திருமணம் செய்வதாகக் கூறி நடிகையை ஏமாற்றிய வழக்கு..ஜாமினில் வந்த ஒளிப்பதிவாளருக்கு மீண்டும் சிக்கல்
ஐதராபாத்: திருமணம் செய்வதாகக் கூறி நடிகையை ஏமாற்றியதாக கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்த பிரபல ஒளிப்பதிவாளருக்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.
தெலுங்கு நடிகை சாய் சுதா. நானி, விஜய் தேவரகொண்டா நடித்த யவடே சுப்ரமணியம் என்ற படம் மூலம் பிரபலமடைந்தவர்.
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'அர்ஜூன் ரெட்டி' படத்தில், ஹீரோயின் தோழியாக நடித்திருந்தார்.

சூப்பர் ஹிட் படங்கள்
மேலும் சில தெலுங்கு படங்களில் நடித்துள்ள இவர், ஷியாம் கே.நாயுடு என்ற ஒளிப்பதிவாளரை காதலித்து வந்தார். ஷியாம் கே.நாயுடு, மகேஷ்பாபு நடித்த போக்கிரி, பிசினஸ்மேன், ஜூனியர் என்.டி.ஆர் நடித்த டெம்பர், வெங்கடேஷ் நடித்த பாடிகார்ட், ராம்சரணின் சிறுத்தா, அல்லு அர்ஜுன் நடித்த ஜுலாயி உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.

நெருங்கிப் பழகினார்
பிரபல தெலுங்கு ஒளிப்பதிவாளரான சோட்டா கே.நாயுடுவின் சகோதரர். யாருடா மகேஷ், மாநகரம், மாயவன் படங்களில் ஹீரோவாக நடித்த சந்தீப் கிஷனின் உறவினர். நடிகை சாய் சுதாவிடம், ஒளிப்பதிவாளர் ஷியாம் கே.நாயுடு திருமணம் செய்வதாக வாக்குறுதிக் கொடுத்திருந்தாராம். இதையடுத்து அவரிடம் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

அதிரடி புகார்
ஆனால், வாக்குறுதி அளித்தபடி அவரை திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் நடிகை சாய் சுதா, ஐதராபாத்தில் உள்ள எஸ்.ஆர்.நகர் போலீஸ் ஸ்டேஷனில், அவர் மீது அதிரடியாக புகார் அளித்தார். தன்னைத் திருமணம் செய்வதாக ஏமாற்றி, மோசடி செய்துவிட்டார் என்று புகாரில் கூறியிருந்தார். விசாரணை நடத்திய போலீசார், அவரை கைது செய்தனர்.

சமாதானமாக
கைது செய்யப்பட்ட ஷியாம் கே.நாயுடு ஏற்கனவே போதைபொருள் வழக்கில் பரபரப்பாகப் பேசப்பட்டவர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் தாங்கள் சமாதானமாகச் சென்றுவிடுவதாக, நம்பள்ளி நீதிமன்றத்தில் கூறியதை அடுத்து, இவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால், அதற்காக வழங்கப்பட்ட மனுவில், நடிகை சாய் சுதாவின் கையெழுத்தை மோசடியாகப் போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மீண்டும் சிக்கல்
இதுபற்றி நடிகை சாய் சுதா, நீதிமன்றத்தில் தெரிவித்தார். விசாரித்த நீதிமன்றம், அவரது ஜாமினை உடனடியாக ரத்து செய்தது. பின்னர் அவருக்கு எதிராக 2 வழக்குகளை பதிவு செய்யுமாறு போலீசுக்கு உத்தரவிட்டது. இதனால் ஷியாம் கே நாயுடுவுக்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. அவர் மீண்டும் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது. இந்த மோசடி சம்பவம் டோலிவுட்டில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











