இளையராஜாவை சந்தித்த கங்கைஅமரன்… உறவுகள் தொடர்கதை… ட்விட்டரில் நெகிழ்ச்சி பதிவு !
சென்னை : தனது சகோதரர் இளையராஜாவை, கங்கை அமரன் நேரில் சந்தித்து பேசிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
நீண்ட நாட்களாக பேசிக்கொள்ளாமல் இருந்த அண்ணன், தம்பி இருவரும் சந்தித்து அன்பை பகிர்ந்துள்ளனர்.
இந்த புகைப்படத்தை கங்கை அமரன் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.

கங்கை அமரன்
இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய சகோதரர் கங்கை அமரன். இவர் இசையமைப்பாளர், பாடலாசிரியர் , திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், நடிகர் என பன்முகத் திறமைக்கொண்டவர். இவர் கோழி கூவுது, எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் உட்பட 19 திரைப்படங்களை இயக்கி உள்ளார். இதில் கரகாட்டக்காரன் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

பல ஹிட் பாடல்கள்
சுவரில்லா சித்திரங்கள், மவுன கீதங்கள், வாழ்வே மாயம், என் தங்கச்சி படிச்சவ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 16 வயதினிலே படத்தில் செந்தூரப்பூவே, முள்ளும் மலரும் படத்தில் நித்தம் நித்தம் நெல்லுசோறு, நிழல்கள் படத்தில் வரும் பூங்கதவே தாழ்திறவாய் என்று 35-க்கும் அதிகமான பாடல்களையும் எழுதி உள்ளார். பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சந்தித்துக் கொண்டதும் இல்லை
கங்கைஅமரனுக்கும் இளையராஜாவுக்கும் சின்னராமசாமி பெரியராமசாமி பட தயாரிப்பின் போது பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போதிலிருந்தே இவர்கள் இருவரும் பேசிக்கொள்வது இல்லை என்றும், எந்த குடும்ப நிகழ்ச்சியிலும் சந்தித்துக் கொண்டதும் இல்லையாம்.

உறவுகள் தொடர்கதை
இந்நிலையில், நேற்று கங்கை அமரன் தனது அண்ணன் இளையராஜாவை வீட்டில் சந்தித்து மனம் விட்டு பேசி உள்ளார். அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கங்கை அமரன், இன்று நடந்த சந்திப்பு .. இறைஅருளுக்கு நன்றி ... உறவுகள் தொடர்கதை என குறிப்பிட்டுள்ளார்.

என் தம்பி தங்க தம்பி
இவர்கள் இருவரும் பலஆண்டுகளுக்குப்பின் சந்தித்துக் கொண்டதால் மகிழ்ச்சியான பிரேம்ஜி ,தனது ட்விட்டர் பக்கத்தில் டிபியாக அந்த புகைப்படத்தை வைத்துள்ளார். மேலும், வெளுத்து கட்டிக்கடா
என் தம்பி தங்க தம்பி
கொடிய ஏத்திக்கடா
என் தம்பி தங்க தம்பி
வெளிச்சம் உன்னோட முன்னாலே
வெற்றி உன்னோட பின்னாலே
வெளிச்சம் உன்னோட முன்னாலே
வெற்றி உன்னோட பின்னாலே
வெளுத்து கட்டிக்கடா
என் தம்பி தங்க தம்பி. என பதிவிட்டுள்ளார்கள். வெங்கட்பிரபுவும் மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











