இந்த பாட்டு ஞபாகம் இருக்கா.. நீங்க எப்படிப்பட்ட ஆள் தெரியுமா.. பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன்
சென்னை: மகனை இழந்து வாடும் பாரதிராஜாவை அவரது திரையுலக நண்பரும், இயக்குநருமான கங்கை அமரன் பாட்டு பாடி தேற்றினார். பாரதிராஜா இயக்கிய கல்லுக்குள் ஈரம் படத்தில் இடம்பெற்ற பாடலை கங்கை அமரன் பாடுகிறார். அதை பாரதிராஜா அமைதியாக கேட்டு தலையசைக்கிறார். இதுதொடர்பான வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கண் கலங்கி ஆறுதல் தெரிவிக்கின்றனர்.
கடந்த மாதம் 25ஆம் தேதி நடிகர் மனோஜ் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மரண செய்தி கேட்டு திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. அவரது தந்தையான பாரதிராஜா நொறுங்கி போனார். திரை பிரபலங்கள் பலரும் பாரதிராஜாவிற்கு எப்படி ஆறுதல் தெரிவிக்க போகிறேன் என வேதனையுடன் தெரிவித்தனர். இந்நிலையில், பாரதிராஜாவும், மனோஜூம் இணைந்து அளித்த பேட்டிகள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மகனை இழந்து தனிமையில் இருக்கும் பாரதிராஜாவிற்கு ஆறுதல் தெரிவிக்க பலரும் அவரை சந்தித்து பேசி வருகின்றனர். மனோஜ் உடலுக்கு நடிகர்கள் சூர்யா, விஜய், கார்த்தி, யோகிபாபு உள்ளிட்ட திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அப்போது தன் மகனின் இழப்பை தாங்க முடியாமல் பாரதிராஜா கதறி அழுதது பலரையும் கண் கலங்க வைத்தது.

பாரதிராஜாவை சந்தித்த அமரன்: வீட்டில் இருந்த பாரதிராஜாவை கங்கை அமரன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. வீட்டின் மாடியில் அமர்ந்திருக்கும் இருவரும் பழைய நினைவுகளை நினைவுகூர்ந்து பேசினர். அப்போது, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கல்லுக்குள் ஈரம் படத்தில் சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும் பாடலை பாடி பாரதிராஜாவை தேற்றுகிறார். அப்போது இதெல்லாம் ஞாபகம் இருக்கா நண்பா என்பது போல் கங்கை அமரன் கேட்கிறார். ஆமா என்பது போல் பாரதிராஜா தலையாட்டுகிறார்.
அப்போது பேசிய கங்கை அமரன், சிறு பொன்மணி அசையும் பாட்டை 10 நிமிடத்தில் எழுதினேன். ஞாபகம் இருக்கா? பாம்குரோவ் ஓட்டலில் நீங்கதான் இந்த பாட்டை எழுதிட்டு வானு சொன்னீங்க. நானும் வெளிய போய் 10 நிமிடத்தில் எழுதிட்டு வந்தேன். அத பாத்துட்டு நீங்க கூட, நல்லா எழுதிருக்கடா நீ என்று பாராட்டுனீங்க. நான் ரொம்ப லக்கி பர்சன். இது மாதிரி எத்தன பேர நீங்க உருவாக்கி இருக்கீங்க என்று கூறியுள்ளார்.
பண்ணைபுரமும் - அல்லிநகரமும் இணைந்து தமிழ் சினிமாவில் பல புதுமைகளை படைத்திருக்கின்றனர். இளையராஜா, பாரதிராஜா, கங்கை அமரன், எஸ்பிபி போன்ற லெஜண்ட்ஸ் தமிழ் சினிமாவையே பிரம்மிக்க வைத்திருக்கின்றனர். பாரதிராஜா இளையராஜா இல்லாமல் நான் இங்கு இல்லை என பல மேடைகளில் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக இளையராஜா கையில் சரஸ்வதி குடியிருக்கிறாள். அவர் ஹார்மோனிய பெட்டியில் கை வைத்தால் இசை கொட்டும் என தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











