சோகத்தில் இந்தியா.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு.. விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்
சென்னை: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அதாவது டிசம்பர் 26ஆம் தேதி வயது மூப்பு மற்றும் உடல் நலக்கோளாறால் மறைந்தார். அவருக்கு வயது 92. இவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், அனைத்து மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள இவரது மறைவுக்கு திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கடந்த 1932இல் செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி பிறந்தார். இவர் பிறந்த மேற்கு பஞ்சாப், இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தான் வசம் சென்றது. இவர், காங்கிரஸ் கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரையிலான பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான ஆட்சியில் நிதி அமைச்சராக பதவி வகித்தவர்.

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும் இவர் இருந்துள்ளார். இதுமட்டும் இல்லாமல், 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் பிரதமராக இரண்டு முறை பதவி வகித்தவர். பொருளாதாரத்தில் கைதேர்ந்தவரான மன்மோகன் சிங், ஆட்சியின் போது, உலகம் முழுவதும் பொருளாதாரம் ஆட்டம் கண்ட போது, இந்தியாவின் பொருளாதாரத்தில் கொஞ்சம் கூட சரிவு இல்லாமல், இருந்தது என்றால் அதற்கு மன்மோகன் சிங்கின், திறமையான நிர்வாகம்தான் காரணம்.
மறைவு: இவருக்கு ஏற்கனவே இருந்தயம் தொடர்பான நோய்கள் இருந்தது. இதற்காக முறையான சிகிசசை பெற்று வந்த இவர், கடந்த சில தினங்களாக மூச்சுத் திணறல் காரணமாக அவதியுற்று வந்துள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலன் அளிக்கவில்லை. இதனால் அவர் மரணமடைந்தார். இந்தத் தகவல் பலரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது.
விஜய்: இப்படியான நிலையில், பாலிவுட், டோலிவுட், மாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகரும் தவெக தலைவருமான விஜய், " முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு ஆழ்ந்த துயரத்தை அளிக்கின்றது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, இந்தியாவை சிறப்பான ஞானத்துடனும் நேர்மையுடனும் வழிநடத்தினார். அவர் குறைவாகப் பேசினாலும், அதிகமாக சாதித்தார். இந்திய பொருளாதாரத்திற்காகவும் நாட்டுக்காகவும் அவர் செய்தவை, காலத்திற்கும் போற்றப்படும். இவரை இழந்து துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இறுதி மரியாதை: இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் தொடங்கி, சின்னத்திரை பிரபலங்கள் வரை பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுமட்டும் இல்லாமல், நாளை மன்மோகன் சிங்கிற்கு இறுதி மரியாதை நடைபெறவுள்ளது. இப்படியான நிலையில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி செல்கின்றார்.


Click it and Unblock the Notifications











