Vijay - தம் அடிக்கிற ஸ்டைல், உருவ கேலி, மில்லி போனா கில்லி.. விஜய்க்கு சமூக அக்கறை உண்டா?

சென்னை: Vijay (விஜய்) விஜய் நடிக்க வந்த ஆரம்பத்தில் அவரை ஒரு பத்திரிகை கடுமையாக உருவ கேலி செய்தது. எனவே அந்த வலி என்னவென்று அவருக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் பிகில் படத்தில் அப்படி பேச ஏன் ஒத்துக்கொண்டார் என்று தெரியவில்லை.

இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் விஜய். அடுத்தப் படத்திற்கு கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் சம்பளத்தை நெருங்கிவிட்டார். இந்த அரியணையில் ஏறுவதற்கு அவர் போட்ட உழைப்பு அதிகம். தந்தையின் துணையோடு வந்தாலும் திறமையின் துணை இருந்தால்தான் சினிமாவில் நிலைத்து நின்று வெல்ல முடியும் என்பதற்கு பலருக்கும் உதாரணமாக இருக்கிறார் விஜய்.

லியோ: அவர் இப்போது லியோ படத்தில் நடித்துவருகிறார். படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. நிச்சயம் இந்தப் படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்து விஜய்யை அடுத்த படிக்கு நகர்த்தி செல்லும் என்பதுதான் பலரது ஆரூடமாக இருக்கிறது. இப்படி உச்சம் வந்திருக்கும் விஜய் ஆரம்பத்தில் பல சர்ச்சை படிகளை ஏறித்தான் வந்தார். அதுகுறித்து ஒரு ரீவைண்டை இதில் பார்க்கலாம்.

அம்மா வயதில் இருப்பவருக்கு சோப்பா?: 90களில் அறிமுகமான விஜய்யை வைத்து இயக்க எந்த இயக்குநரும் முன்வரவில்லை. இதனால் எஸ்.ஏ.சந்திரசேகரே ஆரம்பத்தில் பல படங்களை விஜய்யை வைத்து இயக்கினார். அப்படி அவர் இயக்கிய படங்களில் ஒன்றுதான் ரசிகன். காதல் கதையாக அது இருந்தாலும் படத்தின் ஒரு காட்சி இன்றுவரை விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. சங்கவியின் தாய் வேடத்தில் நடித்த ஸ்ரீவித்யாவுக்கு அந்தப் படத்தில் விஜய் சோப்பு போடும் காட்சி ஒன்று இருக்கும்.

அதை இப்போது பார்த்தாலும் அனைவருமே முகம் சுளிப்பார்கள். இளைஞர்களிடம் கனெக்ட் ஆனால்தான் சினிமாவில் வெல்ல முடியும் என்ற நிலை இப்போதும் இருக்கிறது. அதை மனதில் வைத்துதான் விஜய்யின் ஆரம்ப கால படங்களில் க்ளாமர் காட்சிகளும், பாடல்களும் தூக்கலாகவே இருந்தன. இதில் விஷயம் என்னவென்றால் அதை படமாக்கியது விஜய்யின் தந்தை என்பதுதான். தனது மகனின் வெற்றிக்காக தந்தை எந்த எல்லைக்கும் செல்லலாம்.

ஆனால் அந்த பயணமும், அதன் முடிவும் சமூகத்துக்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை யோசித்திருக்கலாம். எஸ்.ஏ.சியின் கண்ணுக்கும், விஜய்யின் கண்ணுக்கும் அப்போது பிரதானமாக இருந்தது ஒன்றே ஒன்றுதான். அது, தங்கள் படத்துக்கு இளைஞர்கள் நிறைய வர வேண்டும். அதன் மூலம் வெற்றியை அறுவடை செய்ய வேண்டும். ஆனால் அது ரசிகனின் ரசிக்கும்படி இல்லை. குறிப்பாக அந்தக் காட்சியின் மூலம் ரசிகர்களின் சிந்தனையையும், பார்வையையும் விஜய், எஸ்.ஏ.சி ஆகிய இருவரும் மலினமாகவே கருதிவிட்டார்கள் என்ற கூற்று இப்போதும் உண்டு.

குடும்ப கதைதான் ஆனாலும்?: எஸ்.ஏ.சியின் அந்த ஃபார்முலா ஒருகட்டத்தில் ஒர்க் அவுட் ஆகாமல் போக உடனடியாக விஜய்யை வைத்து வண்டியை குடும்ப செண்ட்டிமெண்ட் பக்கம் திருப்பினார். குடும்ப செண்ட்டிமெண்ட்டுக்கு எப்போதும் டிமாண்ட் அதிகம் என்பதால் அது ஓரளவுக்கு ஒர்க் அவுட் ஆக ஆரம்பித்தது. அப்படிப்பட்ட சமயத்தில் வந்ததுதான் ப்ரியமானவளே திரைப்படம்.

