Gangers Box Office Prediction: வடிவேலுவுக்கு வெற்றி கிடைக்குமா?.. ஹாட்ரிக் அடிப்பாரா சுந்தர். சி?
சென்னை: சுந்தர். சி இயக்கி நடித்துள்ள கேங்கர்ஸ் திரைப்படம் ஏப்ரல் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் பல வருடங்கள் கழித்து மீண்டும் சுந்தர். சி மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ளனர். கேத்தரின் தெரசா, வாணி போஜன் என 2 ஹீரோயின்கள் நடித்துள்ள இந்த படம் இந்த வாரம் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி கடந்த ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி 250 கோடி வசூலை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது.

தளபதி விஜய்யின் சச்சின் ரீ ரிலீஸுக்குப் பிறகு குட் பேட் அக்லி படத்துக்கான கூட்டம் குறையத் தொடங்கியுள்ளது. சச்சின் ரீ ரிலீஸ் திரைப்படமும் கணிசமான வசூலை திரையிட்ட இடங்களில் வசூல் செய்து வருகிறது. இந்த வாரம் கேங்கர்ஸ் மற்றும் சுமோ என இரு காமெடி படங்கள் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், குட் பேட் அக்லி மற்றும் சச்சின் ரீ ரிலீஸ் வசூல் மொத்தமாக முடிவுக்கு வரும் என்கின்றனர்.
வடிவேலுவின் கேங்கர்ஸ்: சுந்தர். சி இயக்கத்தில் வடிவேலு நடித்துள்ள கேங்கர்ஸ் திரைப்படத்தில் மீண்டும் காமெடியனாக மாறியிருக்கிறார் மாமன்னன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய வடிவேலு தொடர்ந்து அதே போல நடிப்பாரா? என எதிர்பார்த்த நிலையில், தனது ரசிகர்களுக்காக காமெடியில் கலக்க காத்திருக்கிறார். இந்த படத்தில் லேடி கெட்டப் முதல் வயதானவர் கெட்டப் என பல கெட்டப்களில் முன்பை போல வடிவேலு வெரைட்டி காட்டி சிரிக்க வைக்கப் போகிறார் என்கின்றனர்.
செம புரமோஷன்: இந்த வாரம் ஏப்ரல் 25ம் தேதி சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியாகவுள்ள சுமோ படத்தை விட சுந்தர். சி மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள கேங்கர்ஸ் படத்துக்கு கடந்த ஒரு மாதமாகவே செம புரமோஷனை படக்குழு செய்துள்ளது. வடிவேலு மற்றும் சுந்தர். சி பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வெளிப்படையாக பல விஷயங்களை பகிர்ந்துள்ளனர். தான் சினிமாவில் சில காலம் நடிக்காமல் போக அந்த பிரபலம் தான் காரணம் என மறைமுகமாக பெயரை குறிப்பிடாமல் வடிவேலு பேசியது எல்லாம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கேங்கர்ஸ் வசூல் கணிப்பு: அரண்மனை 4 திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி முதல் நாளிலேயே 4 கோடி ரூபாய் வசூல் வேட்டையை நடத்தியது. இந்த ஆண்டு விஷால், சந்தானம், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி நடிப்பில் வெளியான மத கஜ ராஜா திரைப்படம் முதல் நாளில் 3 கோடி வசூலையும் அதன் பின்னர், ரசிகர்களின் விமர்சனத்தால் பொங்கல் விடுமுறையில் தொடர்ந்து தினமும் 6 கோடி வசூல் செய்து 50 கோடி வசூலை கடந்தது. தமன்னா, சுந்தர். சி நடித்த அரண்மனை 4 திரைப்படமும் ரசிகர்கள் கொண்டாட 100 கோடி வரை பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது. இந்நிலையில், சுந்தர். சிக்கு ஹாட்ரிக் வெற்றியை இந்த படம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேங்கர்ஸ் திரைப்படம் முதல் நாளில் அதிகபட்சமாக 2 முதல் 3 கோடி வசூல் செய்யும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











