கங்கை அமரனுக்கு மகள் இருக்காங்களா?.. இத்தனை வருடம் மறைச்சு வெச்சிருக்காரே.. என்ன செய்கிறார் தெரியுமா?
சென்னை: இளையராஜாவின் சகோதரரும், இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், நடிகர் என பல முகங்களையும் கொண்டிருப்பவர் கங்கை அமரன். அவர் இயக்கிய கரகாட்டக்காரன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அவரது மகன்கள்தான் இயக்குநர் வெங்கட் பிரபுவும், நடிகர் பிரேம்ஜியும். இத்தனை வருடங்கள் இவர்கள் இரண்டு பேர் மட்டும்தான் கங்கையின் மகன்கள் என பெரும்பாலானோர் நினைத்திருந்தார்கள். ஆனால் அவருக்கு ஒரு மகளும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா இசையின் அடையாளம் இளையராஜா. அவரது சகோதரர்களில் ஒருவர் கங்கை அமரன். தனது சகோதரர் சென்னைக்கு வந்தபோதே இவரும் வந்துவிட்டார். முதலில் பாடலாசிரியராக முயற்சி செய்து; கங்கை அமரன், வாலி உள்ளிட்டோரிடம் உதவியாளராக சேர விரும்பினார். ஆனால் அது அவருக்கு நடக்கவில்லை. அவரது முயற்சிகள் தொடர்ந்துகொண்டிருந்தபோதே இளையராஜா இசையமைப்பாளராகிவிட்டார். எனவே அவரது இசையில் ஏராளமான ஹிட் பாடல்களை எழுதி; தனக்கென ஒரு இடத்தை திரைத்துறையில் பிடித்தார்.

இயக்குநர் கங்கை அமரன்: பாடலாசிரியராக இருந்த அவர் திரைப்படங்களையும் இயக்க ஆரம்பித்தார். முதலில் இயக்கிய சில படங்கள் தோல்வியை சந்தித்தன. அதற்கு அடுத்து இயக்கிய கரகாட்டக்காரன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. கிராமத்து தில்லானா மோகனாம்பாளாக அது அமைந்திருந்தாலும் கவுண்டமணி - செந்தில் காமெடி, கங்கை அமரனின் இயக்கம், இளையராஜாவின் இசை ஆகியவை சேர்ந்து படத்தை காப்பாற்றிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதே ஜானரில் அடுத்தடுத்து படங்கள் வரும் அளவுக்கு அப்படம் ட்ரெண்டை செட் செய்தது.
இசையமைப்பாளராகவும் கங்கை அமரன்: இதற்கிடையே இசையமைப்பாளராகவும் ஹிட் கொடுத்திருக்கிறார் அவர். சுவரில்லாத சித்திரங்கள், மௌன கீதங்கள், வாழ்வே மாயம், சட்டம், மண்ணுக்கேத்த பொண்ணு, நம்ம ஊரு நல்ல ஊரு, ருத்ரா உள்ளிட்ட பல படங்கள் அவர் இசையமைத்ததுதான். பின்னணி இசையும், பாடல்களும் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தன. இடையே சிறு சிறு வேடத்தில் தலை காண்பித்த அவர்; இப்போது ரோஜாவுடன் லெனின் பாண்டியன் என்ற படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார்.
கங்கையின் பிள்ளைகள்: கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட் பிரபு இயக்குநராகவும், இளைய மகன் பிரேம்ஜி நடிகர், இசையமைப்பாளர், பாடகராகவும் திரைத்துறையில் ஜொலித்துவருகிறார்கள். அவருக்கு மொத்தம் இரண்டு மகன்கள் என்று மட்டுமே பெரும்பாலானோர் நினைத்திருக்கிறார்கள். ஆனால் அவருக்கு ப்ரீத்தி என்ற மகளும் இருக்கிறாராம். தனது சகோதரர்கள் போலவே வெளிநாட்டில் படித்தவர் அவர். திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி நிம்மதியாக இருக்கிறார். இத்தனை வருடங்களாக கேமரா முன்பு கூட அவர் வந்ததில்லை. ஏன் அவரது புகைப்படம் கூட இணையத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கங்கை அமரன் பேட்டி: கங்கை அமரன் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது மகள் பற்றி பேசிய அவர், "எனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அதேபோல் ப்ரீத்தி என்ற மகள் இருக்கிறார். அவர் அமெரிக்காவில் படித்தவர். திருமணமும் செய்து வைத்தோம். எங்களது மாப்பிள்ளை (ப்ரீத்தியின் கணவர்) பிஎம்டபிள்யூ கம்பெனியில் வேலை பார்க்கிறார். எப்போதும் ஒற்றுமையாக இருக்கிறோம்" என்றார். கங்கை அமரனுக்கு மகள் இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications















