விடாமல் துரத்தும் அந்த பிரச்சனை.. தனுசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.. என்ன மேட்டர் தெரியுமா?
சென்னை: போலி ஆவணங்கள் சமர்பித்ததாக நடிகர் தனுஷ் மீது மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் ஐகோர்ட் மதுரைக்கிளையில் குற்றவியல் சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் நடிகர் தனுசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகன் நடிகர் தனுஷை தனது மகன் என கதிரேசன் என்பவர் தொடர்ந்த வழக்கு பெரும் பரபரப்பை கிளப்பியது.
பின்னர், அது பற்றிய எந்தவொரு தகவலும் இல்லாத நிலையில், தற்போது அது தொடர்பாக தனுசுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நடிகர் தனுஷ்
இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கு செல்வராகவன் மற்றும் தனுஷ் என இரு மகன்கள் உள்ளனர். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தனுஷை நடிகராக அண்ணன் செல்வராகவன் மற்றும் அப்பா கஸ்தூரி ராஜா இருவரும் இணைந்து உருவாக்கினார்கள். தொடர்ந்து, அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் தனுஷ்.

தனுஷ் எங்க மகன்
நடிகர் தனுஷ் தனது மகன் என கடந்த 2017 ஆம் ஆண்டு மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பான விசாரணையின் போது, நடிகர் தனுஷ் தரப்பில் அளிக்கப்பட்ட ஆவணங்களில் போலியான ஆவணங்கள் இருப்பதாக கதிரேசன் அளித்த புகாரின் அடிப்படையில், முறையாக விசாரித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது.

போலி ஆவணங்கள்
ஆனால் போலி ஆவணங்கள் குறித்து விசாரிக்க கோரிய வழக்கை மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழின் உண்மைத் தன்மையை அறிய கீழமை நீதிமன்றம் அதனை மதுரை மாநகராட்சிக்கு அனுப்பி இருந்த நிலையில், அதனை கருத்தில் கொள்ளாமலேயே நீதித்துறை நடுவர் வழக்கை தள்ளுபடி செய்தது.

தனுசுக்கு நோட்டீஸ்
அப்படி தள்ளுபடி செய்தது, ஏற்கத்தக்கது அல்ல என்றும், அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும் கதிரேசன் ஐகோர்ட் மதுரைக்கிளையில் குற்றவியல் சீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக நடிகர் தனுசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.


Click it and Unblock the Notifications











