மீண்டும் கட்சி மாற்றமா?.. அதிமுகவில் இருந்து விலகிய கௌதமி.. எடப்பாடிக்கு கனத்த இதயத்துடன் கடிதம்!
சென்னை: நடிகையும் அரசியல்வாதியுமான கௌதமி, அதிமுகவில் இருந்து முழுமையாக விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வந்த கௌதமி, பாஜகவில் இருந்து விலகிய பின்னர் அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. தேர்தல் பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊடக விவாதங்களில் அதிமுகவின் நிலைப்பாடுகளை முன்வைத்து வந்தார். இப்படி இருக்கையில் திடீரென அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சூழலில், கௌதமியின் இந்த முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "கழக அடிப்படை உறுப்பினர் மற்றும் கழகக் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்து இன்று முதல் என்னை விடுவித்துக் கொள்கிறேன். தற்போது உள்ள அரசியல் சூழலை கருத்தில் கொண்டு, சமூக சேவை செய்ய ஏதுவான வகையில் கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

விலகல்: மேலும், கட்சியில் இணைந்த நாள் முதல் தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய முன்னாள் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கௌதமியின் இந்த ராஜினாமா வெறும் பதவி விலகலா? அல்லது அவரது அரசியல் பயணத்தில் அடுத்த கட்ட நகர்வுக்கான முன்னோட்டமா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஏற்கனவே பாஜக மற்றும் அதிமுக என இரண்டு முக்கிய கட்சிகளில் பயணித்துள்ள கௌதமி, அடுத்து எந்த அரசியல் பாதையை தேர்வு செய்யப் போகிறார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன.
அடுத்து தவெக?: அதேநேரத்தில் தனது கடிதத்தில் எந்தவித குற்றச்சாட்டுகளையும் முன்வைக்காமல், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் சமூக சேவையில் கவனம் செலுத்த வேண்டும் என்ற காரணத்தையே அவர் குறிப்பிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகிறது. மேலும் அவர் தவெகவில் இணைய வாய்ப்பு இருப்பதகாவும் தற்போதே பேச்சுக்கள் இப்போதே எழத் தொடங்கிவிட்டது.


Click it and Unblock the Notifications