ருத்ர தாண்டவம் படத்தில் வில்லனாக நடிக்கும் இயக்குனர்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை : பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி உள்ளிட்ட படங்களை தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி இயக்கும் புதிய திரைப்படம் ருத்ரதாண்டவம்.
நடிகர் ரிஷி மற்றும் குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா இதில் லீட் ரோலில் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிய நிலையில் இப்பொழுது ருத்ர தாண்டவம் படத்தில் வில்லனாக நடிக்க கௌதம் வாசுதேவ் மேனன் ஒப்பந்தமாகியுள்ளார்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
மென்மையான காதல் கதைகள் ஸ்டைலிஷான ஆக்ஷன் படங்கள் என தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் சமீப காலமாக திரைப்படங்களில் தோன்றி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் சென்ற ஆண்டு ஆரம்பத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இவரது கதாபாத்திரம் மிக பிரபலமாக பேசப்பட்ட நிலையில் இப்பொழுது அடுத்தடுத்து இவருக்கு நடிக்கும் வாய்ப்பு குவிந்து வருகிறது.

மீண்டும் சிம்புவுடன்
ஓடிடி தளங்களிலும் கலக்கி வரும் கௌதம் வாசுதேவ் மேனன் பாவக்கதைகள் மற்றும் சமீபத்தில் வெளியான குட்டி ஸ்டோரி ஆகிய ஆந்தாலஜி படங்களில் ஒரு பாகத்தை இயக்கி அதில் நடிகராகவும் நடித்திருப்பார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிம்புவுடன் இணைந்து மூன்றாம் முறையாக படத்தை இயக்க உள்ளார் கௌதம்மேனன்.

வசூலைக் குவித்தது
இந்த நிலையில் சென்ற ஆண்டு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்துடன் இணைந்து வெளியான திரௌபதி திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று வசூலைக் குவித்தது. மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படத்தை இயக்குனர் மோகன் ஜி இயக்கி இருக்க இதில் ரிஷி மற்றும் ஷீலா லீட் ரோலில் நடித்திருந்தனர்.

ரிஷி கதாநாயகனாக
திரௌபதி வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டு அதற்கு ருத்ர தாண்டவம் டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்திலும் தனது திரௌபதி பட ஹீரோ ரிஷியே கதாநாயகனாக நடிப்பதாகவும் குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா கதாநாயகியாக நடிப்பதாகவும் அறிவித்திருந்தார்.

கௌதம் மேனன்
இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த படத்தில் வில்லன் ரோலுக்கு இயக்குனர் கௌதம் மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குனர் மோகன் ஜி. ஸ்டைலிஷான இயக்குனராக இருந்து ஸ்டைலிஷான நடிகராக மாறியிருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரமின் துருவ நட்சத்திரம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











