிச்சயம் ஏற்கமாட்டேன். அவரை அவதூறு செய்வதற்கான அவசியம் எனக்கு இல்லை. ஒரு பட்டிமன்ற பேச்சாளரை பார்க்கப் போகிறோம் என்ற ஆர்வத்தில் சமைத்துக் கொண்டு போன என் தங்கைக்கும் கிடையாது.
மேலும் நேற்று இரவு ராஜா, எனது தங்கையின் கணவரை தொடர்பு கொண்டு சமரசம் பேசுவதற்கு வெகு நேரம் முயற்சித்தார். பின்னர் இதனை முடிவுக்கு கொண்டு வர அவர் அங்குள்ள கட்ஸ் அமைப்புடன் மற்றும் ராஜாவுடன் கான்ஃபரன்ஸ் கால் போட்டு பேசினார்கள். அதில் ராஜா நான் செட்டியாரா என்று கேட்கவில்லை செட்டிநாடு என்றுதான் சொன்னேன் என்ற மழுப்பலை தான் முன்வைத்தார்.இல்ல சார் அதற்கு அடுத்து நீங்கள் யார் என்று கேட்டிருக்கிறீர்கள். எனது மனைவிக்கு உங்கள் மீது குற்றச்சாட்டு வைக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மீது அவருக்கு அளவு கடந்த மரியாதை இருந்தது அதனால் தான் விரும்பி சமைத்து எடுத்துக் கொண்டு வந்தார். அவரை நீங்கள் இவ்வாறு கேட்டது உண்மை. அதனால் நிலை குலைந்து போய் அதிர்ச்சி அடைந்ததும் உண்மை. அந்த வருத்தத்தை எங்களிடம் பகிர்ந்து கொண்டார் என்று எனது தங்கையின கணவர் அழுத்தம் திருத்தமாக கூறினார்.
வருத்தம் தெரிவித்த ராஜா: அதன் பின் ராஜா அவ்வாறு பேசியதற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார். இப்படி ஒரு தன்னிலை விளக்கம் வீடியோ பதிவை போட போகிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார். தாராளமாக செய்யுங்கள் என்று எனது தங்கையின் கணவர் பெருந்தன்மையாக கூறியிருக்கிறார். இது தெரியாமல் அரைகுறை புரிதலுடன் சிலர் இதனை அவதூறு என்று எழுதுவது அபத்தம். அபத்தம் தொடரக்கூடாது இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றே எழுதுகின்றேன். அதனாலயே இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர நான் மேலும் இதைப்பற்றி விரிவாக எழுத விரும்பாமல் சுருக்கமாக எழுதி இன்று காலை பதிவிட்டிருந்தேன். எனது தங்கை துணிச்சலற்றவர். அதுதான் இங்கு பிரச்சனை.
மற்றபடி இது திட்டமிட்ட அவதூறு என்ற சிலர் எழுதுவது தான் அவதூறு. அவர் மீது அவதூறு சொல்லி எனக்கு என்ன ஆகப் போகின்றது ? எந்த காலத்திலும் லைக் வாங்கவும் நான் எழுதியதில்லை. நான் முகநூலில் எழுதுவது எழுத்தின் மேல் உள்ள ஒரு பிடிப்பு தான். இதற்கு மேல் இதனை தொடர வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இதுவே இது குறித்தான எனது கடைசி பதிவாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











