Prakash Raj Net Worth: பிரகாஷ் ராஜுக்கு இத்தனை வயசாகிடுச்சா?.. சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?
பெங்களூர்: நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூரில் பிறந்து வளர்ந்த பிரகாஷ் ராஜ் 1988ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான மிதிலேய சீதேயரு படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பல கன்னட படங்களில் நடித்து வந்த பிரகாஷ் ராஜ் பிரபு நடிப்பில் வெளியான டூயட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல படங்களில் பிரகாஷ் ராஜ் நடித்துள்ள நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்களை இங்கே காணலாம்.
59வது பிறந்தநாள்: 1965ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி பெங்களூரில் பிரகாஷ் ராஜ் பிறந்தார். அவருக்கு இன்றுடன் 59 வயது நிறைவடைகிறது. பிரகாஷ் ராஜ் போல ஒரு இணையற்ற குணசித்ர நடிகர் இந்தியாவில் விரல் விட்டு எண்ணும் அளவில் தான் உள்ளனர். நாசர், பிரகாஷ் ராஜ் எல்லாம் சினிமா உலகுக்கு கிடைத்த வரம் என்று தான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு எந்தவொரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த படத்தின் ஹீரோவையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு நடிப்பு அரக்கர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
300 ரூபாய் சம்பளம்: நாடகங்களில் ஆரம்பத்தில் நடித்து வந்த பிரகாஷ் ராஜுக்கு மாத சம்பளமே 300 ரூபாய் தான். ஆனால், இன்று ஒரு நாளைக்கு அவர் சூட்டிங் போனாலே பல லட்சங்கள் சம்பாதித்து விடுவார். 2000க்கும் மேற்பட்ட நாடகங்களில் பிரகாஷ் ராஜ் நடித்திருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால், பிரகாஷ் ராஜ் நடித்து வெளியான இருவர் படத்துக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்ற பிரகாஷ் ராஜ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை காஞ்சிவரம் படத்தில் நடித்து வென்றார். சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதை கன்னட படமான புட்டகன்னா ஹைவே படத்திற்காக வென்றிருக்கிறார். இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என சினிமாவில் இவர் புகுந்து விளையாடாத துறையே இல்லை என்று சொல்லலாம்.
சொத்து மதிப்பு: சுமார் 400 படங்களில் நடித்துள்ள பிரகாஷ் ராஜ் இதுவரை 35 கோடி முதல் 40 கோடி ரூபாய் வரை சொத்துக்களை சேர்த்து வைத்திருப்பதாக கூறுகின்றனர். பெங்களூர், சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இவருக்கு வீடுகள் இருப்பதாகவும் கொடைக்கானலில் பண்ணை வீடும் இருப்பதாக கூறுகின்றனர். இந்த ஆண்டு வெளியான மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படம் வரை வில்லனாக நடித்து மிரட்டியுள்ளார் பிரகாஷ் ராஜ். மேலும், புஷ்பா 2, தேவரா, ராயன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