From Rasigan to Leo Actor Vijay Movie Controversies

சிம்ரன், விஜய், எஸ்பி பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான் அந்தப் படம் ஹிட்டானலும் திருமணம் என்ற உறவை அக்ரிமெண்ட்டுக்குள் அடக்கிய அவலமும் அந்தப் படத்தில்தான் அரங்கேறியது. அதுமட்டுமின்றி அந்தப் படத்தில் நடிக்கவே மாட்டேன் என விஜய் சொன்னதாக ஒரு பேட்டியில் கூறினார் எஸ்.ஏ.சி. அதற்கு ஒரு காரணத்தையும் அவர் கூறியிருந்தார், அதாவது படத்தில் ஹீரோயினுக்குத்தான் முக்கியத்துவம் இருக்கிறது எனக்கு என்ன இருக்கிறது. நான் நடிக்கமாட்டேன் என விஜய் கேட்டாராம்.

அதில் என்ன தவறு இருக்கிறது. சிம்ரனுக்கு அதிக ஸ்கோப் இருக்கும்போது தன்னுடைய கேரக்டர் அடிபப்ட்டுவிடுமோ என ஒரு நடிகன் அச்சப்படுவது குற்றமா என்ற கேள்வி எழலாம். ஆனால் ரஜினி போன்ற சூப்பர் ஸ்டாரே சந்திரமுகி என்ற பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து நடித்தபோது விஜய் அந்தக் காலகட்டத்தில் எந்த யோசனையும் இல்லாமல் நடித்திருக்கலாம். இல்லை என்றால் எஸ்.ஏ.சி இதனை வெளியில் சொல்லாமல் இருந்திருக்கலாம். இதை எல்லாம் கேட்கும்போது பெண் தன்னை விட பலமாக இருப்பதை விஜய் விரும்பாதவரோ என்ற எண்ணம் எழுவதை தடுக்க முடியவில்லை என்கின்றனர் ஒரு தரப்பினர்.

தம் அடிக்கிற ஸ்டைல்: எஸ்.ஏ.சி பெரியண்ணா படத்தை இயக்கியபோது அதில் விஜய்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் என்ன காரணமோ சூர்யா உள்ளே வந்தார். படத்தில் ஒரு பாடல் மெகா ஹிட்டானது. நான் தம் அடிக்கிற ஸ்டைலை பார்த்து தனலட்சுமி விரும்புச்சு என்று விஜய் பாடிய பாடலை இன்றுவரை அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். ஆனால் ஒரு பெண்ணின் காதலை பெறுவதற்கு சிகரெட் அடிக்கும் ஸ்டைல் மட்டும் போதுமா.

அவ்வளவு எளிதாக ஒரு பெண்ணை விரும்ப வைத்துவிட முடியுமா என்ற குரல்களும் கேட்க ஆரம்பித்தன. அதுமட்டுமின்றி தம் அடிக்கிறது ஒரு ஸ்டைல் என்ற கருத்து ரஜினியால் மேலோங்கி இருக்க அந்தக் கருத்துக்கு மேலும் வலு சேர்த்தது விஜய்யின் குரல். அந்தப் பாடலை விஜய் எதற்காக பாடினார். தந்தையின் சொல்லை மீற முடியாமலா இல்லை வியாபாரத்திற்காகவா என்ற கேள்வியை சிலர் முன் வைக்கின்றனர்.

வரிகளில் பொது கருத்து; வசனத்தில் இரட்டை அர்த்தம்: குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு விஜய் திருமலை படத்தின் மூலம் கமர்ஷியல் பாதையில் பயணப்பட்டார். அப்படி அவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக ஹிட்டடிக்க விஜய் சரசரவென்று உயர்ந்தார். ஓபனிங் பாடல்களில் பொது கருத்துக்களும், சமூக அக்கறையுள்ள விஷயங்களும் வரும்படி வரிகள் அமைவதை உறுதிப்படுத்திக்கொண்டார். ஆனால் சில படங்களின் காட்சிகளோ அதற்கு நேர்மாறாக அமைந்தன.

வில்லு: உதாரணமாக வில்லு படத்தை எடுத்துக்கொள்வோம். அந்தப் படத்தின் ஓபனிங் பாடலில் அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன் என்ற ஒரு வரி வரும். ஈழ போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் அந்தப் பாடல் உருவானது. அதனால் அந்த வரி பலராலும் பாராட்டப்பட்டது. ஆனால் அதே படத்துக்குள் கிணற்றடியில் நயன்தாராவிடம் அவர் பேசும் இரட்டை அர்த்த வசனம் பாடலில் விஜய் மீது தோன்றிய பிம்பத்தை உடைத்து சுக்கு நூறாக்கியது.

உருவ கேலி: விஜய் நடிக்க வந்த ஆரம்பத்தில் அவரை ஒரு பத்திரிகை கடுமையாக உருவ கேலி செய்தது. எனவே அந்த வலி என்னவென்று அவருக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் பிகில் படத்தில் பாண்டியம்மாவை (ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா) குண்டம்மா என சொல்வதற்கு அவர் எப்படி ஒத்துக்கொண்டார் என்று தெரியவில்லை. அந்த சீனுக்கு நியாயம் சேர்க்கும்விதமாக இனி அவள் ஆட்டம் எப்படி இருக்கும் பார் என்று நயனிடம் விஜய் பேசுவது போன்று இருக்கும். ஆனால் ஒருவரை உருவ கேலி செய்தால் அவர் உளவியல் ரீதியாக ரொம்பவே அடிபடுவார் என்பதுதான் உண்மை. அதை அட்லியூம், விஜய்யும் எப்படி உணராமல் போனார்கள் என்று தெரியவில்லை என்கின்றனர் விஜய்யை விமர்சிக்கும் சிலர்.

க்ளாமர் காட்சியோ, இரட்டை அர்த்த வசனமோ, உருவ கேலி சம்பந்தப்பட்ட காட்சியோ எதுவாக இருந்தாலும் இயக்குநர் சொல்கிறார் விஜய் செய்கிறார் என்று கூறலாம். ஆனால் அரசியலுக்கு வர ஆசைப்படும் விஜய்; இளம் தலைமுறையினரிடம் தன்னை தளபதியாகவும், தலைவராகவும் உருவகப்படுத்திக்கொள்ள துடிக்கும் விஜய் தனக்கு இருக்கும் பொறுப்புணர்ச்சியை தெரிந்துகொண்டு அந்த மாதிரி வசனம் பேசமாட்டேன், காட்சிகளில் நடிக்க மாட்டேன் என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லியிருக்க வேண்டும். ஆனால் விஜய்யோ வியாபாரத்திற்காக எந்த எல்லைக்கும் செல்வார் போல என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.

லேட்டஸ்ட் சர்ச்சை: விஜய்யின் சமீபத்திய நடவடிக்கைகள் அவரது அரசியல் வருகையை உறுதிப்படுத்தியிருக்கின்றன. அப்படி இருக்கும்போது லியோ படத்தின் பாடலில் வாயில் சிகரெட்டுடன் விஜய் போடும் ஆட்டம் அவரது அரசியல் ஆசையை ஆட்டம் காண வைக்கும் என்பதுதான் உண்மை. அதுமட்டுமின்றி சில வருடங்களுக்கு முன்னர் விஜய் ஒரு பேட்டியில் இனி சிகரெட் அடிக்கும்படி காட்சிகளில் நடிக்க மாட்டேன் கூறியிருந்தார்ர்.

ஆனால் அப்படி சொல்லி வெகு சில வருடங்களுக்குள்ளாகவே லியோவில் சிகரெட்டுடன் தோன்றுகிறார். பத்தாது பாட்டில் நான் குடிக்க அண்டால கொண்டாட சியர்ஸ் அடிக்கா; மில்லி உள்ள போனா கில்லி வெளில வரும்; விரல் இடுக்கில் தீப்பந்தம் நான் கொளுத்தவா என பாடுகிறார்.

எனில் அரசியல் ஆசை உள்ள விஜய் அரசியல்வாதிகள் போலவே தன்னுடைய வாக்குறுதியை வியாபாரத்திற்காக காற்றில் பறக்கவிட்டுவிட்டாரா?.. காத்துல ஊழல் செஞ்ச நாடு இது என்று கத்தியில் கத்தி பேசிய விஜய் பொது விஷயம் எதற்கும் குரலே கொடுக்காமல் இருக்கிறார். மாறாக மாணவ, மாணவிகளை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். வெறும் நலத்திட்ட உதவிகள் மட்டுமே விஜய்யை ஒரு தலைவர் என்ற நாற்காலியில் அமர வைத்துவிடுமோ என்ற கணக்கை அவர் போட்டிருக்கிறார். அது ஒருபோதும் பலிக்காது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அதுமட்டுமின்றி இனி வரும் காலங்களில் விஜய் சமூக அக்கறையுள்ள விஷயங்களில் குரல் கொடுத்து கமர்ஷியல் பாதையிலிருந்து விலகி சூர்யா செய்த ஜெய் பீம் போன்ற சமூக நோக்குடன் கூடிய கதைக்களத்தில் நடித்தால்தான் கோட்டையை பிடிக்க வேண்டும் என்ற அவரது கணக்கு பலிக்கும். இல்லையென்றால் அந்தக் கணக்கு வெறும் கற்பனையாகவே போய்விடும் என்கின்றனர் விஜய்யின் மீது அக்கறை உள்ளவர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X