உன்னி முகுந்தனுக்கு இவ்வளவு ஈகோவா? டொவினோ தாமஸ் ‘நரிவேட்டை’ படத்தை பாராட்டிய மேனேஜருக்கு அடி, உதை
திருவனந்தபுரம்: மலையாள திரையுலகில் நடிகர்கள் எல்லாம் நண்பர்களாக இருப்பார்கள் என்று பார்த்தால் உன்னி முகுந்தன் ரொம்பவே ஈகோ பிடித்தவராக உள்ளாரே என ரசிகர்கள் கொந்தளிக்க காரணமே உன்னி முகுந்தனின் மேனேஜர் நடிகருக்கு எதிராக நேற்று இரவு கொடுத்த புகார் தான். தமிழில் சமீபத்தில் கருடன் படத்தில் நடித்திருந்த உன்னி முகுந்தன் மலையாளத்தில் மார்கோ படம் மூலம் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியையும் பெற்றிருந்தார்.
டொவினோ தாமஸ், சேரன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'நரிவேட்டை' படத்தை பற்றி பாராட்டி விமர்சனம் எழுதியதற்காக உன்னி முகுந்தன் ஆத்திரப்பட்டு தனது மேனேஜரை அடித்து உதைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காக்காநாட் பகுதியில் உள்ள இன்ஃபோ பார்க் காவல் நிலையத்தில் நடிகர் உன்னி முகுந்தன் தன்னை அடித்து விட்டதாக அவரது மேனேஜர் விபின் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
நரிவேட்டை படத்துக்கு குவியும் பாராட்டுக்கள்: அனுராஜ் மனோகர் இயக்கத்தில் கடந்த மே 23ம் தேதி டொவினோ தாமஸ், சேரன், சூரஜ் வெஞ்சரமுடு, பிரியம்வதா கிருஷ்ணன் மற்றும் ஆர்யா சலீம் உள்ளிட்ட பலர் நடித்த நரிவேட்டை திரைப்படம் மலையாளம் மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சேரன் இந்த படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியிருக்கிறார். அதே போல ஹீரோவான டொவினோ தாமஸின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்த மேனேஜர்: டொவினோ தாமஸின் நரிவேட்டை படத்தை பார்த்துவிட்டு தமிழ்நாடு மற்றும் மலையாளத்தில் பல பிரபலங்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். நடிகர் உன்னி முகுந்தனின் மேனேஜர் விபின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நரிவேட்டை படத்தை பாராட்டியும் டொவினோ தாமஸின் நடிப்பை புகழ்ந்தும் எழுதியது உன்னி முகுந்தனுக்கு பிடிக்கவில்லை என்கின்றனர்.
உன்னி முகுந்தன் அடித்ததாக புகார்: உன்னி முகுந்தன் மேனேஜர் விபின் நரிவேட்டை படத்தை பாராட்டி எழுதியதை பார்த்து கடுப்பான உன்னி முகுந்தன், எங்கிட்ட பணம் வாங்கி வேலை செய்துக் கொண்டு, டொவினோ படம் சூப்பர் என எழுதுறியான்னு சொல்லி அடித்து விளாசி விட்டாராம். இதனால், விரக்தி அடைந்த விபின் இன்ஃபோ பார்க் காவல் நிலையத்தில் உன்னி முகுந்தனுக்கு எதிராக புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக எஃப்ஐஆர் போடப்பட்டுள்ள நிலையில், போலீஸார் உன்னி முகுந்தனிடம் இன்று விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
உன்னி முகுந்தன் அமைதி: மேனேஜரை தாக்கிய விவகாரம் தொடர்பாக நடிகர் உன்னி முகுந்தன் எந்தவொரு விளக்கத்தையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள திரையுலகில் தொடர்ந்து நல்ல ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகர் இந்தளவுக்கு சக நடிகர் மீது ஈகோவுடன் உள்ளாரா? அல்லது அவருக்கும் மேனேஜருக்கும் இடையே என்ன வாக்குவாதம் நடைபெற்று மோதல் வெடித்தது என்பது குறித்து விரைவில் விசாராணையில் தெரிய வரும் என்கின்றனர்.
பாலியல் தொல்லை வழக்கு: 2011ம் ஆண்டு தனுஷ் நடித்த சீடன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தான் உன்னி முகுந்தன். மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து வரும் இவர் கடந்த ஆண்டு சூரி, சசிகுமார் நடித்த கருடன் படத்தில் நடித்திருந்தார். மார்கோ திரைப்படம் ரொம்பவே வயலென்ஸ் காட்சிகள் நிறைந்திருந்த நிலையில், ஓடிடியில் இருந்தே நீக்கப்பட்டது. கடந்த 2013ம் ஆண்டு பாலியல் தொல்லை வழக்கிலும் இவர் சிக்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











