Gangers Blue Sattai Maran Review: தியேட்டரில் சிரித்தார்கள்.. எனக்கு சிரிப்பே வரலை.. ப்ளூ சட்டை மாறன்
சென்னை: சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு, பக்ஸ் பகவதி பெருமாள், கேத்ரின் தெரசா, வாணி போஜன், முனீஷ்காந்த், மைம் கோபி, அருள்தாஸ், சந்தானபாரதி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான கேங்கர்ஸ் படம் நேற்று அதாவது ஏப்ரல் 24ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தை இயக்கியது மட்டும் இல்லாமல் நடித்தும் உள்ளார் சுந்தர் சி. இந்த படம் எப்படி உள்ளது என்பது குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
கேங்கர்ஸ் படத்தின் விமர்சனம் தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள வீடியோவில், " படத்தின் ஆரம்பத்தில் ஒரு பள்ளியைக் காட்டுகிறார்கள். அந்த பள்ளியில் மிகவும் திறமையான மாணவி ஒருவர் இருக்கிறார். அந்த மாணவி திடீரென காணாமல் போய் விடுகிறார். இதற்கு காரணமாக அதே ஊரில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இரண்டு சகோதரர்கள் தான் எனக் கூறுகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியில் பணியாற்றும் கேத்ரின் தெரசா காவல்துறையில் புகார் அளிக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக மறைமுகமாக விசாரிக்க காவல்துறை தரப்பில் இருந்து பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியராக சுந்தர் சி-யை அனுப்புகிறார்கள். சுந்தர் சி பி.டி மாஸ்டராக அந்த பள்ளியில் பணியில் சேருகிறார். ஏற்கனவே அந்த பள்ளியில் வடிவேலு பி.டி. மாஸ்டராக உள்ளார். அந்த ஊரில் நடக்கும் பிரச்னைகளை பார்த்துவிட்டு சுந்தர் சி கொஞ்சம் அதிகமாகவே பொங்க ஆரம்பிக்கிறார். சுந்தர் சி ஏன் அதிகமாக பொங்கினார். அந்த இரண்டு ரவுடிகள் என்ன ஆனார்கள். காணாமல் போன மாணவிக்கு என்ன ஆச்சு என்பதுதான் இந்த படத்தின் கதை.

லாஜிக் இல்லா மேஜிக்: இது ஒரு சுந்தர் சி படம். சுந்தர் சி படம் என்றாலே மூளையை கழட்டி வைத்துவிட்டு தான் போய் படம் பார்க்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். அவரது படத்தில் லாஜிக் இல்லாத மேஜிக் இருக்கும். எதையாவது ஒன்றை செய்து பொழுதுபோக்கான படமாக நமக்கு ஒன்றைக் காட்டிவிடுவார். அதில் முக்கியமான விஷயமாக காமெடி இருக்கும். இந்த படத்தில், 15 ஆண்டுகளுக்குப் பின்னர் சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து படம் பண்ணுகிறார்கள் என்றதும், மிகவும் எதிர்பார்த்து இந்த படத்தைப் பார்த்தோம். இந்த படத்தை பார்த்ததுமே மிகப்பெரிய அதிர்ச்சி.
சிரிப்பு வரவில்லை: ஏனென்றால், இந்த படத்தில் சுந்தர் சி - வடிவேலு காமெடி என்பது சுத்தமாக ஒர்க்-அவுட் ஆகவில்லை. அதற்கு முக்கியமான காரணம் நமக்கு வடிவேலு என்றாலே நினைவுக்கு வருவது, அவரது டயலாக் டெலிவரியும் பாடி லாங்குவேஜ்ஜும் தான். இந்த இரண்டுமே இந்த படத்தில் மிஸ்ஸிங். வடிவேலு எது செய்தாலும் சிரிப்போம். இந்த படத்தில் வடிவேலு என்னென்னமோ செய்கிறார், நமக்கு சிரிப்பு மட்டும் தான் வரவில்லை. வெறும் 10 சதவீத காமெடியை கூட அவர் 200 சதவீத காமெடியாக வடிவேலு மாற்றுவார். ஆனால் இந்த படத்தில் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
சிரிப்பு சத்தம்: தியேட்டரில் ரசிகர்கள் அவ்வப்போது சிரித்தார்கள். அதெல்லாம், வடிவேல் 200 சதவீத உழைப்பை செலுத்தும் இடத்தில் 50 சதவீத உழைப்பை போட்டதற்கு தான் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பு வந்தது. சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட மத கஜ ராஜா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதற்கு காரணம், படத்தில் நடித்தவர்கள் 12 ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் எனர்ஜியாக நடித்தார்கள். அவர்களை வைத்து அதே படத்தை இப்போது எடுத்தால் அதே எனர்ஜியோடு அந்த நடிகர்கள் இருப்பார்களா என்றால், சந்தேகம்தான். அதே தான் இந்த படத்தில் நடந்துள்ளது.
கதாநாயகிகள்: இது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் ஹீரோவிடம் அடி வாங்க அளவெடுத்து செய்ததைப்போல் மூன்று ரவுடிகள் இருக்கிறார்கள். அந்த மூன்று பேரையும் ஹீரோ போட்டு புரட்டி எடுக்கிறார். ஒரு படத்தில் வில்லன் கதாபாத்திரம் என்றால் மிகவும் கனமானதாக இருக்க வேண்டாமா? சுந்தர் சி படம் என்றாலே இரண்டு, மூன்று கதாநாயகிகளை நடிக்க வைத்து, படத்தை மிகவும் கலகலப்பாக கொண்டு சென்று விடுவார். அதெல்லாம் இந்த படத்தில் மிஸ்ஸிங். இப்படி, மனித வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களே இல்லாத ஒரு சுந்தர் சி படம். மொத்தத்தில் இந்த படம் எப்படி உள்ளது என்றால், சுந்தர் சி வடிவேலு காம்பினேஷனில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு படம் வருகிறது, என்கிற எண்ணத்தில் போய் இந்த படத்தை பார்த்தால், முடுஞ்சா சிரிங்கடா பார்க்கலாம் என்பதைப் போல ஒரு முதல் பாதியும், இந்த முதல் பாதி படத்துக்கு இரண்டாம் பாதி படம் எவ்வளவோ பரவாயில்லை என்பது போன்ற ஒரு படத்தை எடுத்து வைத்துள்ளார்கள்.

வேதனை: காமெடி படம் பார்க்க போய் இந்த கதிக்கு ஆளான நம்மை நினைத்து வருத்தப்படுவதா? வாழ்ந்து கெட்ட வடிவேலுவை நினைத்து வேதனைப்படுவதா என தெரியவில்லை" என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளார். அவரது விமர்சனம் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இவரது விமர்சனம் இப்படி இருந்தாலும், மற்ற விமர்சகர்களும் படம் பார்த்த ரசிகர்களும் படத்திற்கு பெரும்பாலும் பாசிடிவான விமர்சனத்தையே கொடுத்துள்ளார்கள்.
ரசிகர்கள்: குறிப்பாக படம் பார்த்த ரசிகர்கள் கூறும்போது, " படத்தின் முதல் பாதி சுமார் தான் என்றாலும், இரண்டாம் பாதி முழுக்க முழுக்க நகைச்சுவையால் நிரம்பியுள்ளது. குடும்பத்துடன் இந்த படத்தை பார்க்கலாம். குழந்தைகள் எல்லாம் சிரித்துக் கொண்டே இருந்தார்கள். இந்த படம்தான் வடிவேலுவின் மாஸான கம்பேக் படம். இப்படியான வடிவேலுவை தான் நாங்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்தோம். கிளைமாக்ஸ் காட்சியில் வடிவேலு சேலை கட்டிக் கொண்டு வந்தது எல்லாம் தியேட்டரே வெடித்துச் சிரித்தது" எனக் கூறினார்கள்.
கிளாமர்: மேலும் சிலர், " வழக்கமாக சுந்தர் சி படம் என்றால் கிளாமர் இருக்கும். இந்த படத்தில் அப்படியான கிளாமர் காட்சிகள் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது. சுந்தர் சி வடிவேலு காம்போ மீண்டும் பட்டையைக் கிளப்பி விட்டார்கள். படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம். இந்த சம்மருக்கு ஏற்ற படம் தான் கேங்கர்ஸ்" என்றும் கூறுகிறார்கள். இப்படியான நிலையில் ப்ளூ சட்டை மாறன் படத்தை பார்த்து சிரிப்பே வரவில்லை எனக் கூறியிருப்பது பேசு பொருளாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications











