கட்டா குஸ்தி 2 டிரைலர் ரிலீஸ்.. எல்லாம் சூப்பர்.. லைட்டா அந்த டைரக்ட்டர் வாசம் அடிக்குதே!
சென்னை: விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி கூட்டணியில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'கட்டா குஸ்தி'. நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் மல்யுத்தத்தை மையமாக வைத்து உருவான அந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றி பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகமான 'கட்டா குஸ்தி 2' வரும் ஜூலை 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
முதல் பாகத்தைப் போலவே இந்தப் படத்தையும் இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள நிலையில், ரம்யா கிருஷ்ணன், கருணாஸ், யோகி பாபு, கருணாகரன், முனிஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஷ்ணு விஷாலுடன் இணைந்து டாக்டர் இஷாரி கே. கணேஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை கே.எம். பாஸ்கரன் கவனித்துள்ள நிலையில், படத்தொகுப்பை பரத் விக்ரமன் மேற்கொண்டுள்ளார்.

குடும்ப வாழ்க்கையில் தொடரும் குஸ்தி: முதல் பாகத்தில் கணவன் - மனைவி இடையேயான ஈகோ, மல்யுத்தம் மற்றும் குடும்ப உறவுகளை மையமாக வைத்து கதை நகர்ந்தது. இரண்டாம் பாகத்தில் திருமண வாழ்க்கையின் அடுத்த கட்டம், குடும்ப பொறுப்புகள் மற்றும் மீண்டும் மல்யுத்த களத்திற்கு திரும்பும் விஷ்ணு விஷாலின் பயணம் ஆகியவற்றை மையமாக வைத்து கதை நகரும் என்பது டிரைலரில் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் காமெடி, ஆக்ஷன், எமோஷன் என கமர்ஷியல் அம்சங்களுக்கும் பஞ்சம் இல்லாமல் டிரைலர் வெட்டப்பட்டுள்ளது.
சுந்தர்.சி வாசம் அடிக்குதே: டிரைலரில் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்திருப்பது ஆசிரியையாக வரும் ஒரு கவர்ச்சியான கதாபாத்திரம்தான். அந்த கதாபாத்திரத்தின் உடை வடிவமைப்பு, அறிமுக காட்சி, காட்சிப்படுத்தப்பட்ட விதம் ஆகியவற்றைப் பார்த்த ரசிகர்கள், "லைட்டா சுந்தர்.சி பட ஹீரோயின் இன்ட்ரோ மாதிரி இருக்கே", "செல்லா அய்யாவு கொஞ்சம் சுந்தர்.சி ஃபார்முலாவையும் மிக்ஸ் பண்ணிட்டாரு போல" என்று சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில், இது வெறும் டிரைலர் மட்டுமே என்றும், முழுப் படத்தில் அந்த கதாபாத்திரம் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம் என்றும் மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே முதல் பாகம் குடும்ப ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், இரண்டாம் பாகமும் அதே வெற்றியை தொடருமா என்பது ஜூலை 3-ஆம் தேதி தெரியவரும்.


Click it and Unblock the Notifications