விஜயகாந்தின் 16ம் நாள் காரியம்..கருடனாய் வந்த கேப்டன்.. நெகிழ்ந்து போன பிரேமலதா!
சென்னை: விஜயகாந்தின் 16வது நாள் காரியத்தை ஒட்டி, அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமானோர் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய போது, வானத்தில் கருடன் வட்டமிட்டதைப் பார்த்து விஜயகாந்தின் குடும்பத்தினர் நெகிழ்ந்துப் போனார்கள். அங்கு கூடி இருந்தவர்கள் விஜயகாந்த் அவர்களே, கருடன் ரூபத்தில் காட்சி அளித்து இருக்கிறார் என்று நெகிழ்ந்து வானத்தைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டார்கள்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக டிசம்பர் 28ந் தேதி உயிரிழந்தார். நுரையீரல் அழற்சி காரணமாக அவர் இறந்ததாக மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு இருந்தது. இதையடுத்து விஜயகாந்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு, பின் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. அங்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என திரளானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

தேமுதிக அலுவலகத்தில் தொடர்ந்து கூட்டம் வந்து கொண்டே இருந்ததால், அவரின் உடல் காமராஜர் சாலையில் உள்ள தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கும் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள். இதையடுத்து, விஜயகாந்தின் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அப்போது, விஜயகாந்தின் உடல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வந்த போது, கருடன் வானில் 3 முறை வட்டமிட்டது. இதைப்பார்த்த அங்கிருந்த மொத்த கூட்டமும் கருடனை கைகூப்பி வணங்கினர்.
விஜயகாந்தின் 16வது நாள் காரியம்: இதையடுத்து, கேப்டன் விஜயகாந்தின் 16வது நாள் காரியம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. 16ம் துக்கத்தில் கலந்து கொள்வதற்காக ஏராளமானோர் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் அனைவரும், நீண்ட வரிசையில் நின்று அங்கு அலங்கரித்துத் வைக்கப்பட்டிருந்த, விஜயகாந்த் போட்டோவிற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அங்கு வந்திருந்தவர்களுக்கு விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் அன்னதானம் வழங்கினார்கள். காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கப்பட்டது.
வானில் வட்டமிட்ட கருடன்: அப்போது, வானத்தில் கருடன் வட்டமிட்டதைப் பார்த்த பிரேமலதா மற்றும் அவரது மகன்கள் நெகிழ்ந்து கை கூப்பி வணங்கினார்கள். இதைப்பார்த்த அங்கு கூடி இருந்த பொது மக்கள் விஜயகாந்த் அவர்களே, கருடன் ரூபத்தில் காட்சி அளித்து இருக்கிறார் என்று நெகிழ்ந்து போனார்கள். இன்னும் சிலர் கேப்டன் இறக்கவில்லை அவர் எப்பவும் இவ்வுலகிலுள்ள அனைத்து மக்களுடன் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்திருந்தார்கள். இந்த காட்சி காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது.


Click it and Unblock the Notifications











