கமல் பட நடிகரை கொல்ல சதி.. டைரியில் அம்பலமான அதிர்ச்சி தகவல்!
நடிகர் கிரிஷ் கர்னாட்டை கொலை செய்ய கவுரி லங்கேஷ் கொலையாளிகள் ஸ்கெட்ச் போட்டிருந்தது அம்பலமாகியுள்ளது.
பெங்களூரு: நடிகர் கிரிஷ் கர்னாட்டை கொலை செய்ய கவுரி லங்கேஷ் கொலையாளிகள் ஸ்கெட்ச் போட்டிருந்தது அம்பலமாகியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி தனது வீட்டுக்கு வெளியே பத்திரிகையாளர் மற்றும் செயற்பாட்டாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவத்தை அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கண்டித்தனர்.
நடிகர் பிரகாஷ்ராஜுக்கு கவுரி லங்கேசுடன் நெருங்கிய நட்பு இருந்ததால் அவரும் குற்றவாளிகளை பிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார். கர்நாடக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.

டைரி பறிமுதல்
இந்த கொலை வழக்கு தொடர்பாக பரசுராம் வாக்மோரே, அமோல்காலே, நவின்குமார், அமித்தேக்வேகர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். அமோல்காலேவிடம் இருந்து டைரி ஒன்றை பறிமுதல் செய்தனர்.

நடிகர் கிரிஷ் கர்னாட்
அதில் மேலும் கொலை செய்யவேண்டியவர்கள் என்ற பட்டியல் இருந்தது. அந்த பட்டியலில் நடிகர் கிரிஷ் கர்னாட்டின் பெயர் இடம் பெற்றுள்ளது.

பன்முகம் கொண்டவர்
கிரிஷ் கர்னாட் கன்னட மொழியின் தற்காலத்திய எழுத்தாளர் ஆவார். நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் என பல முகங்களை கொண்டவர்.

தற்கால பிரச்சனைகள்
கர்னாட் நாற்பது ஆண்டுகளாக நாடகங்களை இயக்கி வருகிறார், பெரும்பாலும் தற்காலத்திய பிரச்சனைகளை மையப்படுத்தியே இவரது நாடகங்கள் இருக்கும்.

கமல் படத்தில்
நடிகர் கிரிஷ் கர்னாட் கமல்ஹாசனுடன் ஹேராம் படத்தில் நடித்தவர். காதலன், ரட்சகன், மின்சார கனவு உள்பட பல படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்தியிலும் அதிக படங்களில் நடித்தார்.

விருதுகள்
ஒரு நடிகராக, இயக்குனராக மற்றும் திரைக்கதை எழுத்தாளராக இந்தியத் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் கர்னாட். இதனால் ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.

கொலை செய்ய திட்டம்
அவருக்கு இந்திய அரசாங்கத்தின் மூலமாக பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் போன்ற கெளரவங்களும் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவரை கொலை செய்ய திட்டமிடப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவுரிக்கு முன்பே
கவுரி லங்கேஷ்க்கு முன்னதாகவே கர்னாட்டை கொலை செய்ய கொலையாளிகள் திட்டமிட்டிருந்ததும் அம்பலமாகியுள்ளது. நடிகர் பிரகாஷ்ராஜும் இவர்கள் கொலை பட்டியலில் இருந்ததாக ஏற்கனவே தகவல் வெளியானது.


Click it and Unblock the Notifications











