தாத்தா முத்துராமன் பிறந்தநாள்...நெகிழ்ச்சி பதிவு வெளியிட்ட கவுதம் கார்த்திக்
சென்னை : 1960 மற்றும் 70 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் முத்துராமன். ஏறக்குறைய 100 க்கும் அதிகமான படங்களில் நடித்த இவர், தனது திறமையான நடிப்பால் நவரச திலகம் என பெயர் வாங்கியவர்.
தேவிகா, ஜெயலலிதா என அனைத்து முன்னணி ஹீரோயின்களுடனும் நடித்த முத்துராமன், அதிகபட்சமாக காஞ்சனாவுடன் 19 படங்களில் இணைந்து நடித்துள்ளார். இவர் 1981 ல் ஆயிரம் முத்தங்கள் என்ற படத்தின் ஷுட்டிங்கிற்காக ஊட்டி சென்ற போது, திடீரென மயங்கி விழுந்து, உயிரிழந்தார்.

மூன்று தலைமுறை நடிகர்கள்
59 வயதில் உயிரிழந்த முத்துராமனின் மகனான கார்த்திக்கும் முன்னணி நடிகரானார். 125 படங்களுக்கு மேல் நடித்த இவர் நவரச நாயகன் என பெயர் வாங்கினார். இவரின் மகன் கவுதம் கார்த்திக்கும் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

தாத்தாவின் பிறந்தநாள்
என்னமோ ஏதோ, முத்துராமலிங்கம், ரங்கூன், இந்திரஜித் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2019 ல் தேவராட்டம் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தனது தாத்தா முத்துராமனின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்ஸ்டாகிராமில் உருக்கமாக கருத்து பதிவிட்டுள்ளார்.

கவுதமின் உருக்கமான பதிவு
அதில், நாங்கள் உங்களை பார்த்ததில்லை. ஆனால் உங்களுடன் வாழ்ந்தவர்கள் உங்களைப் பற்றி கூறுவதை கேட்கும் போது சந்தோஷமாக உள்ளது. ஒரு தன்மையான, அன்பான, கடின உழைப்பாளியான, அதீத திறமையுடைய, அர்ப்பணிப்பு உணர்வுடைய உங்களின் பேரன் என சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

நான் பெருமைப்பட வைப்பேன்
ஒருநாள் உங்களை பெருமைப்படுத்தும் வகையில் நான் நடந்து கொள்வேன் என நம்புகிறேன். ஹேப்பி பர்த் டே தாத்தா என குறிப்பிட்டுள்ளார். கவுதம் கார்த்திக்கின் இந்த பதிவை ஏராளமானோர் லைக் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











