ருத்ரதாண்டவம் ஆடிய கஜா: முதல்வரை சந்தித்து ரூ. 5 லட்சம் அளித்த விவேக்
சென்னை: கஜா புயல் நிவாரண நிதிக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ரூ. 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் நடிகர் விவேக்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் நிவாரண நிதி அளித்து வருகிறார்கள். மேலும் நிவாரண பொருட்களை டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் விவேக் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்து கஜா புயல் நிவாரண நிதிக்காக ரூ. 5 லட்சம் அளித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
சோறு போடுகிற விவசாயியிக்கே சோற்றுக்கு கஷ்டமாகவும், அவர்களுடைய கால்நடைகள் போய், வாழ்வாதாரம் போய், மரமெல்லாம் போய், மீனவர்களுக்கு படகெல்லாம் போய், வலை எல்லாம் போய் ஒரு ருத்ர தாண்டவம் ஆடிவிட்டு போய்விட்டது கஜா புயல்.
அவர்கள் ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறார்கள். தென்னை மரத்தை நட வருமாறு என்னை அழைக்கிறார்கள். ஒரு தென்னை மரத்தை நட்டால் அது வளர்ந்து பலன் தர 10 அல்லது 15 ஆண்டுகள் ஆகும். அது சரியான நிவாரணமாக இருக்காது. அவர்களுக்கு தற்போது தேவை வாழ்வாதாரம். நீர், இடம், உணவு, உடை, மருந்துகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு மக்களை பார்க்கப் போகிறேன். மற்றவர்களும் அதையே செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
இது பற்றி அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
இன்று முதல் அமைச்சரிடம் நிவாரண நிதி அளித்தாயிற்று. நாளை நாகை சென்று மாவட்ட ஆட்சியரிடம் நிவாரணப் பொருட்களை அளிக்கிறேன். அவர்கள் தேவை கடல்; எனது பங்கு, துளி!. இருப்பினும் ஒரு மனத் திருப்தி என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











