ஏய் எப்புர்ரா... சிம்புவை வெட்கப்பட வைத்த கெளதம் கார்த்திக்... அந்த லண்டன் சம்பவம் தான் அல்டிமேட்!
சென்னை: சிம்பு நடித்துள்ள பத்து தல படத்தின் ஆடியோ லான்ச், ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (மார்ச் 18) மாலை நடைபெற்றது.
கிருஷ்ணா இயக்கியுள்ள பத்து தல படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கெளதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், பத்து தல இசை வெளியீட்டு விழாவில் பேசிய கெளதம் கார்த்திக், சிம்புவின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகித்தார்.
அதேபோல், கெளதம் கார்த்திக் நடிக்க வருவதற்கு முன்பு, லண்டனில் சிம்புவை சந்தித்த தருணம் குறித்து பேசியது வைரலாகி வருகிறது.

பத்து தல படத்தில் கெளதம் கார்த்திக்
சிம்புவின் பத்து தல திரைப்படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு இந்தப் படத்தின் ஆடியோ லான்ச், ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. சிம்பு, ஏஆர் ரஹ்மான், ப்ரியா பவானி சங்கர், கிருஷ்ணா உள்ளிட்ட பத்து தல படக்குழுவினர், பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

நன்றி கூறிய கெளதம்
பத்து தல படத்தில் சிம்பு ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்துள்ளார். கெளதம் கார்த்திக் போலீஸ் ஆபிஸராக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், பத்து தல இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கெளதம் கார்த்திக், இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசினார். முதலில் பத்து தல படத்தில் தன்னுடன் பணிபுரிந்த நடிகர்கள், கலைஞர்கள் இயக்குநர் கிருஷ்ணா, ஏஆர் ரஹ்மான் உள்ளிட்ட பலருக்கும் நன்றி கூறினார்.

அந்த லண்டன் சம்பவம்
தொடர்ந்து பேசிய கெளதம் கார்த்திக், "சிம்பு அண்ணாவை முதலில் சந்தித்தது லண்டனில் தான். 2013ல் லண்டனில் அண்ணனை மீட் பண்ண போது அவருக்கு என்னை யாரென தெரிந்திருக்க வாய்ப்பில்லை என நினைத்தேன். ஆனால், என்னைப் பார்த்ததும் நேராக என்னிடம் வந்து கைகுலுக்கி பேசினார். பின்னர் லண்டன் முழுவதையும் சுத்திக்காட்டி என்னை பாதுகாப்பாக பார்த்துக்கொண்டதோடு ஹோட்டல் ரூம் போய்சேர வரை செக்கப் செய்துகொண்டே இருந்தார். என்னையும் ஒரு ஆளா மதிச்சு அவ்ளோதூரம் கேர் பண்ணத நான் மறக்கவே மாட்டேன்" என உருக்கமாக பேசினார்.

எனது ஆன்மீக குரு சிம்பு
அதேபோல், "லண்டனில் மீட் பண்ண நேரம், உங்களது ஆன்மீகம் குறித்து நிறையவே சொன்னீங்க. அப்போ எனக்கு அதெல்லாம் புரியவே இல்லை. நீங்க இவ்ளோ மாறி இப்ப இப்படி வந்து நிற்கும் போதுதான் அது என்னன்னு தெரியுது. நீங்க உண்மையாவே வேற லெவல் தான் சிம்பு அண்ணா" என்றார். மேலும், "சிம்பு எனர்ஜி கிடைக்கும். அவரோட முடி, முகம், கழுத்து, கால், விரல் இப்படி எல்லாமே நடிக்கும்" என எமோஷனலாக பேசினார்.

ஏய் எப்புர்ரா மொமண்ட்
மேலும், "சிம்பு அண்ணாவின் நடிப்பை பார்த்து 'ஏய் எப்புர்ரா' இப்படிலாம் நடிக்கிறார்ன்னு நினைச்சு மிரண்டு போயிருக்கேன். அவர் சும்மா வந்து நின்னு அப்படி பார்த்தாலே போதும், அவர் என்ன மாதிரி நடிகர்ன்னு தெரியும். டைரக்டருக்கு என்ன வேண்டும்ன்னு சிம்பு அண்ணாவுக்கு நல்லாவே தெரியும். இந்த மாதிரி ஒரு ஆர்ட்டிஸ்ட் நான் பார்த்ததே இல்ல, நானும் இப்படி ஒரு நடிகனா ஆகணும்ன்னு ஆசையா இருக்கு" என்றார்.

மஞ்சிமா மோகன் லவ் ட்ராக்
இறுதியாக நிகழ்ச்சி தொகுப்பாளர் ரம்யா கெளதம் கார்த்தியிடம் மஞ்சிமா மோகன் குறித்து கேட்டார். அப்போது அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவும் மஞ்சிமாவும் ஜோடியாக நடித்தது பற்றியும், அதில், ஒருகாட்சியில் கடல் படத்தின் பாடல் வருவது குறித்தும் கேட்டார். அதற்கு பதிலளித்த கெளதம் கார்த்திக், "கண்டிப்பாக இது எல்லாமே ஒரு மேஜிக் தான். சிம்பு, ஏஆர் ரஹ்மான், மஞ்சிமா மோகன் இப்படி எல்லாமே எப்படியோ கனெக்ட் ஆகிவிட்டது" என்றார்.

கடல் படத்தின் முதல் பேட்டி
மேலும், "அதுமட்டும் இல்லை கடல் படத்துக்காக என்னை முதன்முதலாக நேர்காணல் செய்ததும் நீங்கள் தான்" என ரம்யாவுக்கே ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துவிட்டு மேடையைவிட்டு இறங்கினார். தனது நடிப்பு குறித்து கெளதம் கார்த்திக் பேசியதை கேட்ட சிம்பு ரொம்பவே வெட்கப்பட்டு சிரித்தார். சிம்புவின் இந்த ரியாக்ஷனை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











