நடிகராக மாறும் முன்னாள் டிஜிபி... என்ன படத்தில் தெரியுமா?
சென்னை : ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகி உள்ள குலசாமி படத்தில் மூலம் நடிகராக மாறியுள்ளார் முன்னாள் டிஜிபி.
எம்.ஐ.கே. புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவாகி உள்ள குலசாமி திரைப்படத்தை குட்டிபுலி ஷரவண ஷக்தி இயக்க உள்ளார். இப்படத்திற்கு விஜய்சேதுபதி திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இதில் விமல், தான்யா ஹோப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வைட் ஆங்கிள் ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஜாங்கிட் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அவர் போலீஸ் அதிகாரியாகவே குலசாமி படத்தில் நடித்திருக்கிறார். குலசாமி திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை ஜாங்கிட் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
1985 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான ஜாங்கிட், ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். 1985ம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி ஆக தன்னுடைய காவல் பணியை தொடங்கினார்.

2001ம் ஆண்டு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் தொடர் கொலை கொள்ளைகளை நடத்திய முகமுடி கொள்ளை கும்பலை ராஜஸ்தானுக்கே சென்று என்கவுண்டர் செய்து சிலரை கைதும் செய்து முகமுடி கொள்ளைக்கு முடிவுரை எழுதியவர் ஜாங்கிட். பவாரியா கொள்ளை கும்பலை மையமாக வைத்து இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப்பட்டது.
சென்னை கூடுதல் கமிஷனர் மற்றும் புறநகர் கமிஷனராக பணிபுரிந்தபோது, ரவுடிகள், பங்க் குமார், வெள்ளை ரவி ஆகியோரை என்கவுண்டர் செய்தார். காவல்துறையின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். நேர்மையான அதிகாரியாக இருந்த ஜாங்கிட், காவல்துறைக்கு ஆற்றிய பணியை பாராட்டி 2 முறை குடியரசுத்தலைவர் பதக்கமும், ஒரு முறை பிரதமர் பதக்கமும், மெச்சத் தகுந்த பணிக்காக 2 முறை தமிழக முதல்வரின் பதக்கத்தையும் பெற்றுள்ளார். 2019ம் ஆண்டு பணிஓய்வு பெற்றார்.


Click it and Unblock the Notifications











