மெர்சல் படத்திற்க்கு இலவச விளம்பரம் செய்யும் பாஜக!
தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் செய்யப்பட்ட படம் மெர்சல். இதில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், இயக்குநர் எஸ்ஜே சூர்யா நடித்துள்ளனர். இப்படம் தொடங்கியதில் இருந்து தணிக்கை சான்றிதழ் பெறுவதை வரை சந்தித்த தடைகள், நெருக்கடிகள் பற்றிய செய்திகள் ஊடகங்களில் முக்கிய செய்தியானது.
ஒரு வழியாக தீபாவளி அன்று மிகப் பெரும் ஓபனிங்குடன் ரசிகர்கள் மெர்சல் படத்தை பார்த்தனர்.

மெர்சல் படம் பற்றி எதிர்மறையாக ரசிகர்கள், ஊடகங்கள் விமர்சித்தாலும் வசூல் குறையவில்லை.
இப்படம் சந்தித்த சர்ச்சைகள் ஊடகங்களில் முக்கிய செய்தியாக இடம் பெற்றது படத்திற்கு எதிர்பார்ப்பைக் கூட்டியது.
இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஜிஎஸ்டி வரி சம்பந்தமான வசனங்கள் பாரதிய ஜனதா கட்சியினரை கோபமுற வைத்துள்ளது. மத்திய - மாநில அரசுகளை கடுமையாக சாடும் விமர்சனங்கள் கடந்த காலங்களில் தமிழ் படங்களில் பேசப்பட்டுள்ளது. அதைப் பற்றி அப்போதைய காங்கிரஸ், கழகங்கள் தலைமையிலான அரசுகள் அலட்டிக் கொண்டதே இல்லை.
தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன், "தான் நடிக்கும் படத்திற்கு என்ன சம்பளம் வாங்குகிறோம் என பொது வெளியில் கூறாதவர்கள் நடிகர்கள். அதற்கு முறைப்படி வருமான வரி கட்டாத நடிகர்கள் அரசின் திட்டங்களை விமர்சிக்க தகுதி இல்லாதவர்கள்," என்கிறார்.
மத்திய இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணனோ அரசை பற்றி இடம் பெற்றுள்ள காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும் என மல்லுக்கட்டுகிறார்.
மத்திய தணிக்கை துறையால் முறைப்படி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள மெர்சல் திரைப்படத்திற்கு எதிராக ஆளும் கட்சி தலைவர்கள் பேசி வருவது படைப்பு சுதந்திரத்திற்கு எதிரான செயலாகவே பார்க்கப்படுகிறது.
இவர்களது எதிர்ப்பு பேச்சு மெர்சல் படத்திற்கு கூடுதல் விளம்பரத்தைக் கொடுத்துள்ளதுடன், வசூலையும் அதிகரிக்கவே செய்துள்ளது என்கின்றனர் பாக்ஸ் ஆபீசில்!
-ஏகலைவன்


Click it and Unblock the Notifications











