Ganja Karupu - அந்தப் படத்தால் தான் எல்லாமே போய்விட்டது.. புலம்பும் கஞ்சா கருப்பு.. இப்படி ஒரு சோகமா?
சென்னை:Ganja Karupu (கஞ்சா கருப்பு) தான் தயாரித்த படத்தால்தான் எல்லாமே போய்விட்டது என கஞ்சா கருப்பு பேசியிருக்கிறார்.
இயக்குநர் பாலா இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான பிதாமகன் படத்தில் சின்ன ரோலில் அறிமுகமானவர் கஞ்சா கருப்பு.

அதனையடுத்து அமீர் இயக்கிய ராம் படத்தில் வாழவந்தான் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அதில் அசால்ட்டாக ஸ்கோர் செய்ததால் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் காமெடி நடிகராக மாறினார் அவர்.
தொடர் வாய்ப்புகள்: அந்த வாழவந்தான் கேரக்டர் அவருக்கு சினிமாவில் நிலையான கேரக்டரை பெற்று கொடுத்தது. அதன்படி சிவகாசி, பம்பர கண்ணாலே, சண்டகோழி, திருப்பதி, கோடம்பாக்கம், உனக்கும் எனக்கும், அரண் என ஏராளமான படங்களில் நடித்தார். கஞ்சா கருப்புவின் வெகுளித்தனமான முகமும், கிராமத்து ஸ்டைலில் அவர் செய்த டயலாக் டெலிவிரியும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது.
டக்ளஸ்: கஞ்சா கருப்புவின் கரியரிலேயே முக்கியமான கதாபாத்திரம் என்றால் பருத்திவீரன் படத்தில் அவர் ஏற்றிருந்த டக்ளஸ் கதாபாத்திரம். அமீர் இயக்கத்தில் உருவான அந்தக் கதாபாத்திரம் அச்சு அசலாக கருப்புவுக்கு பொருந்திப்போனது. அன்றிலிருந்து பலராலும் அவர் டக்ளஸ் என்றே அழைக்கப்படுகிறார். பருத்திவீரனுக்கு பிறகு தொடர்ந்து நடித்துவந்தவர் ஒருகட்டத்தில் சொந்தமாக படம் தயாரித்தார்.
கஞ்சா கருப்பு பேட்டி: வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தை கஞ்சா கருப்பு தயாரித்து தனது கையில் சூடுபோட்டுக்கொண்டார். அந்தப் படம் அவருக்கு 100ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை தயாரித்தது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர், "வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தை தயாரித்து பெரிய தவறு செய்துவிட்டேன். அந்தப் படத்தின் இயக்குநர் ஒரு முட்டாள்.
அதுதெரியாமல் படத்தை தயாரிக்க ஒத்துக்கொண்டேன். அந்தப் படத்தின் தயாரிப்பின் போது நான் பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தேன். அதனால் அப்படத்தில் முழு கவனத்தை என்னால் செலுத்தவே முடியவில்லை. அந்தப் படத்துக்கு ஃபிலிம்தான் பயன்படுத்தினோம். அது அளவுக்கதிகமாகவே ஓடிக்கொண்டிருந்தது.
ரொம்ப அசால்ட்: இயக்குநர் அந்தப் படத்தை ரொம்பவே அசால்ட்டாக உருவாக்கினார். அடுத்த ஜென்மத்தில் பாம்பாய் பிறந்தாலும்கூட நான் படம் எடுக்கக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டேன். வேல்முருகன் போர்வெல்ஸ் படத்துக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் இன்றுவரை திணறிக்கொண்டிருக்கிறேன். எல்லாமே போய்விட்டது" என்று வேதனையோடு குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications











