Gatta Kusthi 2: விஜய் ரசிகர்கள் அட்டாக் செஞ்சாங்க.. ஆனால் அது நல்லதுக்கில்லை.. விஷ்ணு விஷால் பளிச்
சென்னை: இயக்குநர் செல்ல அய்யாவு இயக்கத்தில் உருவாகி ஏற்கனவே வெளியான கட்டா குஸ்தி படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகம் கடந்த 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்ததோடு தயாரிப்பாளராகவும் விஷ்ணு விஷால் செயல்பட்டுள்ளார். அவருடன் ஐஸ்வர்யா லட்சுமி, மோக்ஷா, கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
படத்தின் வெற்றி குறித்து செய்தியாளர்களை சந்தித்த விஷ்ணு விஷாலிடம், "கட்டா குஸ்தி 2 ரிலீஸானபோது விஜய் ரசிகர்கள், குறிப்பாக டிவிகேவினர் உங்களை சமூக வலைதளங்களில் அட்டாக் செய்தார்களா?" என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த விஷ்ணு விஷால், "ஆமாம்... என்னை அட்டாக் செய்தார்கள். அது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆனால் அதை நான் அரசியலாக பார்க்க விரும்பவில்லை. இப்போது படம் நல்லபடியாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதுதான் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். குடும்ப ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். அதுவே எனக்கு முக்கியம்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஒரு சமூகமாக நாம் எல்லாரும் நல்ல மனநிலையுடன், ஆரோக்கியமான சூழலில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் சமூக வலைதளங்களில் ஒரு தனிநபரை குறிவைத்து இப்படி தாக்குவது மிகவும் தவறான விஷயம். அதை நான் இன்றும் எதிர்க்கிறேன், நாளையும் எதிர்ப்பேன். யாருக்கு இதுபோன்ற சூழல் ஏற்பட்டாலும் அவர்களுக்காக நான் குரல் கொடுப்பேன்" என்று தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.
அதேபோல், "ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுவதால்தான் உங்களை சிலர் குறிவைத்து விமர்சிக்கிறார்களா?" என்ற கேள்விக்கும் விஷ்ணு விஷால் வெளிப்படையாக பதிலளித்தார்.

"2013-ம் ஆண்டு முதல் ரெட் ஜெயன்ட் நிறுவனம் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்து வருகிறது. தயாரிப்பு நிறுவனமாகவும், விநியோக நிறுவனமாகவும் அவர்கள் என்னை மிகவும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடத்தி வருகிறார்கள். என்னுடைய படங்களுக்கு எப்போதும் நல்ல ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். அதனால் இந்தப் படத்தையும் அவர்கள் வெளியிட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இனிமேலும் ரெட் ஜெயன்ட் நிறுவனத்துடன்தான் தொடர்ந்து பயணிப்பேன்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும் படத்தின் வசூல் குறித்தும் பேசிய விஷ்ணு விஷால், "படம் நல்லபடியாக ஓடிக்கொண்டிருக்கிறது. 100 கோடி வசூல் செய்தால் இன்னும் மகிழ்ச்சி. ஆனால் 50 கோடி வசூல் செய்தால்கூட எனக்கு அது வெற்றிப் படம்தான். தயாரிப்பாளராகவும் எனக்கு லாபம்தான்" என்று நம்பிக்கையுடன் கூறினார்.
படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலிலும் சக்கைப் போடு போட்டு வருகிறது. அதாவது, படம் வெளியான முதல் மூன்று நாட்களிலேயே உலகம் முழுவதும் ரூ.22 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications