Gatta Kusthi 2 Box Office: விஷ்ணு விஷாலுக்கு வெற்றி உறுதியா?.. கட்டா குஸ்தி 2 முதல் நாள் வசூல்!
சென்னை: வேல்ஸ் நிறுவனம் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து தயாரிக்க செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், ஜாரா, காளி வெங்கட், முனிஷ்காந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜூலை 3ம் தேதி வெளியான படம் தான் கட்டா குஸ்தி.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த லால் சலாம், கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஆரியன் உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்தன. ராட்சசன் படத்துக்குப் பிறகே கட்டா குஸ்தி படம் தான் விஷ்ணு விஷாலுக்கு வெற்றிப் படமாக மாறியது.

இந்நிலையில், கட்டா குஸ்தி 2 அவருக்கு வெற்றிப் படமாக மாறுமா? என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில், பாக்ஸ் ஆபீஸ் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
கட்டா குஸ்தி பட்ஜெட் மற்றும் வசூல்: கடந்த 2022ம் ஆண்டு செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் 5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 30 கோடி வரை வசூல் ஈட்டி வெற்றிப் பெற்றது. விஷ்ணு விஷாலுக்கு ராட்சசன் படமே அதிகபட்சமாக 50 முதல் 60 கோடி வசூலை தான் ஈட்டிக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கட்டா குஸ்தி 2 படத்தின் பட்ஜெட் முதல் பாகத்தை விட அதிகமாக இருக்கும் என்கிற நிலையில், அதற்கு ஏற்ப வசூல் வந்தால் தான் படம் வெற்றி பெறும் என்கின்றனர்.
கட்டா குஸ்தி 2 முதல் நாள் வசூல்: உலகம் முழுவதும் சுமார் 1000 திரைகளில் கட்டா குஸ்தி 2 வெளியாகி உள்ளது என்றும் முதல் நாளில் அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை வசூல் வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. காலை முதலே படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், மாலை மற்றும் இரவு காட்சிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதாக கூறுகின்றனர். கட்டா குஸ்தி முதல் பாகம் முதல் நாளில் 4 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சனி, ஞாயிறு பிக்கப் ஆகுமா?: ஏற்கனவே விஜய் ஆண்டனி, சுவாசிகா நடிப்பில் வெளியான நூறு சாமி மற்றும் அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான கான் சிட்டி உள்ளிட்ட படங்கள் தமிழ்நாட்டில் சிறப்பான வசூல் வேட்டையை நடத்தி வருகின்றன. கட்டா குஸ்தி 2 திரைப்படம் சனி மற்றும் ஞாயிறு வசூலில் பிக்கப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தொடர்ந்து சில வாரங்கள் தாக்கு பிடித்தால் மட்டுமே முதல் பாகம் வசூலித்த அளவுக்கு வசூல் செய்யும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications